தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் “விசில்” சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தவெக போட்டியிடும் 234 தொகுதிகளிலும் இந்த விசில் சின்னம் ஒரு பொதுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய், தமது தமிழக வெற்றிக் கழகம் சார்பில், எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்திடம் விசில், ஆட்டோ, கிரிக்கெட் பேட் உள்ளிட்ட சின்னங்களை ஒதுக்குமாறு விண்ணப்பித்திருந்தார்.
ஒரு கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு பரிச்சயமான அதேசமயம் மக்களிடம் எளிதாக சென்றடையும் வகையில் ஒரு சின்னம் வேண்டும். அந்த வகையில், விஜய் ஆரம்பத்திலிருந்தே விசில் சின்னம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று தனது சகாக்கள் மற்றும் நண்பர்களிடம் தொடர்ந்து ஆலோசித்து வந்திருக்கிறார்.
இதற்கு அவர்களும், ரொம்பவே நல்லா ரீச் ஆகும்,, பஞ்ச் டயலாக்குடன் விசில் அடிச்சா தூள் பறக்கும் என விஜய்யை உற்சாகப்படுத்தியிருக்கின்றனர்.
இன்னொரு பக்கம் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “விசில் சின்னம்தானே, டெல்லியில எலக்ஷன் கமிஷனில் நமக்கு ஆட்கள் இருக்காங்களே.. ஈசியாகவே வாங்கிடலாம்”னு விஜய்க்கு ரொம்பவே நம்பிக்கை கொடுத்திருக்கிறாரு.
அதன்படியே கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் தவெகவுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது.
இதைத்தொடர்ந்து தான் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், அருமையான சின்னம் நமக்கு கிடைச்சிருக்கு.. இப்பவே சொல்லமாட்டோம்.. உத்தரவு வந்த பின்னர் சொல்லுவோம் என்று பேசி வந்தனர்.
இந்தசூழலில் தான் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படும் என்பதை நமது மின்னம்பலத்தில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்தே சொல்லி வந்தோம்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, “‘காதுகள் ஜாக்கிரதை’.. விஜய் களமிறக்கப் போகும் ‘அந்த’ சின்னம் எது தெரியுமா? என்ற தலைப்பிலும், கடந்த டிசம்பர் 25ஆம் தேதி, விஜய்க்கு கிடைத்த ‘சின்னம்’- குஷியில் தவெக! என்ற தலைப்பிலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.
நாம் சொன்னது, இன்று உறுதியாகியுள்ளது.
கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே பொதுவான சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு தவெகவிற்கு கிடைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ‘விசில்’ போன்ற ஒரு எளிமையான, அதே சமயம் பரவலாக அறியப்பட்ட ஒரு சின்னம், பிரச்சாரத்திற்கு எளிதாகவும், வாக்காளர்களின் மனதில் விரைவாகப் பதியவும் உதவும் என்று தவெகவினர் குஷியாக உள்ளனர்.
பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
விசில் சின்னம் கிடைத்தது குறித்து தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கூறுகையில், “சின்னம் கேட்ட விண்ணப்ப படிவித்தில் 10 சின்னங்களை பரிந்துரைத்திருந்தோம். முதல் சின்னமாக விசில் சின்னத்தை தலைவர் விஜய் கேட்டிருந்தார். எங்கள் தலைவருக்கு பிடித்த விசில் சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது எங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம்” என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில், ‘தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சமூக வலைத்தளங்கள் தொடங்கி சுவர் விளம்பரங்கள் வரை நம் வெற்றிச் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் பணிகளை இன்றிலிருந்து முன்னெடுக்க வேண்டும். இந்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியுள்ள அதிகாரப்பூர்வ விசில் சின்னத்தின் அதே வடிவத்தை மட்டும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்று போல் பயன்படுத்த வேண்டும். மாற்றத்திற்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும். அந்த ஒலியில் மக்களுக்கான நம் புதிய அரசு பிறக்கட்டும்.’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தவெகவினர் தற்போது , WhistlePodu ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படத்தில், ‘பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா’ பாடலில், ‘ சத்தம் பத்தாது விசில் போடு’ என்ற வரியை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
திரைப் பிரபலங்களின் அரசியல் வருகைக்குப் பழகிய தமிழகத்தில், விஜய்யின் தவெக மற்றும் அதன் ‘விசில்’ சின்னம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஏற்கனவே, இந்தியாவின் முக்கிய கட்சியான ஆம் ஆத்மி தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக விசில் சின்னைத்தை பயன்படுத்தியிருக்கிறது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜெய்பிரகாஷ் நாராயன் 2009ல் தொடங்கிய லோக் சக்தா கட்சியும் விசில் சின்னங்களை பயன்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
