தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது. முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் ஒரு கட்சி போட்டியிடுகிறது என்றால் அதற்கு சின்னம் என்பது மிகவும் முக்கியம். மக்களை எளிதில் கவரும் வகையில் அந்த சின்னம் இருக்க வேண்டும்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பொது சின்னமாக ஆட்டோ, விசில் ஆகியவற்றை கேட்டுபெற தனது கட்சியினருடன் ஆலோசித்து வந்தார். குறிப்பாக விசில் சின்னம் கிடைத்தால் அதை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்த்துவிடலாம் என்பது விஜய்யின் எண்ணம்.
அதன்படியே தவெக தேர்தல் ஆணையத்திடம் விசில் உள்ளிட்ட சில சின்னங்களின் பெயரை சொல்லி அவற்றில் ஒன்றை ஒதுக்குமாறு கேட்டிருந்தது.
இந்தசூழலில் தவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்துள்ளது. இதை தேர்தல் ஆணையம் இன்று (ஜனவரி 22) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தவெகவுக்கு விஜய் கேட்ட மாதிரியே ‘விசில்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் அலாட்செஞ்சிருச்சு’னு நமது மின்னம்பலத்தில், ‘விஜய்க்கு கிடைத்த ‘சின்னம்’- குஷியில் தவெக!’ என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் கடந்த டிசம்பர் 25ஆம் தேதியே தெரிவித்திருந்தோம்.
இது, இன்று உறுதியாகியுள்ளது. அதன்படி வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறது தவெக. தாங்கள் கேட்ட சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதால் தவெகவினர் குஷியில் உள்ளனர்.
அதுபோன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ’பேட்டரி டார்ச்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
