ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏற்கெனவே கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் மற்றொரு அணி யார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த தொடரில் முதன்முறையாக களமிறங்கிய நேபாளம் அணியுடன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் என மொத்தம் 6 அணிகள் மோதின.
குரூப் சுற்று முடிவில் இரு பிரிவுகளிலும் கடைசி இடத்தை பிடித்த நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
அதனைத்தொடர்ந்து கடந்த 6ஆம் தேதியில் இருந்து சூப்பர் 4 சுற்று தொடங்கியது. இதுவரை அனைத்து அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடி உள்ளன.
அதில் தன்னுடன் மோதிய பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை எளிதாக வீழ்த்திய இந்தியா, முதல் அணியாக ஆசியக்கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியுள்ளது.
அதேவேளையில் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்த வங்காளதேச அணி, அதிகாரபூர்வமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள், சூப்பர் 4 சுற்றில் ஏற்கனவே தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன.
இந்த நிலையில், இரு அணிகளும் நாளை கொழும்பு மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். எனவே இரு அணிகளும் ‘வாழ்வா? சாவா?’ எனும் பெரும் நெருக்கடிக்கு இடையே நாளை களமிறங்க உள்ளன.
இரு அணிகளும் சமபலத்துடன் இருக்கும் நிலையில், சொந்த ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது இலங்கை அணிக்கு பலமாக கருதப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!
டிரெண்டாகும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமண புகைப்படங்கள்!