கடந்த 2 ஆண்டுகளில் 118 புதிய மெடிக்கல் காலேஜ்: உ.பி-க்கு வாரி வழங்கிய மத்திய அரசு… தமிழகத்தின் நிலை என்ன?

Published On:

| By Santhosh Raj Saravanan

Which state has the most medical colleges in India?

புதுடெல்லி:

இந்தியாவில் மருத்துவக் கனவோடு காத்திருக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கியத் தரவை வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் புதிதாக 118 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் அதிகப்படியான கல்லூரிகளைப் பெற்று உத்தரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ADVERTISEMENT

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.

அதில் உள்ள முக்கியத் தகவல்கள் இதோ:

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்திற்கே முதலிடம்:

பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருவது இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகிறது.

ADVERTISEMENT

கடந்த 2022-23, 2023-24 ஆகிய நிதியாண்டுகளில், உத்தரப் பிரதேசத்தில் மட்டும் புதிதாக 26 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கு அடுத்தபடியாகத் தெலுங்கானாவில் 17 கல்லூரிகளும், மகாராஷ்டிராவில் 13 கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

ஆந்திரப் பிரதேசத்திற்கு 12 கல்லூரிகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தின் நிலை என்ன?

மருத்துவத்தின் தலைநகரம்” என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டிற்கு, இந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் புதிதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கை எட்டிவிட்டோம். 2021-22 காலகட்டத்தில் தமிழகத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதன் பிறகு, புதிய கல்லூரிகளுக்கானத் தேவை குறைந்ததாலும், மத்திய அரசின் கவனம் வட மாநிலங்கள் மற்றும் பின்தங்கிய மாவட்டங்கள் பக்கம் திரும்பியதாலும் தமிழகத்திற்குப் புதிய ஒதுக்கீடுகள் இல்லை என்று கூறப்படுகிறது.

எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு:

புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டதன் மூலம், மருத்துவ இடங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

2022-23ல் 8,195 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரித்தன.

2023-24ல் 10,147 இடங்கள் அதிகரித்தன.

ஆக மொத்தம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 18,342 புதிய எம்பிபிஎஸ் சீட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் விளக்கம்:

“நாடு முழுவதும் மருத்துவர்களின் பற்றாக்குறையைப் போக்கவும், எம்பிபிஎஸ் சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பின்தங்கிய மாவட்டங்களில் (Aspirational Districts) மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுவரை 157 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், பெரும்பாலான கல்லூரிகள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டன,” என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

எண்ணிக்கை அதிகரிப்பது மகிழ்ச்சிக்குரியது என்றாலும், அதற்கேற்ற பேராசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் புதிய கல்லூரிகளில் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share