தமிழக சட்டமன்ற தேர்தலை தயாராகும் விதமாக அதிமுக மாவட்டந்தோறும் கள ஆய்வுக் குழு ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் திருச்சி சோமரசம் பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் தலைமையில் கள ஆய்வுக் குழு ஆலோசனை கூட்டம் இன்று (நவம்பர் 19) நடைபெற்றது.
அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடி வேதனையில் இருக்கிறார். யார் இப்போதெல்லாம் சும்மா வருகிறார்கள்? கூட்டணிக்கு வருபவர்கள் எல்லாம் ’20 சீட் கொடுங்க, ரூ.50 கோடி தாங்க, ரூ.100 கோடி தாங்க’ என கேட்கின்றனர். ஏதோ நெல், அரிசி விற்பது மாதிரி பேசுகிறார்கள்.
அவர்களிடம் கொஞ்சம் குறைச்சிக்கலாமே என்று கேட்டால், ‘இதை வைத்து தான் நாங்க பிசினஸ் செய்கிறோம்’ என்கிறார்கள். இந்த கொடுமையில் தான் எடப்பாடி மாட்டியுள்ளார்” என அவர் பேசியிருந்தார்.
இதனையடுத்து அதிமுக கூட்டணியில் சேர்வதற்கு நூறு கோடி கேட்டது எந்த கட்சி என்று கேள்வி எழுந்தது.
இதுதொடர்பாக கூட்டத்திற்கு பின்னர் வெளியே வந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “பேசும்போது சொல்லிட்டேன். எல்லா கட்சியும் கேப்பாங்கனு தான் சொல்லிருக்கேன்” என பதற்றத்துடன் பதில் அளித்தபடி அங்கிருந்து வெளியேறினார்.
முன்னதாக “கூட்டணி தொடர்பாக நீங்கள் எதுவும் பேட்டிக் கொடுக்க வேண்டாம். நீங்கள் யாரையாவது திட்டிவிட்டு வந்து விடுவீர்கள். அவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்” என திண்டுக்கல் சீனிவாசனிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’2026 தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா சாவா போன்றது’ : கே.பி. முனுசாமி
”அதிமுக கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்கிறார்கள்” : திண்டுக்கல் சீனிவாசன் பளீர்