41 பேர் பலியான கரூர் துயரம் தொடர்பான வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை (அக்டோபர் 27) விசாரணை நடைபெற உள்ளது.
நடிகர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். நாடு முழுவதும் இந்த துயரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரோடு ஷோ உள்ளிட்டவைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை விதிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதேபோல கரூர் துயரம் தொடர்பான வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை நீதிபதி ஜோதிராமன் டிஸ்மிஸ் செய்தார். இதனையடுத்து புஸ்ஸி ஆனந்த், முன்ஜாமீன் கோரி 2-வது முறையாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் GEN-Z புரட்சி ஏற்பட வேண்டும் என தவெகவின் மற்றொரு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பாக அவர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜூனா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மேலும் கரூர் ஆட்சியர், கரூர் எஸ்பி உள்ளிட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி கே.ராஜன் என்பவர் தாக்கல் செய்த ரிட் மனுவும் மதுரை கிளையில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது
கரூர் துயரம் தொடர்பான இந்த வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நாளை (அக்டோபர் 27) விசாரிக்கிறது.
