வைஃபை ஆன் செய்ததும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் பற்றிய வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது
”இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா நடந்தது. இதில் பேசிய கமல்ஹாசன், ‘தற்போது நம்மை சுற்றி நிலவும் சூழல் மிக நன்றாக உள்ளது. விரைவில் நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் மக்கள் நீதி மையத்தின் குரலாக ஒலிக்க இருக்கிறது. அதற்கான சூழல் நிலவுகிறது’ என்று குறிப்பிட்டார்.
இன்று காலை சென்னை எழும்பூரில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனையில் காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீர் தயாரிக்கும் இயந்திரத்தை பிறந்தநாள் அன்பளிப்பாக அளித்தார் கமல்ஹாசன்.
அந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.. அப்போது திமுகவினருடன் கமல் எவ்வளவு இணக்கமாக இருக்கிறார் என்பது தெரிந்தது.
இதை அடிப்படையாக வைத்து தான் நம்மைச் சுற்றி நல்ல சூழல் நிலவுகிறது என்று மாலை நடந்த தனது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசினார் கமல்ஹாசன். ஏற்கனவே கமல்ஹாசன் கோவை மக்களவைத் தொகுதியை குறி வைத்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, ’மூக்குடைந்தாலும் மீண்டும் நான் இங்கேதான் வருவேன்’ என்று தெரிவித்தார் கமல். நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் என்றால் அது கமல்ஹாசனின் குரலாக தான் இருக்கும் என்பது அந்தக் கட்சியினரின் நம்பிக்கை.
அப்படி என்றால் கமல்ஹாசன் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடப் போகிறாரா என்ற கேள்வி திமுக கூட்டணியில் முன்பே எழுந்தது. தற்போது கோவை மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வசம் இருக்கிறது.
கோவை தங்களின் கோட்டை என்று கூறிவரும் தோழர்கள் வருகிற 2024 மக்களவைத் தேர்தலிலும் கோவை மக்களவை தொகுதியை கேட்டு பெறுவதில் உறுதியாக இருக்கிறார்கள். இதனால் கோவை தொகுதியை கமல்ஹாசன் இடம் கொடுப்பதில்
கூட்டணி ரீதியாக திமுக தலைமைக்கு சில பிரச்சனைகள் இப்போதே தெரிகின்றன.
இதை சமாளிப்பதற்காக திமுக இன்னொரு யோசனையை கமல்ஹாசனிடம் முன் வைத்துள்ளது. அதாவது தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஏற்கனவே தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுவதை விரும்புகின்றன. எனவே அவற்றில் இருந்து ஒன்றை எடுத்து தருவதில் சிக்கல்கள் உள்ளன. அதனால் இன்னொரு தொகுதியில் கமல் போட்டியிடலாம்.
பெரம்பலூர் தொகுதியில் ஏற்கனவே ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் சில மாதங்களிலேயே பாஜக ஆதரவு போக்கில் திரும்பிவிட்டார். மீண்டும் அவர் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் நிற்க வாய்ப்பு இல்லை. எனவே பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசனை நிற்க திமுக தலைமை யோசனை தெரிவித்துள்ளது.
இன்ன தொகுதியில் இன்ன பெல்ட்டில் நின்றால்தான் வெற்றி என்ற ஒரு வட்டத்துக்குள் கமல்ஹாசனை சிக்க வைக்க முடியாது. மேலும் திமுக கூட்டணியில் தான் பெரம்பலூர் தொகுதியில் நிற்கப் போகிறார். ஏற்கனவே பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இருந்து போட்டியிட்ட நடிகர் நெப்போலியன் வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். எனவே பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டால் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமையும் பட்சத்தில் மத்திய அமைச்சராக கூட வாய்ப்புள்ளது என்றெல்லாம் சொல்லி கமல்ஹாசனை பெரம்பலூர் தொகுதியில் நிற்குமாறு திமுக தரப்பு வலியுறுத்த தொடங்கியுள்ளது.
இதே நேரம் கமல்ஹாசனை திருச்சியில் வந்து போட்டியிடுமாறும் அங்குள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வெளிப்படையாக வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் கமல் இருப்பது உறுதி… அவர் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது போகப் போகத்தான் தெளிவாகும்” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சத்தீஸ்கர், மிசோரம் தேர்தல்: வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு?
சனாதன விவகாரத்தில் உள்நோக்கத்துடன் வழக்கு: சேகர்பாபு வாதம்!