மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுகவின் பி.வில்சன் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.
மாநிலங்களவையில் பி. வில்சன் பேச்சின் முக்கிய அம்சங்கள்:
- இதர பிற்படுத்தப்பட்டோர் – ஓபிசி வகுப்பினருக்கான பொருளாதார அளவு கோல்- கிரீமிலேயரைத் தீர்மானிப்பதற்கான வருமான உச்சவரம்பு ஆண்டுக்கு 8 இலட்சம் என்கிற அளவிலேயே இருக்கிறது.
- 2017 ஆம் ஆண்டில் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.3,000 ஆக இருந்தபோது இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
- தங்கத்தின் இன்றைய மதிப்பு, ஒரு கிராமுக்கு ரூ.12,000 எனும் அளவில் 400% அதிகரித்துள்ளது.
- கிரீமிலேயர் உச்சவரம்பானது ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
- 2 முறை செய்யப்பட வேண்டிய கிரீமிலேயர் திருத்தங்கள் செய்யப்படாமல் தாமதப்படுத்தப்பட்டுவிட்டது.
- ஓபிசி ஆணையமானது இந்த உச்சவரம்பை உயர்த்திட பரிந்துரைத்தது; மத்திய அரசோ ஏற்கவில்லை.
- ஒரு விண்ணப்பதாரரின் குடும்ப வருமானத்தைக் கணக்கிடும் போது, ஊதியத்தையும் சேர்த்துக் கணக்கிடும் நடைமுறை பாகுபாடானதாகும்.
- -இதனால் UPSC தேர்வுகள் மூலம் நடைபெறும் நியமனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை பெற முயற்சிக்கும் விண்ணப்பதாரர்கள் பாதிப்படைகின்றனர்.
- கிரீமிலேயர் முறை சீரமைப்பதற்கான நாடாளுமன்றக்குழுவானது, 2019 ஆம் ஆண்டு அளித்த அறிக்கையில் இந்த நடைமுறையை கடுமையாக கண்டித்ததுடன், உடனடியாக அதை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
- 8 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாத இந்த வரம்பு மற்றும் சட்டவிரோத நடைமுறையினால் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள OBC பேராசிரியர் பணியிடங்களில் சுமார் 80% காலியாகவே உள்ளது.
- மத்திய பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்ட 2537 பேராசிரியர் பணியிடங்களில், 423 பணியிடங்கள் (16.67%) மட்டுமே OBC சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஓபிசிக்கான 27% இடஒதுக்கீடு எங்கே போனது?
- 21 IIT, 13 IIM-களில் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்களின் படி, 21 IIT களில், வெறும் 11.2% பேராசிரியர்கள் மட்டுமே ஓபிசி சமூகத்தைச் சார்ந்தவர்கள்.
- 13 IIM-களில், இந்த விகிதம் இன்னும் குறைவாக இருக்கிறது. 9.6% பேராசிரியர்கள் ஓபிசி வகுப்பைச் சார்ந்தவர்களாகவும், 5% பேர் எஸ்.சி வகுப்பைச் சார்ந்தவர்களாகவும், 1% பேர் எஸ்.டி வகுப்பைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
- 2 IIT-களிலும் 3 IIM-களிலும், பேராசிரியர் பணியிடங்களில் 90%-க்கும் அதிகமானவை பொதுப் பிரிவினர் வசமே உள்ளது.
- 8 IIT க்கள் மற்றும் 7 IIM களில் 80% அதிகமான பேராசியர்கள் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.
- குரூப் A அதிகாரிகளில் 18.07% மட்டுமே OBC வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
- மத்திய அரசின் 90 உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளில், OBC சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 3 பேர் மட்டுமே.
- மத்திய அரசின் அமைச்சகங்களில் பணியாற்றும் 322 அதிகாரிகளில், 16 பேர் எஸ்.சி வகுப்பையும்,, 13 பேர் எஸ்.டி வகுப்பையும், 39 பேர் ஓபிசி வகுப்பையும் சார்ந்தவர்கள்.. மாறாக 254 பேர் உயர் சாதியினரைச் சேர்ந்தவர்கள்.
- 2014 முதல் ஒவ்வொரு விஷயத்திற்கும் கால நீட்டிப்பு செய்யப்படுவதைத் தவிர SC/ST/OBC சமூகத்தின் நலன்களுக்காக எந்தவொரு சட்டமும் இயற்றப்படவில்லை. இவ்வாறு பி.வில்சன் பேசினார்.

