விஜயதரணி எங்கே?

Published On:

| By Kavi

where is congress mla vijayadharani

விஜயதரணி எம்.எல்.ஏ காங்கிரஸில் இருந்து பாஜகவுக்குச் செல்வதாகக் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகிறது.

பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த தகவல் காங்கிரஸ் கட்சி மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நாம், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ விஜயதரணியை மின்னம்பலம் சார்பில் தொடர்புகொண்டு பேசினோம்.

‘பாஜகவுக்கு போவது பற்றி தொடர்ந்து செய்திகள் வருகிறது, அதற்கு நீங்களும் மறுப்பு சொல்லாமல் மௌனம் காத்துவருவது, மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று சொல்லலாமா?’ என்ற கேள்விக்கு…

“நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்று கூறினார்.

இதுகுறித்து மின்னம்பலத்தில் பாஜகவுக்குப் போகும் காங்கிரஸ் எம்எல்ஏ : காரணம் என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், காங்கிரஸ் சக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணியைத் தொடர்பு கொண்டு பேச முயன்றிருக்கின்றனர்.

ஆனால் அவரது தொலைபேசி எண்,  “தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறது” என பதில் கிடைத்துள்ளது.

ஒருசிலர் தொடர்பு கொண்டபோது நீண்ட நேரம் ரிங் போயும், போன் எடுக்காமல் கட் ஆகியுள்ளது.

“ஒரு சில அழைப்புகளை மட்டும் அவரது ஓட்டுநர் எடுத்துப் பேசிவிட்டு, விஜயதரணியிடம் கொடுக்கிறார்” என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில்.

இதுதொடர்பாக  குமரி காங்கிரஸ் வட்டாரத்தில் நாம் விசாரித்த போது,

“கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே விஜயதரணிக்கு மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ. சீட் கொடுக்கப்பட்டது. இப்போதும் விஜயதரணி எம்பி தேர்தல் சீட் கேட்கிறார்.

ஆனால் டெல்லி தலைமையோ சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் யாரும் எம்பி சீட் கேட்கக் கூடாது, இடைத் தேர்தல் வருவதை காங்கிரஸ் தலைமையோ, கூட்டணிக் கட்சியான திமுக தலைமையோ விரும்பவில்லை என்று அறிவுறுத்தியுள்ளது. அதனால் விஜயதரணி அதிருப்தியில் இருக்கிறார். சட்டமன்றக் கூட்டத்துக்கும் வராமல் டெல்லியில் இருக்கிறார். 19 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்துக்கு வருவார் என்று சொல்கிறார்கள்.

இந்த நிலையில் விஜயதரணியின் ஃபேஸ்புக் பக்கத்தில், அவர்  உண்ணாமலை கடை பேரூராட்சியில்  நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக நேற்று மாலை ஒரு போட்டோ வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து  பத்திரிகையாளர்கள் விஜயதரணியின் பி.ஏ.வை  தொடர்புகொண்டு கேட்க,  ‘பழைய செய்திங்க… எம்.எல்.ஏ.வ காணலைனு மீடியா பூரா பேசறதால நான் தான் அதை போட்டுவிட்டேன்’ என்று கூலாக சொல்லியிருக்கிறார்.  இப்படித்தான் இருக்கிறது அவரது நடவடிக்கைகள்” என்கிறார்கள் லோக்கல் காங்கிரஸ் காரர்களே.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

Video: ஜெயம் ரவியின் ‘சைரன்’ எப்படி இருக்கிறது? – ரசிகர்கள் விமர்சனம்!

காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம்: அஜய் மக்கான் புகார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share