பெண் காவலர்களை தவறாகப் பேசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்து வருகிறார். தற்போது அவரது வழக்கில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, அவர் எப்போது விடுதலை ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த தகவல்களை பார்ப்போம்.
ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மற்றும் சவுக்கு சங்கர் இருவரும் இணைந்து மேற்கொண்ட உரையாடலில் பெண் காவலர்கள் குறித்து தவறாகப் பேசியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் மே 4 ஆம் தேதியன்று தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் ரெட்பிக்ஸ் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பதியப்பட்ட வழக்குகள்
சவுக்கு சங்கர் மீது ஆபாசமாக பேசுதல், பெண்கள் மீது அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சவுக்கு சங்கரின் காரை சோதனை செய்த போது அதில் 409 கிராம் அளவிற்கு கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சவுக்கு சங்கர் சிறைக்கு அனுப்பப்பட்டதற்குப் பிறகு, பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது அளித்த புகாரிலும் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. கோலமாவு சந்தியா என்ற பெயரில் இணையதளத்தில் தன்னைக் குறிவைத்து இழிவாக சவுக்கு சங்கர் எழுதியதாகவும், மேலும் தவறான மற்றும் ஆபாச கதைகளுடன் வீடியோக்களை வெளியிடுவேன் என்று சவுக்கு சங்கர் மிரட்டியதாகவும் சந்தியா ரவிசங்கர் புகார் தெரிவித்திருந்தார்.
மேலும் காவலர்களைப் பற்றி இழிவாகப் பேசியதாக தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கிலும் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
சிறையில் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சிறையில் வைத்து தான் தாக்கப்பட்டதாகவும், காவலர்கள் தனது கையை உடைத்ததாகவும் தெரிவித்தார். மேலும் கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அங்கிருந்து தன்னை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார் சவுக்கு சங்கர்.
இதற்கு விளக்கமளித்த சிறைத்துறை ஏடிஜிபி மகேஷ் தயாள் சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை; சிறையில் எந்த கைதியும் தாக்கப்படுவதில்லை என்று தெரிவித்தார். மேலும் சவுக்கு சங்கரை அழைத்துச் சென்ற காவல்துறையின் வாகனம் விபத்துக்குள்ளானதாகவும், அதில்தான் சவுக்கு சங்கருக்கு காயம் ஏற்பட்டது என்றும் காவலர்கள் சிலருக்கும் இந்த விபத்தில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் அதற்கான காட்சிகளையும் காவல்துறை வெளியிட்டது.
குண்டர் சட்டம்-ஆட்கொணர்வு மனு
மொத்தமாக சவுக்கு சங்கர் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் மே 12 ஆம் தேதியன்று அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
பெண் காவலர்களை தவறாகப் பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்ற போது பெண் போலீசாரின் பாதுகாப்புடனேயே அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த ரெட்பிக்ஸ் சேனல் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டும் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
இரு மாறுபட்ட தீர்ப்பு
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இரண்டு வேறுபட்ட உத்தரவுகளை வழங்கினர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால் நீதிபதி பாலாஜி குண்டர் சட்டத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டார். இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் இந்த மனு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை வந்தது.
நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு
ஜூன் 6 ஆம் தேதியன்று காவல்துறை தரப்பில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமென்று நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். அரசு வழக்கறிஞர் ரவீந்திரன் இந்த வழக்கு தொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை பரிசீலித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ”நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குண்டர் சட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவைக் காட்டிலும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் நிறைய ஆதாரங்கள் உள்ளது. எனவே இந்த சூழலில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை உறுதி செய்ய முடியுமா” என்று கேள்வி எழுப்பியதுடன், காவல்துறைக்கு பதில் அளிக்க போதுமான கால அவகாசம் வழங்காமல் ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு பிறக்கப்பிட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் ”அதிகாரம் மிக்க நபர்கள் தன்னை அணுகி சவுக்கு சங்கர் வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கிறேன் என்று ஜி.ஆர்.சுவாமிநாதன் சொல்லியிருக்கிறார், அப்படி இருந்தால் அவர் இந்த வழக்கிலிருந்து விலகியிருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு ஜூன் 12 அன்று விசாரணைக்கு வந்தது.
டிவிஷன் பெஞ்ச் விசாரணையில் நடந்தது என்ன?
அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி குண்டர் சட்ட வழக்குகளை விசாரிக்கும் அறிவுரைக் குழுமம் இந்த வழக்கில் தனது கருத்தைத் தெரிவிப்பதற்கு முன்னரேயே, இந்த ஆட்கொணர்வு வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும், அதனால் இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் ஏற்கெனவே நிலுவையில் உள்ள ஆட்கொணர்வு மனுக்களின் விசாரணைக்குப் பிறகே வரிசைப்படியே இந்த மனுவை எடுக்க வேண்டும் என்றும் வாதிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என்றும், வழக்கமான நடைமுறையின்படி வரிசையாகத் தான் விசாரிக்க முடியும் என்றும், ஏற்கனவே இதுபோன்ற தடுப்புக் காவல் சட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் நிலுவையில் உள்ளன, அவையெல்லாம் விசாரிக்கப்பட்ட பிறகு வரிசைப்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துவிட்டனர்.
சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜான் சத்யன், சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டிருக்கிறார் என்று குறிப்பிட்டதுடன், மருத்துவ சிகிச்சைக்காக அவரை தற்காலிகமாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு தற்காலிக விடுதலை வேண்டுமென்றால், குண்டர் சட்டத்தின் பிரிவு 15-ன் அடிப்படையில் அவரை விடுதலை செய்யக் கோரி மாநில அரசிடம் கோரிக்கை வைக்கலாம் என்று தெரிவித்து விட்டனர். அப்படி சவுக்கு சங்கர் தரப்பில் மனு அளிக்கப்பட்டால் அதனை தகுதி அடிப்படையிலும் சட்டத்திற்கு உட்பட்டும் 8 வார காலத்திற்குள் பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கும் தெரிவித்தனர்.
வழக்கு எப்போது விசாரணைக்கு வரும்?
சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பரில் பதியப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களின் விசாரணையே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட சவுக்கு சங்கரின் தாயாரின் மனு விசாரணைக்கு வருவதற்கு இன்னும் 4 மாதங்களாவது ஆகும் என்றே தெரிகிறது. இதற்கிடையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்குகளில் குண்டர் சட்டத்திற்கான அறிவுரைக் குழுமம் அந்த வழக்கின் மீதான விசாரணையை மேற்கொள்ளும். 7 வார காலத்திற்குள் அறிவுரைக் குழுமம் குண்டர் சட்டத்தை ரத்து செய்யலாமா வேண்டாமா என்ற தனது பரிந்துரையை அளிக்கும். அறிவுரைக் குழுமம் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய பரிந்துரைத்தால் மட்டுமே சவுக்கு சங்கர் குறைந்த காலத்தில் விடுதலையாவதற்கான வாய்ப்பு இருக்கும். இதைத்தாண்டி உச்சநீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கர் தரப்பில் செல்ல இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் அவருக்கான நிவாரணம் கிடைக்காவிட்டால், இன்னும் 4 மாதங்களுக்காவது சவுக்கு சங்கர் விடுதலையாக வாய்ப்பில்லை என்பதே தற்போதைய நிலையாக இருக்கிறது.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு!
ஆணவக் குற்றங்களைத் தடுப்பது எப்படி?
சாதி மறுப்பு திருமணம்: சிபிஎம் அலுவலகம் சூறை… தலைவர்கள் கண்டனம்!