நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் வரும் 19ஆம் தேதி முதல் சென்னை அறிவாலயத்தில் அதற்கான விண்ணப்பப் படிவங்கள் பெற்றுக்கொள்ளலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையில் ஆளும் திமுக மற்ற கட்சிகளை விட தேர்தல் முன்னெடுப்புகளில் வேகம் காட்டி வருகிறது. ஏற்கெனவே கூட்டணிக்கட்சியினருடன் பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிக்க மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் என வேகமாக செயல்பட்டு வருகிறது.
விரைவில் எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்த அடுத்தகட்ட நடவடிக்கையும் விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் இருந்து விருப்பமனுக்களை தாக்கல் செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை வரும் பிப்ரவரி 19 முதல் கட்சி தலைமையிடமான அறிவாலயத்தில் ரூ. 2,000 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (பிப்ரவரி 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 19-2-2024 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.
போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, 1-3-2024 முதல் 7-3-2024 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொது தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்டணமாக ரூபாய் 50 ஆயிரமும், தனி தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் ரூபாய் 20 ஆயிரமும் கட்டணம் செலுத்த வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தேர்தல் பத்திரம்: எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த 6 உத்தரவுகள்!
‘SK 23’ படப்பிடிப்பில் அவசரமாக இணைந்த சிவகார்த்திகேயன்… பின்னணி இதுதான்!