தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. When is southwest monsoon
இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி தெற்கு அந்தமான் கடல் நிகோபார் தீவு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் தென்மேற்கு பருவமழை கடந்த மே 14ஆம் தேதி தொடங்கியது.
இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் பருவமழை எப்போது தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
அதில், “தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.
மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு கர்நாடக உட்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ஆம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும்” என்று தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு படி மே 24 அல்லது 25ஆம் தேதிகளில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
அதுபோன்று இன்று (மே 20) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. When is southwest monsoon