பியூட்டி டிப்ஸ்: சருமத்தைப் பளிச்சிடவைக்க… கோதுமை மாவு ஃபேஸ் பேக்!

Published On:

| By christopher

Wheat flour face pack for glowing skin

“வகை வகையான உணவுகள் தயாரிப்பதற்கு மட்டுமல்ல, நம்முடைய சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கோதுமை மாவு மிகவும் உதவியாக இருக்கும்” என்கிறார்கள் பிரபல பியூட்டி தெரபிஸ்ட்ஸ்.

“நம்முடைய சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுவதோடு, சருமத்தின் பொலிவையும் தன்மையையும் மேம்படுத்தும் திறன் கோதுமை மாவுக்கு உண்டு.

நம் முகத்தில் சில சமயங்களில் பிக்மென்ட்ஸ் (Pigments) எனும் கருந்திட்டுக்கள் அதிகமாக வரும். அவற்றைக் குறைக்கும் ஆற்றல் கோதுமை மாவுக்கு உண்டு.

குறிப்பாக, ஒரு ஆன்ட்டி ஏஜிங்காக (Anti aging agent) இது செயல்படுவதோடு மட்டுமல்லாமல், சருமத்திற்கு ஒருவித பளபளப்பையும் கொடுக்கும். கோதுமை மாவுடன் சில இயற்கைப் பொருட்களைச் சேர்க்கும்போது, அதன் ஆரோக்கியப் பலன்கள் இன்னும் அதிகமாகும்’’ என்கிற அழகுக்கலை நிபுணர்கள், கோதுமை மாவை வைத்து வீட்டிலேயே எளிமையாக ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறையைப் பகிர்கிறார்கள்.

ஃபேஸ் பேக்கை போடுவதற்கு முன்பு, முகத்தை க்ளென்ஸ் (Cleanse) செய்ய வேண்டும். பால் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகிய இரண்டும் முகத்தை கிளென்ஸ் செய்ய உதவும் அற்புதமான பொருட்கள். எனவே, இது இரண்டையும் கலந்து முகத்தை க்ளென்ஸ் செய்யவும்.

நான்கைந்து டீஸ்பூன் காய்ச்சாத பச்சைப் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். கலர் சேர்க்கப்படாத ரோஸ் வாட்டரை நான்கைந்து டீஸ்பூன் எடுத்து, பாலுடன் கலந்துகொள்ளுங்கள். இரண்டு பஞ்சு உருண்டைகளை ரோஸ் வாட்டர் கலவையில் நன்கு முக்கி எடுத்து, லேசாகப் பிழிந்துகொள்ளுங்கள். இதை வைத்து முகத்தைத் துடைத்திடுங்கள்.

சருமத் துளைகளுக்குள் அடைபட்டிருக்கும் வியர்வை, எண்ணெய் போன்ற அனைத்தும் இதன் மூலம் வெளியேறிவிடும். அதுமட்டுமல்லாமல், முகத்திற்கு ஒருவித குளிர்ச்சியான உணர்வு கிடைக்கும்.

அடுத்ததாக, முகம் மற்றும் கழுத்தில் போடுவதற்கு கோதுமை மாவு ஃபேஸ் பேக்கைத் தயாரிக்கலாம். நான்கைந்து டீஸ்பூன் கோதுமை மாவை ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு டீஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் இரண்டு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்குங்கள். தேவையெனில் இன்னும் கொஞ்சம் ரோஸ் வாட்டர் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது ஃபேஸ் பேக் ரெடி.

கலந்துவைத்த ஃபேஸ் பேக்கை, பிரஷ் மூலம் எடுத்து, கீழிருந்து மேலாக முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்யுங்கள். கோதுமை மாவு என்பதால் இந்தக் கலவை கொஞ்சம் திக்காகத்தான் (Thick) இருக்கும். ஆனால், இந்தக் கலவையை முகத்தில் போடும்போது முக சருமத்திற்கு ஓர் இறுக்கம் கிடைக்கும். 15 நிமிடங்களுக்கு இதை அப்படியே விட்டுவிடுங்கள்.

பின்னர், முகம் மற்றும் கழுத்தை மசாஜ் கொடுப்பது போலத் தேய்த்து, ஒரு துணியால் துடைத்துத் துடைத்து பேக்கை நீக்குங்கள். அவ்வளவுதான்… உங்கள் முகம் பளிச்சென்று மின்னத் தொடங்கிவிடும்.

வேதிப்பொருள்கள் எதுவும் கலக்கப்படாத இந்த ஃபேஸ் பேக்கை குழந்தைகளுக்கும் போடலாம். இந்தக் கலவையுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளித்துவரும்போது தேவையற்ற முடிகள்கூட நீங்கிவிடும்.

ஆனால், இந்த ஃபேஸ் பேக்கை தினமும் போடக்கூடாது. வாரம் இரண்டு நாட்கள் மட்டும் போட்டுக்கொள்ளலாம். அதாவது, திங்கட்கிழமை போட்டால், அடுத்து வெள்ளிக்கிழமை போட்டுக்கொள்ளலாம். இப்படி இடைவெளிவிட்டு ஃபேஸ் பேக் போடுவது உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது’’ என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்து அல்வா!

செந்தில் பாலாஜி ராஜினாமா?

ஆளுநர் உரையில் இருந்தது என்ன?

காதலர் தினத்துக்கு இடையூறா? – காங்கிரஸ் கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share