பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ள நிலையில் இன்று (ஆகஸ்டு 9) அம்மாநில ஆளுநரை சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அளித்துள்ளார் நிதிஷ்குமார். இதன் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கூட்டணி ஆட்சி
2020-ல் நடைபெற்ற பிகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளமும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் 115 இடங்களில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம், 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.
110 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க., 74 இடங்களைக் கைப்பற்றியது. பிகாரில் கூட்டணி ஆட்சியமைத்த பாஜக நிதிஷ் குமாரை முதல்வர் ஆக்கினாலும், துணை முதல்வர், சபாநாயகர் மற்றும் முக்கிய அதிகாரம் கொண்ட அமைச்சர் பதவி உள்ளிட்டவற்றை தன் வசம் வைத்துக் கொண்டது.
நிதிஷ்குமார் அதிருப்தி
இதனால், ஆரம்பம் முதலே நிதிஷ்குமாருக்கு அதிருப்தி ஏற்பட்டது. மேலும் பிகாருக்கான சிறப்புப் பிரிவு அந்தஸ்து தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது போன்ற விவகாரங்களும் இரண்டு கட்சிகளுக்கு இடையே விரிசலை உருவாக்கியது.
மறைமுகமாக அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த நிதிஷ்குமார் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்து தனது வெறுப்பை வெளிப்படையாகக் காட்டினார். மேலும் பாஜக அரசு அழைப்பு விடுத்த எந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இதெல்லாம், பாஜக – ஜேடியு கூட்டணி முறிவது உறுதி என்பதற்கான அறிகுறிகளாக தென்பட்டன.
பாஜக – ஜேடியு கூட்டணி முறிந்தது
இந்த நிலையில் பாட்னாவில் தனது கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி.-க்களுடன் ஆலோசனை நடத்தினார் நிதிஷ். மேலும் பிகார் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியே ஆலோசனை நடத்தின.
துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் தலைமையில் பாஜக அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையின் முடிவில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார். தேஜஸ்வியின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தால் ஆதரவு தருவதாக காங்கிரசும் அறிவித்தது.
ஆளுநருடன் சந்திப்பு
இந்தசூழலில் இன்று (ஆகஸ்டு 9) பிகார் ஆளுநரை சந்தித்த முதல்வர் நிதிஷ்குமார் பாஜக ஆதரவுடன் தான் இதுவரை வகித்து வந்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த சந்திப்பில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டது பற்றியும், ஆர்.ஜே.டி, காங்கிரஸ் உடன் இணைந்து புதிய ஆட்சியை அமைப்பது பற்றியும் நிதிஷ்குமார் ஆளுநரிடம் விவாதித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
யாருக்கு எவ்வளவு சீட்?
மொத்தமுள்ள 243 இடங்களில் 79 எம்எல்ஏக்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 19 எம்எல்ஏக்களும், இடதுசாரிக்கு 16 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஆட்சி அமைக்க 122 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் 4 கட்சிகளும் சேர்ந்து 160 எம்எல்ஏக்களின் உதவியோடு பலமான கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
பாஜக முயற்சி
அதே சமயம் மராட்டியத்தைப் போன்று ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.எல்.ஏ-க்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் பாஜக இறங்கலாம் என்றும் கூறப்படுகிறது. எம்.எல்.ஏ-க்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியும் நடக்கலாம்.
யார் முதல்வர்?
லாலு குடும்பத்தின் மீது ஊழல் புகார் கூறி 5 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டணியில் இருந்து வெளியேறியவர் தான் இந்த நிதிஷ். ஆனால் தற்போது மீண்டும் ஆர்.ஜே.டி உடன் கைகோர்க்க இருக்கிறார். இந்த முறை தேஜஸ்வி-க்கு முதலமைச்சர் இருக்கையை வழங்கவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பரபரப்பான அரசியல் சூழலில் நிதிஷ்குமார் ஆளுநரை சந்தித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
கலை.ரா









