தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பற்றிய மோசமான விமர்சனங்களையே பெரிதும் பார்க்க முடிகிறது. இதனால், தியேட்டர்கள் காற்றாடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ரஜினிகாந்த் நடித்த கங்வா படம் பற்றி பார்க்கலாம்.
கடந்த 1983 ஆம் ஆண்டு மலையூர் மம்பட்டியான் என்ற படம் தமிழில் வெளியாகி சக்கை போடு போட்டது. ராஜசேகர் இயக்கத்தில் தியாகராஜன்,சரிதா, ஜெய்சங்கர், சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வெற்றியடைந்ததையடுத்து, ராஜசேகர் இந்தியிலும் அந்த படத்தை எடுக்க முடிவு செய்தார்.
ஆனால், ஹிந்திக்கு பரிச்சயமான முகம் வேண்டுமென்பதால் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கங்வா என்ற பெயரில் அந்த படத்தை எடுத்தார். ஷபானா ஆஸ்மி ரஜினியுடன் இந்த படத்தில் ஜோடி சேர்ந்தார். அம்ரிஷ்பூரி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
பப்பிலஹிரி இசையமைப்பில் வெளியான இந்த படம் வெற்றி பெறவில்லை. இந்த படத்தின் தலைப்பில் இருந்துதான் சூர்யாவின் படத்துக்கும் கங்குவா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சூர்யாவின் கங்குவா படத்தின் கதையும் ரஜினிகாந்துக்காக உருவாக்கப்பட்டதுதான் என்று கூறுகின்றனர். கங்குவா இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினரை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதில், “சிறுத்தை சிவாவுடன் சேர்ந்து அண்ணாத்த படத்தில் பணியாற்றினேன். 20, 30 படங்களில் பணியாற்றியது போன்ற நெருக்கம் எங்களுக்குள் ஏற்பட்டது. அண்ணாத்த படம் எடுத்த போது, நான் சிவாவிடம் ‘எனக்காகவும் ஒரு பீரியட் படம் பண்ணுங்க’ என்றேன் சரி என்று அவர் சொன்னார். அப்படி பார்த்தால் கங்குவா எனக்காக தயார் செய்யப்பட்ட படமாக இருக்கலாம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பெளர்ணமி தினத்தில் ஏறிய தங்கம் விலை : சவரன் எவ்வளவு தெரியுமா?