எடப்பாடி பழனிசாமியுடன் ஒன்றரை மணி நேரம் பேச்சு- தவாக வேல்முருகன் விளக்கம்

Published On:

| By Mathi

EPS Velmurugan

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் விமான பயணத்தில் ஒன்றரை மணிநேரம் மனம் விட்டு பேசியதாக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் விஜய் எழுதிய ‘காவிரிப் பெருநிலம்’ நூல் வெளியீட்டு விழா ஈரோட்டில் ஜனவரி 3-ந் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வேல்முருகன் சென்ற போது, அதே விமானத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பயணித்தார். தாங்கள் இருவரும் அருகருகே அமர்ந்து ஒன்றரை மணி நேரம் மனம் விட்டு பல விஷயங்களை பேசினோம் என்று வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஈரோடு செய்தியாளர்களிடம் வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறியதாவது: சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் பயணித்த போது எடப்பாடி பழனிசாமி அருகே அமர்ந்து ஒன்றரை மணி நேரம் பேசுவதற்கான சூழல் ‘இயற்கையாக’ அமைந்தது.

ADVERTISEMENT

அப்போது, தமிழ்நாட்டில் இருக்கிற விவசாயிகளுக்கு தன்னுடைய ஆட்சிக் காலத்தில் செய்த எல்லாவற்றையும் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு செய்ததையும் என்னுடன் எடப்பாடி பழனிசாமி விவாதித்து வந்தார்.

நானும், ”திமுக- அதிமுக 2 ஆட்சிகளுமே போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செய்திருக்கிறீர்கள்” என்றேன்.

ADVERTISEMENT

மேலும், ஒரு விவசாயியாக, விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்திய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தவில்லை என்ற ஆதங்கத்தையும் என்னிடத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவு செய்தார்

தமிழகம், தமிழக முன்னேற்றம், விவசாயிகளின் சிக்கல்கள் , கல்வி சார்ந்த பிரச்சனைகள் குறித்த அவரது உள்ளார்ந்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இது எனக்கு மனநிறைவாக இருந்தது.

நானும் ஒரு தமிழன்.. அவரும் ஒரு தமிழன். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர். நாங்கள் இருவரும் ஒன்றாக சட்டப்பேரவையில் பணி செய்து வருகிறோம். நாங்கள் இருவரும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் குறித்து தமிழ்நாட்டின் வாழ்வுரிமை குறித்தும் ஈழத் தமிழர் குறித்தும் பேசி வந்தேன்.

இதில் அரசியல் எதுவுமே பேசவில்லை. இவ்வாறு வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share