தமிழ்நாட்டு எம்.பிக்கள் செய்ய வேண்டியது என்ன?

Published On:

| By vivekanandhan

ரவிக்குமார், பாராளுமன்ற உறுப்பினர்

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் சேர்த்து 40 இடங்களிலும் திமுக அணி வெற்றி பெற்றுள்ளது. 17 ஆவது மக்களவையைப் போலல்லாது ஆளுங்கட்சிக்கு இணையான பலத்தோடு எதிர்க்கட்சிகள் பங்கேற்கிற நாடாளுமன்றமாக இது இருப்பதால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கை குறித்து மக்களிடம் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளன.

பெரும்பான்மை பலம் இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிற பாஜக, கடந்த 10 ஆண்டுகளில் நடந்துகொண்டதுபோல இப்போது நடந்து கொள்ள முடியாது என்ற பொதுவான கருத்து எதிர்க்கட்சிகளிடம் நிலவுகிறது. ஆனால் பாஜகவின் போக்கில் எந்த மாற்றமும் தென்படவில்லை.  கடந்த ஆட்சியில் இடம்பெற்றிருந்த அதே அமைச்சர்கள் அதே துறைகளுக்குப் பொறுப்பேற்று இருக்கிறார்கள்.

‘ரயில் விபத்துகள் புகழ்’ அஸ்வினி வைஷ்ணவுக்கு அதே ரயில்வே துறை, ‘வினாத்தாள்கள் லீக் புகழ்’ தர்மேந்திர பிரதானுக்கு அதே கல்வித்துறை, கும்பல் கொலைகளையோ, மணிப்பூர் கலவரத்தையோ கட்டுப்படுத்தத் திறமையில்லாத அமித்ஷாவுக்கு அதே உள்துறை.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் பதவி ஏற்கவே இல்லை. அதற்குள் யுஜிசி நெட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டு அந்தத் தேர்வுகளை கல்வி அமைச்சகம் ரத்து செய்துள்ளது. நீட் தேர்விலும் ஏராளமான முறைகேடுகள் அம்பலமாகி வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அந்தத் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் நாடு முழுவதும்  போராட்டங்களை அறிவித்துள்ளன. இந்த ஆட்சியின் ஆரம்பமே இந்த லட்சணத்தில் இருக்கிறது.

இந்தச் சூழலில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குச் செல்லும் உறுப்பினர்களுடைய பொறுப்பு அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிற கட்சிகளிடமும் உள்ளது.

நாடாளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விருப்பத்தை மட்டுமே சார்ந்தது அல்ல, ஆளுங்கட்சியும் அதில் அக்கறை காட்ட வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் வெற்றி பெற்றதற்காக கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் உரையாற்றிய திமுக தலைவர் ‘தளபதி’ மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 17 ஆவது மக்களவையில் ஆற்றிய பணிகளைப் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்.

“கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் நம்முடைய எம்.பி-க்கள் 9,695 கேள்விகள் எழுப்பியிருக்கிறார்கள். 1,949 விவாதங்களில் பங்கெடுத்திருக்கிறார்கள். 59 தனி நபர் மசோதாக்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இப்போது முன்னிலும் கூடுதலான பலத்தோடு எதிர்க்கட்சிகள் இருப்பதால் இன்னும் சிறப்பாக செயல்படுவோம்” என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் எப்படியெல்லாம் அவர்கள் பாராளுமன்றத்தின் மாண்புகளையும் நடைமுறைகளையும் மீறினார்கள் என்பதைப் புரிந்து கொண்டால்தான் இந்த முறை அப்படி அவர்கள் நடக்காமல் நாம் விழிப்போடு இருந்து தடுக்க முடியும்.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் உயிர்நாடியாக இருப்பது பாராளுமன்ற அவைகளான மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் செயல்பாடுகள் தாம். அதை மதிப்பிடுவதற்குப் பாராளுமன்ற அவை கூடிய நாட்களின் எண்ணிக்கையை முதலில் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு ஆண்டில் நாடாளுமன்றத்தின் இரண்டு அமர்வுகளுக்கு இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 85 கூறுகிறது. எனவே ஒரு ஆண்டுக்கு இரண்டு அமர்வுகள் நடத்தப்படுவது கட்டாயமாகும்.

இந்தியாவுக்கு முன்னோடியாகக் கருதப்படும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடவடிக்கைகளோடு ஒப்பிட்டால் இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளதை நாம் உணரலாம். பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஆண்டுக்கு சராசரியாக 147 நாட்கள் கூடுகிறது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் எப்போது ஆரம்பிக்கும், எத்தனை நாட்களுக்கு நடக்கும் என்பது  அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது, கூட்டத்தொடரின் கால அளவை நிர்ணயம் செய்வதில் எதிர்க்கட்சிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை. இதன் மூலம் நாடாளுமன்றம் எத்தனை நாட்களுக்கு கூடும் என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும் நிலை உள்ளது.

இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் 1952 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு உருவான முதல் பாராளுமன்றம் ஆண்டுக்கு சராசரியாக 135 நாட்கள் கூடியது. இரண்டாவது மக்களவையில் அது ஆண்டுக்கு சராசரியாக 116 நாட்கள் என சற்று குறைந்தது. மூன்றாவது மக்களவை 117 நாட்கள் கூடியது. நான்காவது மக்களவையின்போது சற்று இந்த எண்ணிக்கை அதிகரித்து 123 நாட்களாக ஆனது. அதன் பின்னர் ஆண்டுக்கு சராசரியாக மக்களவை கூடுகிற நாட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

2014 ஆம் ஆண்டு திரு நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றதற்குப் பிறகு அவர் மக்களவையின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மிகவும் அரிதாகவே இருந்தது. இந்திய வரலாற்றில் மிகக் குறைவான நாட்களே மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தான். அவர் மக்களவையின் செயல்பாடுகள் மீது கொஞ்சமும் மரியாதை காட்டாத காரணத்தால் கூட்டம் நடக்கும் நாட்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது. 16 ஆவது மக்களவை ஆண்டுக்கு சராசரியாக 66 நாட்கள் மட்டுமே செயல்பட்டது. 17 ஆவது மக்களவையின் நிலைமையோ இன்னும் மோசம்! ஒரு ஆண்டுக்கு சராசரியாக 55 நாட்கள் மட்டுமே மக்களவை கூடியது. இந்திய வரலாற்றிலேயே மிகக் குறைவான நாட்கள் செயல்பட்ட மக்களவை 17 ஆவது மக்களவைதான்.

அந்த நாட்களிலும் கூட உருப்படியான விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றுவது அல்லது இடைநீக்கம் செய்வது; மக்களவைக் கூட்டத்தை பாதியிலேயே கலைத்து விடுவது; குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே கூட்டத்தொடரை முடிப்பது என பாராளுமன்ற செயல்பாடுகளை பாஜக அரசு சீரழித்தது. எனவே, தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால், அவை கூடுகிற நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென நாம் ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டும். இது நம்முடைய முதல் கடமை.

தொடரும்…

ரவிக்குமார், விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். அரசியலைத் தாண்டி எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர்.

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளச்சாராய மரணம்: மதுவிலக்கு எப்போது? தமிழக அரசுக்கு சூர்யா கண்டனம்!

மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றத் தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி : பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணம் அறிவித்த முதல்வர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share