இந்தியா மீது மேலும் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்திருப்பது அமெரிக்கர்களுக்கு தான் பாதிப்பு என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி என இருந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதம் இறக்குமதி செய்வதற்காக இந்தியா மீது அபராதம் விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இக்கட்டான சூழலில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது எனவும் விளக்கம் அளித்திருந்தது.
ஆனால் இந்தியாவின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளளாத டிரம்ப், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று முன்தினம் தொலைபேசியில் பேட்டி அளித்த போது, அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரி கணிசமாக உயர்த்தப்படும் என்ற பகீர் தகவலை பகிர்ந்தார். இதைத்தொடர்ந்து இந்தியாவிற்கு கூடுதலாக 25 சதவிகித வரியை உயர்த்தி தற்போது அறிவித்துள்ளார் டிரம்ப்.
இந்த கூடுதல் வரி வரும் ஆகஸ்ட்-27ம் தேதி முதல் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நம
டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு ஏற்றுமதியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது நமது அண்டை நாடான பாகிஸ்தானை விட நமக்கு 30 சதவிகிதம் அதிக வரி என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுவரை தனது அறிவிப்புகளை 109 முறை மாறி மாறி அறிவித்திருந்தார் என்கின்றனர். இந்தியாவுக்கான 50 சதவிகித வரி விதிப்பு காரணமாக வர்த்தகம் செய்வது மிவும் கடினம்.
திருப்பூரில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி நடைபெறுகிறது. இதில் 30 சதவீதம் அமெரிக்காவிற்கு மட்டுமே திருப்பூர் பின்னல் ஆடைகள் அனுப்பப்படுகின்றன. இதனால் சுமார் 12,000 கோடி ரூபாய் அளவில் ஏற்றுமதி பாதிக்கும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் இந்த வரி விதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. மத்திய அரசு இது தொடர்பாக உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார். மேலும் இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உடனான வரியில்லா ஒப்பந்தம் காரணமாக இந்த வர்த்தகத்தை ஈடு செய்ய முடியும். ஆனால் இழப்பை ஈடுகட்ட பேச்சுவார்த்தை நடத்துவதுதான் தீர்வு என தெரிவித்தார் .
மேலும் இந்த வரி உயர்வு இந்தியாவிற்கு என்பதை விட அமெரிக்க நுகர்வோர் தான் பாதிக்கப்படுவார்கள் . 100 ரூபாய்க்கு பெற்ற ஆடைகள் 150 ரூபாய்க்கு விற்கும் என்பதால் அவற்றை வாங்க முடியாமல் அமெரிக்கா நுகர்வோர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை போட்டி நாடுகள் பயன்படுத்தும் பட்சத்தில் நமது ஆர்டர்கள் பாதிக்கும் என தெரிவித்தார்.
