பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக்கொண்ட பிரதமர் மோடி, விவசாயிகள் தொடர்பான கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் மோடி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 72 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்ற மோடி, முறைப்படி பிரதமராக பொறுப்பேற்றுகொண்டார். பிரதமராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார்.
பிரதான் மந்திரி கிசான் நிதியின் 17-வது தவணையை விடுவிப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதன்மூலம் 9.3 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி வரவு வைக்கப்படும்.
இந்த கோப்பில் கையெழுத்திட்ட பிறகு பேசிய பிரதமர் மோடி, “எங்கள் அரசு விவசாயிகளுக்கானது. அதனால் தான் விவசாயிகளுக்கான கோப்பில் கையெழுத்திடுவது பொருத்தமானதாக இருக்கும் என நினைத்து அந்த கோப்பில் கையெழுத்திட்டேன். விவசாயத் துறையை மேம்படுத்த இன்னும் அதிகமாக உழைக்க விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு மூன்று தவணைகளில் ரூ.2,000 என ரூ.6,000 வரவு வைக்கப்படும். 2019ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2.42 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காலை வெட்டிகொண்ட அதிமுக தொண்டர்: போன் போட்ட சசிகலா… நேரில் சந்தித்த எடப்பாடி
புதிய அமைச்சரவையில் தென் மாநில அமைச்சர்களின் லிஸ்ட்… கூட்டணி கட்சி அமைச்சர்கள் யார் யார்?
