இன்றைய அவசர உலகில் அனைவரும் நமது ஆரோக்கியத்தைப் பராமரிக்கச் சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். பலரும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுவதால் குறைந்த பட்சம் நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது நம்மை பல நோய் அபாயங்களிலிருந்து மீட்க உதவக் கூடும். ஆனால் நடைபயிற்சி செய்யும் பலருக்கும் காலையில் வாக்கிங் செல்வது நல்லதா? அல்லது மாலையில் வாக்கிங் செல்வது நல்லதா? என்ற குழப்பம் உள்ளது. அப்படித்தான் நீங்களும் யோசிக்கிறீர்களா.. இதோ உங்களுக்கான டிப்ஸ்.
காலை நடைப்பயிற்சியின் நன்மைகள்
பொதுவாக வாக்கிங் செல்லும் பலரும் காலையில் வாக்கிங் செல்ல விரும்புகின்றனர். காலையில் வாக்கிங் செல்வது நமது உடலில் ஆற்றல் மட்டத்தை அதிகரிக்க உதவும். வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்துவதால் கொழுப்பு கரைய நடைப்பயிற்சி உதவுகிறது.
பொதுவாக காலையில் ஓரளவு சுத்தமான காற்றும், அமைதியான சூழலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் காலை நேரத்தில் இதமான சூரிய ஒளியில் உடலுக்குத் தேவையான விட்டமின் டி கிடைக்கிறது. மேலும் நாம் காலையில் உற்சாகமாக வாக்கிங் செல்வதால் அன்றைய நாள் முழுவதும் நேர்மறையான சூழலோடு மனச் செறிவையும் அதிகரிக்கும்.
மாலை உடற்பயிற்சியின் நன்மைகள்
பொதுவாக இன்றைய அவசர வாழ்க்கை முறையில் காலையில் வாக்கிங் செல்வது என்பது பலருக்கும் இயலாத ஒன்றாக இருக்கிறது. காலையில் பள்ளி கல்லூரி, பணிக்கு கிளம்பும். அவசரத்தில் வாக்கிங் செல்வது பெரும் சவாலாக இருக்கலாம்.
அப்படி இருப்பவர்களுக்கு மாலையில் வாக்கிங் செல்வது மிகவும் வாய்ப்பான ஒன்றாக இருக்கும்.
மாலையில் வாக்கிங் செல்வதால் நாம் பகலில் உட் கொள்ளும் கலோரிகளை குறைக்கவும் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கவும் இது பெரிதும் உதவும். வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த இது மிகவும் நல்லது.
மாலை நேரம் ரிலாக்ஸாக வாக்கிங் செல்வது நமது மனதின் அழுத்தத்தை குறைக்க உதவுவதோடு தூக்கத்தின் தரத்தையும் அதிகரிக்கும். செரிமானத்தை மேம்படுத்துவதோடு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நமது நடைப்பயிற்சியின் நேரம் மற்றும் உடல் செயல்பாடுகளைப் பொறுத்து அதன் பயன்கள் கிடைக்கும். உதாரணமாக உடல் எடையைக் குறைக்கும் பயணத்தில் நீங்கள் இருந்தால் காலையில் வாக்கிங் செல்வது உங்களுக்கு நல்ல பலன் தரும். அதே சமயம் செரிமானம், மற்றும் சர்க்கரை பிரச்சனையைக் கையாள்பவர்களுக்கு மாலை நேர வாக்கிங் சற்று அதிக பலன் தரலாம்.
பொதுவாக நாம் எப்போதும் சாப்பிட்ட பிறகு மிதமாக நடப்பது செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரும். ஆனால் சாப்பிட்ட உடன் அதி வேகத்துடன் நடப்பதைத் தவிர்ப்பது நல்லது.
அதே சமயம் இன்றைய வாழ்க்கைச் சூழலில் காலையிலோ மாலையிலோ வாக்கிங் போன்ற ஏதோ ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. ஆனால் நீங்கள் புதிதாக உடற்பயிற்சியை தொடங்குபவர் என்றால் உங்கள் மருத்துவரின் உரிய ஆலோசனையோடு தொடங்கலாம்.
