நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா மீது எடுத்த நடவடிக்கை என்ன?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Published On:

| By Monisha

action on prakash raj and babi simha

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடம் கட்டிய விவகாரத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது எடுத்த நடவடிக்கை என்ன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. action on prakash raj and babi simha

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஆகஸ்ட் மாதம், வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா உரிய அனுமதியின்றி இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி வருவதாக பேத்துப்பாறை ஊர் தலைவர் புகார் அளித்தார்.

ADVERTISEMENT

பிரகாஷ் ராஜ் 7 ஏக்கர் நிலத்தையும் பாபி சிம்ஹா ஒரு ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமித்து உரிய அனுமதியின்றி சொகுசு பங்களா கட்டி வருவதாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹாவிற்கு நோட்டீஸ் அனுப்பினர்.

ADVERTISEMENT

இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பேத்துப்பாறை. இந்த கிராமத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் உரிய அனுமதி பெறாமல் சொகுசு பங்களா கட்டி இருக்கிறார்கள்.

கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் பங்களா கட்டுவதற்கு தமிழ்நாடு கட்டிட அனுமதி விதிகளின் படி முறையாக அனுமதி வாங்க வேண்டும். மேலும் மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடர்களை தடுக்க கட்டிட விதிமுறைகளைக் கடுமையாக பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் பேத்துப்பாறை பகுதியில் பங்களா கட்டி உள்ளார்கள்.

ADVERTISEMENT

இது தொடர்பாக புகார் அளித்தாலும் இருவரும் பிரபலமான நடிகர்கள் என்பதால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. விதிமீறல் கட்டிடங்களால் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் கொடைக்கானல் பேத்துப்பாறையில் அரசின் அனுமதி பெறாமல் ஜெசிபி, பொக்லைன் போன்ற வாகனங்களை பயன்படுத்தி பாறைகளை உடைத்திருக்கிறார்கள். எனவே அரசின் அனுமதி பெறாமல் சொகுசு பங்களா கட்டிய நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த மாதம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “நடிகர் பாபி சிம்ஹா தனது தாயார் பெயரில் 2400 சதுர அடிக்கு கட்டடம் கட்ட அனுமதி பெற்றுவிட்டு 4000 சதுர அடி கட்டியிருக்கிறார். நடிகர் பிரகாஷ்ராஜ் கட்டிடம் கட்டுவதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. தற்போது இரு கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள், அரசு அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். மேலும் இந்த மனு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கு நேற்று (ஜனவரி 4) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் “நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோரின் பங்களா கட்டிட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நடிகர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

அதிகாலை 3 மணிக்கு மெட்ரோ: மாரத்தான் பங்கேற்பாளர்களுக்கு இலவசம்!

பனியால் செடியிலேயே வாடிய வெற்றிலைகள்: விவசாயிகள் கவலை!

என்ஜினீயரிங் பணிக்கான தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்:  டி.என்.பி.எஸ்.சி

வேலைவாய்ப்பு : TANUVAS-ல் பணி!

action on prakash raj and babi simha

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share