விரைவில் ஒலிம்பிக்கில் சேரும் பேடல் விளையாட்டு… தோனியின் ’7Padle’ சிறப்பம்சம் என்ன?

Published On:

| By christopher

What is special about Dhoni's 7Padle at chennai

கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் அதிக கவனம் ஈர்த்து வருவது ரஜினிகாந்தின் கூலியும், சிஎஸ்கேவின் தோனியும் தான்.

தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு வந்திருந்த தோனி, தனக்கு பிடித்தமான 7ஆம் தேதியன்று சென்னை பாலவாக்கத்தில் தோனி ‘7Padle’ என சொந்தமாக ஒரு ஸ்போர்ட்ஸ் சென்டரை திறந்திருக்கிறார்.

ADVERTISEMENT

இதில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சிஎஸ்கே வீரரான ருத்துராஜ் கெய்க்வாய் ஆகியோர் கலந்துகொண்டனர். மூவரும் இணைந்து சென்டரை திறந்து வைத்ததுடன் இணைந்து பேடல் விளையாடியது இணையத்தில் வைரலனாது.

ADVERTISEMENT

சரி அது என்ன ’பேடல்’ விளையாட்டு?

பேடல் என்பது டென்னிஸ், ஸ்குவாஷ் மற்றும் பேட்மிண்டனின் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாகும்.

ADVERTISEMENT

பேடல் விளையாட்டு முதலில் மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா என உலகில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது.

உலகெங்கிலும் 130 நாடுகளில் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேடல் விளையாடுவதாக கருதப்படுகிறது.

வழக்கமான டென்னிஸ் மைதானத்தை விட சற்று சிறிய ஒரு மூடப்பட்ட இடத்தில் இது விளையாடப்படுகிறது. டென்னிஸ் போலவே மொத்தமுள்ள 3 செட்களில் 2 செட்களை வெல்வதே விளையாட்டின் நோக்கம். ஒரு செட் 6 ஆட்டங்களைக் கொண்டதாகும்.

வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டும், ஸ்பெயினில் 4,00,000 டென்னிஸ் ராக்கெட்டுகளுடன் ஒப்பிடும்போது சுமார் 900,000 பேடல் ராக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.

உலகளவில் அதிகபட்சமாக ஸ்பெயினில் 20,000 க்கும் மேற்பட்ட பேடல் மைதானங்கள் மற்றும் 60 லட்சம் வீரர்கள் உள்ளனர். அங்கு இது கால்பந்தாட்டத்திற்குப் பிறகு தேசிய அளவில் இரண்டாவது மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது.

அதே போன்று இத்தாலி நாட்டிலும் அதிகம் விரும்பப்படும் இரண்டாவது மிகவும் பிரபலமான விளையாட்டாக பேடல் உள்ளது. அங்கு பேடல் மைதானங்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்து, 2025 இல் 9730 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்வீடனில், 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சுமார் 4000 மைதானங்களில் பேடல் விளையாடுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் 1500 பேடல் மைதானங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரை பேடல் விளையாட்டு விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது. 2017 ஆம் ஆண்டு நாட்டில் ஒரே ஒரு மைதானம் இருந்த நிலையில், தற்போது முக்கிய நகரங்களில் 100 க்கும் மேற்பட்ட பேடல் மைதானங்கள் உள்ளன.

இந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு சர்வதேச பேடல் கூட்டமைப்பில் (FIP) 87 நாடுகள் இப்போது பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன. FIP உலகளவில் 600,000 க்கும் மேற்பட்ட வீரர்களையும் அங்கீகரிக்கிறது. பிரிஸ்பேனில் நடைபெறும் 2032 ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க சர்வதேச பேடல் கூட்டமைப்பு முயற்சித்து வருகிறது.

தோனி என்ன சொல்கிறார்?

இந்த நிலையில் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையான தோனி சென்னை பாலவாக்கத்தில் 20,000 சதுர அடி பரப்பளவில் இந்த பெடல் ஸ்போர்ட்ஸ் சென்டரை கட்டியிருக்கிறார்.

இங்கு இதில் 3 பேடல் மைதானங்களும் ஒரு நீச்சல் குளமும் உள்ளது. இவை போக ஜிம், உடற்பயிற்சிக்கு பிறகு உடலை இலகுவாக்கிக் கொள்வதற்கான சிறப்பு அறை, கஃபே, நீராவிக் குளியல் போன்ற வசதிகளும் இந்த ஸ்போர்ட்ஸ் சென்டரில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக தோனி அளித்த பேட்டியில், “சென்னை எப்போதுமே எனக்கு ஒரு ஸ்பெசலான இடம்தான். கிரிக்கெட்டுக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி சென்னை எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. அப்படியிருக்க என்னுடைய முதல் ஸ்போர்ட்ஸ் செண்டரை சென்னையில் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். இந்த பேடல் ஆட்டம் சுவாரஸ்யமானது. எல்லாராலும் ஆட முடியும். விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் குடும்பங்களும் பிட்னஸ் மீது ஆர்வமுள்ளவர்களும் 7paddle சென்டரை அவர்களுக்கான இடமாக உணர்ந்து பயன்பெற வேண்டும் என விரும்புகிறேன்“ எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share