அ. குமரேசன்
இலக்கியத்தில் துப்பறியும் கதைகளுக்கு ஒரு தனியிடமும் விரிந்த வாசகப் பரப்பும் உண்டு. குற்றவாளி யாரென்று தேடுவதோடு குற்றமுறு மனநிலைக்குத் தளமாகும் அரசியல்–சமூகச் சூழல்களைப் பற்றிப் பேசும் கதைகளும் உலக அளவில் வந்திருக்கின்றன. அத்தகைய கதைகள் நாடக மேடைகளுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளில் இத்தகைய கதைகள் நாடகமாக்கப்படுவதற்குத் தனி வரவேற்பு இன்றளவும் உண்டு. what is in akilakitty play – A kumaresan article
தமிழகக் களத்தில், நாடகங்களில் பக்திக் கதைகள், அரண்மனைக் கதைகள், குடும்பக் கதைகள் என வந்துகொண்டிருந்தபோது (சில நாடகங்களில் போலீஸ் கதாபாத்திரங்கள் வந்தன என்றாலும்), துப்பறியும் கதைகளை மேடையேற்றுவது அரிதாகவே நடந்திருக்கிறது. 1933இல் தெ.பொ. கிருஷ்ணசாமி எழுத்தில் ‘கதர் பக்தி’ என்ற நாடகம் அரங்கேறியது. பெயரே உணர்த்துவது போல அக்காலத்து தேசிய இயக்கக் கருத்துடன் இணைந்த, ஒரு துப்பறியும் கதை அது. 1942இல் தேவன் எழுதி, தொடர்கதையாக வெளியான ‘துப்பறியும் சாம்பு’ நாவலை நாடகமாக்கினார் என்.எஸ். நடராஜன் (2016இல் காத்தாடி ராமமூர்த்தியின் ‘ஸ்டேஜ் கிரியேஷன்ஸ்’ குழு அந்த நாடகத்தை மறுபடி மேடைக்குக் கொண்டுவந்தது.)
அவ்வப்போது சில குழுக்கள் துப்பறியும் கதை நாடகங்களை நடத்தியிருக்கக்கூடும். மிகவும் பரவலாக அறியப்பட்டது, பலமுறை மேடையேற்றப்பட்டது ‘டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’. சுஜாதா எழுத்தாக்கத்திலும், பூர்ணம் விஸ்வநாதனின் அட்டகாச நடிப்பிலும் ‘பூர்ணம் தியேட்டர்ஸ் குழுவினரின் பங்களிப்பாக அந்த நாடகம் 1979 முதல் சுற்றி வந்தது.
பெருமளவுக்கு (நானறிந்த வரையில்) துப்பறிதல் வகை நாடகங்களை அரங்கேற்றி வருவது ‘அகஸ்டோ கிரியேஷன்ஸ்’. நாடகாசிரியர், இயக்குநர் அகஸ்டோ கதை, உரையாடலில் ‘நிஜம் 1, நிழல் 2’ (2007), ‘ரங்கநாதன் போட்டோ ஸ்டூடியோ’ (2008), ‘முகம் முகவரிகள்’ (2009), ‘அந்த சரவணனை சுற்றி’ (2011), ‘அச்சு அசல்’ (2012), ‘ஜெயில் வீடு’ (2013), ‘ஜெயித்த குதிரை’ (2015), ‘திரு.ஜே.ஆர்.ஆள்வார் எலும்பு கூடு’ (2016), ‘நாகம்மாள் பாடசாலை’ (2018), ‘வானவில்லின் அம்பு’ (2019) ஆகிய மாறுபட்ட கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் கொண்ட துப்பறியும் கதைகளை இக்குழுவினர் நாடகமாக வழங்கியிருக்கின்றனர். இந்த ஆண்டு அரங்கேறியுள்ள புதிய நாடகம் ‘அகிலாகிட்டி.‘ தலைப்பே இது என்ன என்று துப்பறிய வைக்கிறது அல்லவா? what is in akilakitty play – A kumaresan article

அகிலாகிட்டி எதை பேசுகிறது?
எழுதியனுப்பும் கதைகள் எல்லாம் திரும்பிவந்தே பழக்கப்பட்டவர் வண்ணப்பன். ஒரு பத்திரிகை அலுவலகத்தில் அவர் அவமதிக்கப்படுகிறார். அப்போது அங்கே வரும், “தமிழ்நாட்டின் அகதாகிறிஸ்டி” என்று தனது துப்பறியும் கதைகளுக்காகப் போற்றப்படும் புகழ்பெற்ற எழுத்தாளரான அகிலாகிட்டி என்ற அகிலா, ஒரு சக எழுத்தாளர் சிறுமைப்படுத்தப்படுவதைக் கண்டிக்கிறார். அவர் மீது வண்ணப்பனுக்கு மரியாதை கலந்த அன்பு ஏற்படுகிறது. அந்தப் பத்திரிகையில் அகிலாகிட்டி உண்மையான கொலைக் குற்றம் ஒன்றை அடிப்படையாக வைத்துத் தொடர்கதை எழுதிவருகிறார்.
பத்திரிகையின் விற்பனை நான்கு லட்சம் படிகளுக்கு எகிறுகிற அளவுக்கு வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற அந்தத் தொடர்கதை முடிவதற்கு முன், குற்றவாளி யாரென்ற புதிர் அவிழ்வதற்கு முன், அகிலா மாரடைப்பால் இறந்துவிடுகிறார். அவருடைய எழுத்து நடையிலேயே, அவர் திட்டமிட்டிருக்கக்கூடியது போலவே மீதிக் கதையை ஊகித்து எழுதித் தருகிறவருக்கு ஒரு பெருந்தொகையைப் பரிசாக அறிவிக்கிறது பத்திரிகை நிறுவனம்.
அகிலாவின் தங்கையும் தொலைக்காட்சி நடிப்புக் கலைஞருமான ஷகிலா தனது தமக்கை எழுதி வைத்திருந்த முழுக்கதைக்கான குறிப்புகளையும் ஒரு பென் டிரைவ் பதிவாக வண்ணப்பனிடம் கொண்டுவந்து கொடுக்கிறாள். கதையை முடிக்கவும் போட்டியில் பங்கேற்கவும் கேட்டுக்கொள்கிறாள். தயங்கும் வண்ணப்பனிடம், பத்திரிகை அலுவலகத்தில் நடந்தது குறித்து அகிலா தன்னிடம் பேசி வருந்தியதாகவும், அந்த நிர்வாகத்திற்குப் பாடம் கற்பிக்க இதுதான் வழி என்றும் கூறி சம்மதிக்க வைக்கிறாள்.
இதனிடையே உண்மை வாழ்க்கையில் அந்தக் கொலையைச் செய்த பெரிய தொழிலதிபர் சரத்பாபு, தனது உதவியாளரும் செயற்கை நுண்ணறிவு வல்லுநருமான ஜீவிதாவிடம், மொழியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்தக் கதையை முடிக்கவும், அதன் முடிவில் குற்றவாளியை வேறு ஆளாகக் காட்டவும் கூறி போட்டியில் கலந்துகொள்ள வைக்கிறார்.
போட்டியில் வண்ணப்பனும் ஜீவிதாவும்தான் முன்னணிக்கு வர, வெல்லப்போவது இயற்கையறிவா செயற்கையறிவா என்ற கேள்வியாகிறது. இறுதியில் வண்ணப்பன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுப் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. மூலக்கதை தன்னுடையதல்ல என்பதால் அதற்கான பெருமையையும் பரிசையும் அனுபவிக்கத் தயங்கும் வண்ணப்பன் எடுக்கிற முடிவும், தொழிலதிபர் எடுக்கிற முடிவும் நாம் போட்டியில் பங்கேற்கத் தேவையில்லாத மீதிக்கதை.

கவரும் சொல் விளையாட்டுகள்!
குற்றவாளி யார் என்ற வழக்கமான புதிர் இல்லை. நமக்கு இன்னார்தான் என்று முதலிலேயே தெரிந்துவிடுகிற நிலையில், அடுத்து என்னென்ன நிகழ்கிறது என்ற எதிர்பார்ப்பை, தனியாக ஒரு துப்பறிவாளர் அல்லது காவல்துறை அதிகாரி என்ற கதாபாத்திரங்கள் இல்லாமலே, ஏற்படுத்திவிடுகிறது நாடகம்.
“நல்லவங்க ஏன் தோக்கறாங்க.. தெரியுமா? கெட்டவங்களும் நல்லவங்களா ஆகனும்.. அவங்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தக் கொடுக்கணும்.. அதுக்காகதான் சார் நல்லவங்க வேணுமின்னே தோக்கறாங்க…” –அரங்கில் கைத்தட்டல் பெறுகிற இப்படிப்பட்ட உரையாடல்களோடு,
“ஒருத்தன் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பொருள இன்னொருத்தன் தன் பொருள்னு சொல்றதும், ஒரு எழுத்தாளன் மூளையக் கசக்கி எழுதுன கதைய தன் கதைனு ஒருத்தன் சொல்லிக்கறதும் பச்சை அயோக்கியத்தனம்..” –யார் யாருக்கோ குட்டுவைப்பதாகப் பலருடைய ஆதங்கங்கங்களும் பகிரப்படுகின்றன.
“சாதாரணமா யாரோ ஒருத்தருக்காக எழுதறவரை கோஸ்ட் ரைட்டர்னு சொல்வாங்க. என்னை கோஸ்ட்டுக்காகவே எழுதற கோஸ்ட் ரைட்டராகச் சொல்றீங்க…” –இம்மாதிரியான சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிற சொல் விளையாட்டுகளும் நிரவப்பட்டிருக்கின்றன. மர்மச்சுவை சார்ந்த நாடகத்திற்கான விறுவிறுப்பும் வேகமும் கொஞ்சம் குறைவாக இருப்பது போலத் தோன்றுகிறது. what is in akilakitty play – A kumaresan article

நாடக உலகிற்கு வாய்க்க வேண்டிய கிட்டி!
அதே போல, அகஸ்டோ நாடகங்களில் எப்போதும் நிகழ்வுகளின் கட்டுமானம் வலுவாக இருக்கும், இந்த நாடகம் பெரும்பாலும் உரையாடல்களிலேயே நகர்கிறது. நாடகம் என்பதால், இவற்றை அடுத்தடுத்த மேடையேற்றங்களில் செம்மைப்படுத்த முடியும்.
வண்ணப்பனாக போத்திலிங்கம், அகிலா/ஷகிலாவாக உஷாநந்தினி, சரத்பாபுவாக வெங்கடேஷ், ஜீவிதாவாக ஸ்ரீவித்யா தங்களுக்கு நாடக நடிப்பின் மீதுள்ள காதலை வெளிப்படுத்துகிறார்கள். கார்த்திகேயன், வெங்கிடகிருஷ்ணன், பாலச்சந்திரன், அசோக் ஆகியோரும் தங்களின் ஈடுபாட்டைக் காட்டுகிறார்கள்.
கலை ரவி ஒளியமைப்பு, அமைந்தகரை தாஸ் அரங்க அமைப்பு, தட்ஷின் இசையமைப்பு கூட்டாக வழங்குவது நல்ல ஒத்துழைப்பு. நடிகர்கள் இயல்பான தோற்றத்தில் நடமாட உதவுகிறது பெரம்பூர் குமாரின் ஒப்பனை.
“அகிலாகிட்டி” என்ற தலைப்புக்கு, தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் இருவகையாகப் பொருள்கொள்ளலாம். தமிழில் “கிட்டி” என்றால், “எதையும் இறுக்குவதற்கான கோல்” என்று பொருள். அதன்படி அகிலாவின் தொடர்கதை குற்றவாளியை இறுக்குகிறது என்று புரிந்துகொள்ளலாம். “கிட்டி” என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் “குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் திரட்டப்படும் நிதிக்குவியல்” என்று பொருள். அதன்படி அகிலா மூலமாகக் கிடைக்கும் பெருந்தொகைப் பரிசைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். யோசிப்பதால் இப்படிப் பெயர்ப் புதிர் அவிழ்வதே கூட, நாடகத்தின் கதை போல, ஒரு சுவையான அனுபவம்தான்.
நாடகத்தில் வருவது போல் உண்மையாகவே ஒரு தொடர்கதையால் நான்கு லட்சம் படிகள் விற்பனையாகும் என்றால் அது இன்றைய காலக்கட்டத்தில் பத்திரிகை நிறுவனங்களுக்கு ஒரு பெரிய கிட்டிதான்!
வண்ணப்பன் போல மற்றவர் சிறப்பையும் பணத்தையும் தனக்கெனத் திருட விரும்பாத படைப்பாளிகளை இறுக்குவது நிராகரிப்புகளின் கிட்டி. அதிலிருந்து விடுவிக்கப்பட்டு நேர்மைக்குப் பரிசாகக் கிடைக்க வேண்டியது அங்கீகாரக் கிட்டி.
செவிகளில் தொற்றிக்கொண்டு ஆழ்வெளி ஒலி அனுபவத்தைத் தரும் கம்பியிலாக் கேட்பிகள், ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடகங்கள், குறும்படங்கள், திரைப்படங்கள், வலைத்தொடர்கள் என அனைத்தையும் காணும் அனுபவத்தைத் தரும் கைப்பேசிகள் என்ற நவீனங்களின் வருகை அரங்கங்களுக்கு வரும் கூட்டத்தைக் குறைத்துவிட்ட கிட்டி. மறுபடி ரசிகர்களை நேரடிக் கலை அனுபவத்திற்கு ஈர்ப்பதற்கு ஆழமும் அழகியலும் கூடிய படைப்புகள் வருவது நாடக உலகிற்கு வாய்க்க வேண்டிய கிட்டி. what is in akilakitty play – A kumaresan article
கட்டுரையாளர் குறிப்பு: அ. குமரேசன்

அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர். தீக்கதிர் இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர். பல்வேறு உலக இலக்கிய, அரசியல், சமூக படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். what is in akilakitty play – A kumaresan article