திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 20
ஆரா
தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் அதைப் பயன்படுத்தி கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகளை அறிவதிலும் ஸ்டாலின் சமர்த்தராகத்தான் இருக்கிறார்.
கலைஞர் பெரும்பாலும் செல்பேசிகளை தவிர்த்தே வந்திருக்கிறார், ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. கிரிக்கெட் ஸ்கோர் கேட்பதற்காகவே அவர் பெரும்பாலும் செல்போன் பயன்படுத்தியிருக்கிறார் என்பார்கள் அவரை அருகிருந்து கவனித்தவர்கள்.
2006 -11 ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருக்கும்போது தலைமைச் செயலகத்தில் இருக்கும்போதோ அல்லது பாராட்டு விழாக்களிலோ, அரசு விழாக்களிலோ இருக்கும்போதோ கிரிக்கெட் சீசனாக இருந்தால் கலைஞருக்கு இருப்பு கொள்ளாது. தான் வைத்திருக்கும் செல்போனில் இருந்து போன் அடிப்பார்
“என்ன ஸ்கோரு?”
” …. ”
“அப்படியா…எத்தனை பால் இருக்கு?”
….
“டோனி இருக்காரா…கவலப்படாத ஜெயிச்சுடுவோம்”
-கலைஞரின் செல்போன் உரையாடல்கள் அதிகபட்சம் இப்படித்தான் இருக்கும். அனேகமாக இத்தகைய உரையாடல்கள் அவருடைய பேரனிடமாகவோ, உதவியாளரிடமாகவோ இருக்கலாம்.
மற்றபடி அவரது உரையாடல் எல்லாம் லேண்ட் லைனில்தான் அதிகம். பல பிரச்சினைகளை அவர் சந்திப்பிலேயே தீர்த்துக் கொள்வார்.
ஆனால் ஸ்டாலினோ தகவல் தொழில்நுட்பத்தை தன் தலைமைக்கு சரியாக பயன்படுத்துகிறார். மாவட்டச் செயலாளர்களுக்கு என்று ஒரு வாட்ஸ் அப் க்ரூப்பும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என்று ஒரு வாட்ஸ் அப் க்ரூப்பும் வைத்திருக்கிறார்.
இதுமட்டுமல்ல தான் அமைத்த பூத் கமிட்டி குழுவினருக்கும், கொளத்தூர் தொகுதி பிரச்சினைகளுக்கு எனவும் தனித்தனி வாட்ஸ் அப் குரூப்புகள் அமைத்து தானோ, தனக்கு நம்பிக்கையானவர்களோ அட்மின் ஆக இருக்குமாறு பார்த்துக் கொண்டுள்ளார். எனவே கள ஆய்வு தொடங்கி இப்போதைய கரன்ட் ஸ்டேட்டஸ் வரை கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை தன் விரல் நுனியில் வைத்திருக்கிறார் ஸ்டாலின். இவ்வளவு தெரிந்தும் கட்சி விதிகளை மீறிய நிர்வாகிகளை பந்தாடாமல் வைத்திருக்கிறாரே ஏன் என்ற கேள்வியும் ஸ்டாலினுடைய செவிகளில் விழாமல் இல்லை.
இதற்கு ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலர் நம்மிடம் மனம் திறந்தனர்.
“நீங்க என்னை நம்பி புகார் சொல்றீங்க. என் மேல உங்களுக்கு புகார் இருந்தா கூட சொல்லுங்க என்று கேட்டு வாங்கிய கள ஆய்வுப் புகார்கள் எல்லாமும் ஸ்டாலினிடம் இன்னும் இருக்கின்றன. மோசமான மாவட்டம் என்று பெயர் வாங்கியவர்கள் இப்போது ஸ்டாலின் பக்கத்தில் பாசமாகப் பயணிக்கிறார்கள் என்று மின்னம்பலத்தில் எழுதியிருந்தீர்கள்.
குடும்பத்தில் இன்று அண்ணன் தம்பி சண்டை நடக்கும். அதனால் ஒட்டுமொத்தமாக அவர்களை ஒதுக்கிவிட முடியுமா? இன்று அப்படி இப்படி என்று அதிகார தோரணையோடு செயல்பட்டு, ‘அட்ராசிட்டி’ மாவட்டச் செயலாளர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் பலருமே இந்தக் கட்சிக்காக ஆரம்பத்தில் மிகுந்த கஷ்டப்பட்டவர்கள். அவர்கள் இன்று கட்சிக்கு குழி பறிக்கலாம். ஆனால் ஏற்கனவே அவர்கள் கட்சிக்காக வியர்வை சிந்தியவர்கள் என்ற ரெக்கார்டும் தளபதியிடம் இருக்கிறது. அதற்காக அந்த அட்ராசிட்டி நபர்களின் அன்றைய செயல்பாடுகளுக்காக இன்றைக்கும் அவர்களை சகித்துக் கொண்டிருக்க முடியாது. அதுவும் ஸ்டாலினுக்குத் தெரியும்.தன்னைப் பற்றி கட்சி ரீதியாகவும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி யார் யார் எப்படி பேசுகிறார்கள் என்பதையும் தெரிந்துதான் வைத்திருக்கிறார் ஸ்டாலின்.
இன்னுமொரு இடத்தில்தான் கலைஞரை விட கொஞ்சமல்ல மிகவும் வேறுபட்டு நிற்கிறார் ஸ்டாலின். கலைஞரின் மூடு என்ன என்பது அவரைச் சுற்றியுள்ள நான்கைந்து பேர்களுக்கு நிச்சயம் பிடிபட்டு விடும்.
‘யோவ் இப்ப வேணாம்யா… வீணா போயி அவர் வாயில விழாதே’ என்று துரைமுருகனே பலரை எச்சரித்து கோபாலபுரத்தின் தரைத் தளத்தோடு திருப்பியனுப்பிக் காப்பாற்றியிருக்கிறார். ஆக கலைஞரின் நகர்வு, அவரது யார் மீது என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறார் என்பதை ஓரளவுக்கு துரைமுருகன், ஆற்காடு வீராசாமி போன்ற சீனியர்களால் ஓரளவுக்காவது உணர முடிந்தது.
ஆனால் ஸ்டாலின் விஷயத்தில் இதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் யாரிடமும் சுதந்திரமாக பேசும் இயல்பு கொண்டவர் அல்ல ஸ்டாலின். அவரிடம் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் யாரைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதே பிடிபடாது. இதுதான் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பலமாகவும் இருக்கிறது. ஸ்டாலினின் இந்த மூடு மந்திரத்தை விரைவில் தெரிந்துகொள்ளலாம்” என்கிறார்கள் அவர்கள்.
(பயணிப்போம்)
முந்தைய பகுதிகள்
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 3]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 6]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 7]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 8]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 9]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 10]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 11]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 12]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 13]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 14]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 15]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 16]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 17]