ஏழைகளின் வயிற்றிலேயே அடிக்கும் VBGRAMG – எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எடப்பாடி – மு.க.ஸ்டாலின் விளாசல்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எடப்பாடி பழனிசாமி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

மக்களவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாற்றாக ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’(VBGRAMG) சட்ட மசோதா செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?

கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

ADVERTISEMENT

Three Farm Laws. CAA போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி?

MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?

ADVERTISEMENT

திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை ADMK எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?

வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்?

இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயர் எதற்கு? நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்!” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share