2025-ன் முதல் சட்டமன்றம்… ஆளுநர் அண்ட் எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன?

Published On:

| By Selvam

இந்த வருடத்தின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை (ஜனவரி 6) தொடங்குகிறது.

கடந்த ஜனவரி 3-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி சட்டமன்ற முதல் கூட்டத்தொடரின் போது, தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த ஆளுநர் உரையின் முதல் பத்தியை மட்டும் படித்துவிட்டு உரையை முடித்துக்கொள்வதாக அறிவித்து ஆளுநர் அமர்ந்தார்.

அதன்பிறகு, சபாநாயகர் அப்பாவு, “சாவர்க்கர் வழிவந்த கோட்சே வழிவந்த உங்களுக்கு எந்தவகையிலும் சளைத்ததில்லை இந்த சட்டமன்றம்” என்று பேசினார். உடனடியாக சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் ஆளுநர். இதனையடுத்து ஆளுநர் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏறாது என்று அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

இதேபோல, கடந்த 2023-ஆம் ஆண்டும் ஆளுநர் உரையில் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப சில பகுதிகளை சேர்த்தும், நீக்கியும் வாசித்தார். அப்போது எழுந்து நின்று முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏறாது என்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

இந்தநிலையில், சட்டமன்றம் நாளை தொடங்க உள்ள நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவற்றை சட்டமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சியாக அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியான விசிக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

வேங்கைவயல், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று விசிக துணை பொதுச்செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

நாளை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆளுநர் மற்றும் எதிர்க்கட்சிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் காலை 8.45 மணிக்குள் எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு வர எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார்.

யார் அந்த சார், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கண்டித்து இந்த சட்டமன்றமே ஸ்தம்பிக்கும் வகையில் இந்த கூட்டத்தொடரில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

2017-ஆம் ஆண்டு ஸ்டாலின் சட்டை கிழிந்தபடி எப்படி சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டாரோ, அதேபோல போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம்.

நாளைய தினம் ஆளுநர் உரையில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து அதிமுக வியூகத்தை அமைப்போம்” என்கிறார்கள்.

வணங்காமுடி

அண்ணா பல்கலை… அன்று இரவு 7 To 10… நடந்தது என்ன? – இதுவரை வெளிவராத நடுங்க வைக்கும் தகவல்கள்!

திமுக வெளிச்சத்தில் நாங்கள் இல்லை… முரசொலிக்கு மார்க்சிஸ்ட் புதிய செயலாளர் பெ.சண்முகம் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share