திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்கக் கோரி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்தித்து கடிதம் அளித்துள்ளனர்.
சபாநாயகரிடம் கடிதம் அளிக்க வந்ததாகவும், அவர் இல்லாததால் பேரவை செயலரிடம் கடிதத்தை அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடிதத்தின் சாராம்சம் என்ன?
திருக்கோவிலூர் தொகுதி திமுகவின் சார்பில் பொன்முடி வெற்றி பெற்ற தொகுதியாகும். சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தினால் 19.12.2023 அன்று குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார்.
2006ம் ஆண்டு முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1.74 கோடி ரூபாய் சொத்து சேர்த்தார் என்பது அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.
இந்த வழக்கில் 21.12.2023 அன்று அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை என்று உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து பொன்முடியின் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவிகள் பறிபோனது.
பொன்முடி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாரே தவிர, அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி இன்னும் காலியானதாக அறிவிக்கப்படவில்லை.
இதனை அறிவிப்பது சபாநாயகருடைய கடமை. எனவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பேரவை செயலரிடம் கடிதத்தினை கொடுத்திருக்கிறது அதிமுக தரப்பு.
என்ன சொன்னார் அப்பாவு?
திருக்கோவிலூர் தொகுதி ஏன் காலியானதாக அறிவிக்கப்படவில்லை என சபாநாயகர் அப்பாவுவிடம் ஏற்கனவே செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைத் தொடர்ந்து செய்து வருகிறோம். சரியான நேரத்தில் அறிவிப்போம் என்று மட்டும் பதிலளித்தார்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவை செயலரிடம் பேசிய அதிமுக தரப்பினர்,
சமீபத்தில் பாஜகவில் இணைந்த விஜயதரணியின் தொகுதியான விளவங்கோடு தொகுதியை இவ்வளவு விரைவாக காலியானதாக அறிவிக்கும்போது, திருக்கோவிலூர் விவகாரத்தில் மட்டும் ஏன் காலதாமதம் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.
அதற்கு பதிலளித்த சட்டப்பேரவை செயலர், உயர்நீதிமன்றத்திலிருந்து கோப்புகள் வருவதற்குத் தாமதமாகிறது. அதற்கான வேலையில் இருக்கிறோம். அது வந்தவுடன் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
திமுகவில் என்ன நடக்கிறது?
திருக்கோவிலூர் தொகுதி விவகாரம் குறித்து திமுக நிர்வாகிகள் வட்டத்தில் விசாரித்தபோது அத்தொகுதி குறித்து நடக்கும் சில சிக்கல்களை சொல்கிறார்கள். கள்ளக்குறிச்சி பாராளுமன்றத் தொகுதியின் எம்.பியாக பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி இருந்து வருகிறார்.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியை கெளதம சிகாமணிக்கு வழங்குவதற்கு அந்த மாவட்டத்திலேயே கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக தலைமையும் கெளதம சிகாமணிக்கு கள்ளக்குறிச்சி தொகுதியை மீண்டும் வழங்குவதில் சில தயக்கங்களை காட்டி வருகிறது.
இதன்காரணமாக பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியை கெளதம சிகாமணிக்கு வழங்கி அவரை எம்.எல்.ஏ ஆக்கி விடலாம் என்ற யோசனையை பொன்முடியிடம் தெரிவித்திருக்கிறது திமுக மேலிடம். ஆனால் பொன்முடி, உச்சநீதிமன்றத்தில் நான் நிரபராதி என்ற தீர்ப்பு வரும், எனக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்தாகும், நான் மீண்டும் அமைச்சராவேன் என்று சொல்லி வருகிறாராம்.
எனவேதான் திருக்கோவிலூர் தொகுதி இன்னும் இடைத்தேர்தலுக்கு தயாராகாமல், காலியானதாக அறிவிக்கப்படாமல் உள்ளதாக திமுக நிர்வாகிகள் வட்டத்தில் சொல்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-விவேகானந்தன்
தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் : ஸ்டாலினை சாடிய எடப்பாடி
ஓ.பி.எஸ் சொத்துக்குவிப்பு வழக்கு..அதிரடியாக உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!