பொறுப்பு டிஜிபி வெங்கடராமனுக்கு என்ன ஆச்சு?

Published On:

| By Mathi

DGP Venkataraman

தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் மருத்துவ விடுப்பில் சென்றதால் புதிய பொறுப்பு டிஜிபியாக, லஞ்ச ஒழிப்புத் துறை (விஜிலென்ஸ்) இயக்குநர் அபய்குமார் சிங்குக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில் புதிய டிஜிபி யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த வெங்கடராமன், சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்னர் பொறுப்பு டிஜிபி வெங்கடராமனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றார். அப்போது வெங்கடராமனுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் 15 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார் வெங்கடராமன். இதனால் தற்போது, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருக்கும் அபய்குமார் சிங்குக்கு கூடுதல் பொறுப்பாக பொறுப்பு டிஜிபி பதவி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், சட்டப்படி செயல்படுவதில் விதிமுறைகளை பின்பற்றுவதில் மிகவும் உறுதியாக செயல்படக் கூடியவர் டிஜிபி வெங்கடராமன். இதற்கு ஒரு நல்ல உதாரணமாக அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவத்தை சொல்லலாம். முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக வெங்கடராமன் இருந்தார்.

அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் ஜப்தி (பறிமுதல்) செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

இது தொடர்பாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர்- உள்துறை செயலாளர் மற்றும் விஜிலென்ஸ் இயக்குநர் வெங்கடராமன் உள்ளிட்டோரை அழைத்து ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், “நம்ம ஆட்சியிலேயே அம்மா (ஜெயலலிதா) சொத்துகளை ஜப்தி செய்வது நல்லா இருக்காது.. இந்த வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ய இருக்கிறது.. அதனால் இப்போதைக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்” என விஜிலென்ஸ் இயக்குநரான வெங்கடராமனுக்கு சொல்லப்பட்டது. இது குறித்து எந்த கருத்தையும் அந்த கூட்டத்தில் வெங்கடராமன் சொல்லவில்லை.

கோட்டையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த உடன் நேராக விஜிலென்ஸ் அலுவலகம் வந்த வெங்கடராமன், ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் ஜப்தி செய்யும் உத்தரவை உடனே பிறப்பித்தார்.

இந்த உத்தரவை பார்த்து முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்து வெங்கடராமனிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு, “அப்பீலுக்கு போகப் போகிறோம்தானே.. நீதிமன்றம் அப்பீல் மனு மீது என்ன முடிவெடுக்கிறதோ அதன் படி அப்போது செயல்பட்டுக் கொள்ளலாம்.. இப்போது நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்துள்ளதோ அதை செயல்படுத்த வேண்டும்.. அதுதான் சரி” என தமது சட்டப்படியான நடவடிக்கை குறித்து ‘ஷார்ப்’ விளக்கம் தந்தவர் வெங்கடராமன்.. அந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொள்ளக் கூடியவர்” என பகிர்ந்து கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share