மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் இன்று (செப்டம்பர் 16) அண்ணா அறிவாலயத்தில் சந்தித்திருப்பது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
செப்டம்பர் 13-ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், “இது அரசியல் நோக்கத்திற்கான மாநாடு அல்ல. இதற்கும் அரசியலுக்கும் முடிச்சு போட வேண்டாம் என்று திருமாவளவனே விளக்கமளித்துவிட்டார்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அன்றைய தினமே ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று பேசிய வீடியோவை தனது எக்ஸ் வலைதளத்தில் ஷேர் செய்து திருமாவளவன் மீண்டும் பரபரப்பை கிளப்பினார்.
இதுதொடர்பாக விளக்கமளித்த திருமாவளவன், “கேப்ஷன் சரியாக போடாததால், அட்மின் பதிவை நீக்கியுள்ளார். அதனால், என்னுடைய அனுமதி பெற்று மீண்டும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் 1999-ஆம் ஆண்டு முதல் பேசி வருகிறது. இதனால் யாரையும் நாங்கள் மிரட்டவும் இல்லை, கூட்டணிக்கான காய்களை நகர்த்தவும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.
இதனால் திமுக – விசிக கூட்டணி முறிவை நோக்கி செல்வதாக பலரும் பேசிவந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் இன்று நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் பொன்முடி, திமுக கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்கும் எ.வ.வேலு, விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ஸ்டாலினிடம் திருமா கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர், திருமா மற்றும் ரவிக்குமார் ஆகிய இருவரும், ஸ்டாலினுடன் 14 நிமிடங்கள் தனியாக பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து அறிவாலய வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “சமீபத்தில் திருமாவை சுற்றி நடந்த சில விஷயங்களை குறிப்பிட்டு முதல்வர் வருத்தமாக பேசியிருக்கிறார். அதற்கு திருமாவும் ரவிக்குமாரும் அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்கும் வகையில் பேசியிருக்கிறார்கள்.
அதன்பிறகு உங்களுடைய குறைகள் என்ன என்று திருமாவிடம் ஸ்டாலின் கேட்டபோது, ‘எங்க கட்சி கொடி கம்பங்களுக்கு அதிகாரிகள் அனுமதி தர மறுக்குறாங்க. நீதிமன்ற உத்தரவோட கொடிக்கம்பங்கள ஊன்றினாலும் அகற்றிராங்க.
அதேசமயத்துல பாமக, புதுசா கட்சி தொடங்கியிருக்கிற விஜய் கட்சி கொடிக்கம்பங்கள் வைக்கவும், கூட்டம் நடத்தவும் ஆதரவு கொடுக்குறாங்க. காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் எங்களையும், கட்சி நிர்வாகிகளையும் மதிக்கிறதே இல்லை. சில அமைச்சர்கள் கூட எங்களது கோரிக்கைகளை நிராகரிக்குறாங்க’ என்று தங்களுடைய வருத்தங்களை பகிர்ந்திருக்கிறார்கள்.
அனைத்தையும் பொறுமையாக கேட்ட ஸ்டாலின், ‘உங்களோட பிரச்சனைகளை பத்தி நான் விசாரிக்கிறேன். சரிசெஞ்சுடலாம்’ என்று திருமாவுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்” என்கிறார்கள். திருமா – ஸ்டாலின் சந்திப்பில் சில சங்கடங்களும், கோரிக்கைகளும், மகிழ்ச்சியும் கலந்திருப்பதாக சொல்கிறார்கள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
8 ஏக்கர்… 1 லட்சம் பெண்கள்… நோ கலெக்ஷென் : விசிக மாநாடு 10 பாயிண்ட்ஸ்!