திருப்பூரில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி வித்யாவை அவரது அண்ணனே கொலை செய்த நிலையில், இது ஆணவ கொலை இல்லை என்று போலீசார் கூறுகின்றனர். What happened in Tiruppur Vidya murder
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி – தங்கமணி தம்பதியினரின் மகள் வித்யா (22), கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ் துறையில் முதுகலை படிப்பு பயின்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி, வித்யா தலையில் பீரோ விழுந்ததில் அவர் உயிரிழந்து விட்டதாக அவரது உடலை குடும்பத்தினர் புதைத்தனர்.
ஆனால், “வித்யா மரணத்தில் மர்மம் இருக்கிறது. இறப்பதற்கு முந்தைய நாள் வரை அவருடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தேன் என்று அவருடைய காதலர் வெண்மணி அளித்த புகாரின் பேரில் பருவாய் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், வித்யாவின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனர்.
ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பே, வித்யா பீரோ விழுந்து இறக்கவில்லை, நான் தான் அடித்துக் கொன்றேன் என்று அவருடைய அண்ணன் சரவணக்குமார் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
“வித்யா காதல் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. அவள் மீது இருந்த பாசத்தால் இப்படி செய்து விட்டேன்” என்று சரவணகுமார் கூறியதாக திருப்பூர் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
வித்யாவின் காதல் – மறுப்பு! What happened in Tiruppur Vidya murder
வித்யாவும் வெண்மணியும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். வித்யா தமிழ் இளங்கலை பட்டம் படிக்கும்போது, வெண்மணி எம்.பில் படித்து வந்துள்ளார். அப்போதுதான் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதல் மலர்ந்தது.
இருவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் பிரிவு வேறு.
வித்யா நாவிதர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். வெண்மணி குளாலர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
இதனால் இருவரது காதலுக்கும் வித்யா வீட்டில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் வெண்மணி வித்யா அண்ணனிடம் தொடர்பு கொண்டு தனது காதல் பற்றி பேசி இருக்கிறார்.
அதாவது, ‘நான் தேசிய அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோசிப் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாகவும், அதனால் மாதம் 45 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகையே கிடைக்கும்’ என்றும் கூறி வித்யாவை திருமணம் செய்து தரச் சொல்லி கேட்டிருக்கிறார்.
ஆனால், இதற்கு வித்யா வீட்டில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், ‘படிப்பை முடி பார்த்துக்கொள்ளலாம்’ என்று வித்யா வீட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்தசூழலில் தான் கடந்த ஞாயிறு அன்று வித்யா பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெற்றோர் இருவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள். அதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு சென்று இருந்த வேளையில், வீட்டிலிருந்த வித்யாவிடம் அண்ணன் சரவணகுமார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி இந்த கொலை நடந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அன்றைய தினம் காதலர் வெண்மணி வித்யாவை நீண்ட நேரம் தொலைபேசியில் தொடர்புகொண்டும் அவர் போன் எடுக்காததால் சந்தேகம் அடைந்து தனது நண்பரை அனுப்பி பார்த்த போது தான், வித்யா இறந்ததும் அவரை அவசரமாக அடக்கம் செய்ததும் தெரிய வந்திருக்கிறது.
குறிப்பாக வித்யா இறந்த செய்தி அறிந்து அவரது தோழிகள் நேரில் சென்று பார்ப்பதற்குள் வித்யாவின் உடல் புதைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் முதலில் சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்டு வழக்கை விசாரித்து வந்த போலீசார் தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர்.

இந்த கொலை குறித்து பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் மின்னம்பலத்திடம் கூறுகையில், “சோஷியல் மீடியா மற்றும் ஊடகங்களில் சொல்வது போல, இது ஆணவக்கொலை அல்ல.
காதல் வேண்டாம் என்று சகோதரிக்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தபோது உச்சக் கட்ட கோவத்தில் இப்படி செய்திருக்கிறார். ‘வித்யாவிடம் சரவணக்குமார் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் சொன்னதுக்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவித்து பேசினார். நீ சொல்வதையெல்லாம் கேட்கமாட்டேன். என் லைப்பை எனக்கு பார்த்துக்க தெரியும் என வித்யா கூறியதால், எமோஷனாகி கொலை செய்துவிட்டேன்’ என்று சரவணக்குமார் கூறினார். அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் மேலும் தகவல்கள் தெரியவரும்” என்று கூறினார்.
இது ஆணவக் கொலை இல்லை என்று திருப்பூர் எஸ்.பி.கிரிஷ் குமாரும் கூறியுள்ளார்.
ஆனால், இத்தகைய கொலையும் ஆணவக் கொலையாக கருத வேண்டும் என்றும் உரிய சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. What happened in Tiruppur Vidya murder