வெடி மருந்துகளை இறக்கியபோது கவனக்குறைவாக இருந்ததன் காரணமாகத்தான் விருதுநகர் கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்டு உள்ளதாக விஏஓ தரப்பில் இன்று (மே 2) தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குவாரியில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர வெடி விபத்தால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் ஏற்படுத்தியது. 1 கிலோ மீட்டர் தாண்டி மனித உடலானது சிதறிக்கிடந்த நிலையில், 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
விபத்து நடந்த பகுதியில் இருந்து வெடிக்காத 1,200 கிலோ வெடிப்பொருட்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், குவாரி உரிமையாளர்களான சேது மற்றும் ஸ்ரீ ராம் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்திருக்கின்றனர். மேலும், இன்று சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள 2 மேலாளர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து விஏஓ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “எலக்ட்ரிக் டெட்டனேட்டர் மற்றும் நைட்ரேட் கலவை வேனை அருகருகே வைத்து வெடி மருந்துகளை இறக்கியபோது விபத்து ஏற்பட்டு இருக்கலாம்.
குடோனில் வெடி மருந்துகளை இறக்கும் போது போதிய கண்காணிப்பு அதிகாரிகள் இல்லாமல் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி மருந்துகளை இயக்கும்போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஏஓ அளித்த தகவலின் பேரில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது நாளாக வெடி விபத்து நடந்த இடத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நயினார் நாகேந்திரனின் உறவினர் உட்பட 2 பேர் சிபிசிஐடி முன் ஆஜர்!