திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி ஏன் ஏற்பட்டது? அது எப்படி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது? பாஜகவுடனான கூட்டணியால் அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும்? தேர்தலில் விஜய் வெல்ல முடியாது என்பதற்கு காரணம் என்ன? என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விரிவாக பதில் அளித்துள்ளார்.

சன் நியூஸ் தலைமை செய்தி ஆசிரியர் மு.குணசேகரன்- ப.சிதம்பரம் உரையாடல் விவரம்:
மு.குணசேகரன்: வெற்றிகரமா ஒரு கூட்டணியை இழுபறிக்கு பிறகு முடிச்சிருக்கீங்க என்ன இழுபறி இருந்தது சார்? என்ன நடந்தது?
ப.சிதம்பரம்: இழுபறின்னு சொல்ல மாட்டேன். ஒரு இடைவெளி இருந்தது. இவங்க பேச்சுவார்த்தைக்கு அனுப்பிய குழு 41 (தொகுதிகள்) அப்படின்னு ஆரம்பிச்சது. அவர்களை குறை சொல்லி பயனில்லை, மேலிடத்திலிருந்து என்ன உத்தரவோ… திராவிட முன்னேற்றக் கழகம் 25-ல பழைய 25-ஐ தருகிறோம் (2021-ல் போட்டியிட்ட தொகுதிகள்) என்று சொன்னார்கள். அதனால ஒரு இடைவெளி நிறைய இருந்தது. அந்த இடைவெளியை குறைக்க முடியுமா அப்படின்னு முயற்சி. அந்த முயற்சி நல்ல வேளையாக பலன் தந்திருக்கிறது, எனக்கு மகிழ்ச்சி.
மு.குணசேகரன்: உங்களுக்கும் முதலமைச்சருக்கும் இருக்குற ஒரு பெர்சனல் ஈக்குவேஷன் (personal equation), உங்க மேல அவருக்கு இருக்குற மதிப்பு, நீங்க அவர் மேல வச்சிருக்க பரஸ்பர அந்த நட்புதான் இந்த இடைவெளியை குறைச்சதா சார்?
ப.சிதம்பரம்: பரஸ்பர நட்பு மட்டும்தான் குறைச்சதுன்னு சொல்ல முடியாது. பேச்சுவார்த்தைக்கு வந்த குழுவுல ரெண்டு மூணு பேரு பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு பழக்கமில்லை. அதனால அந்த இடைவெளி குறையாம இருந்தது. அவருக்கு தெரிந்த முகம், தெரிந்த நபர் பேசும்போது சரியாயிருச்சு.
மு.குணசேகரன்: நெடுங்காலமாக இந்தியா கூட்டணி அப்படின்றதுல காங்கிரஸ்- திமுக ஒரு முக்கியமான அங்கமா, நாடாளுமன்றத்துல ஒன்றாக செயல்படுறீங்க. இந்த கூட்டணி நாலு பொதுத் தேர்தல்களை பார்த்திருக்கு. திடீர்னு கூட்டணி முறியுமா? கூட்டணி தொடருமா? அப்படின்ற கேள்வி வர்ற அளவுக்கு வந்துருச்சே சார்?
ப.சிதம்பரம்: கூட்டணி முறியுமான்ற அச்சம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே கிடையாது. இது ஏன் இழுபறியாக இருக்கிறது என்ற வருத்தம்தான். கூட்டணி முறியாது எனக்கு தெரியும். ஏன்னா எங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை வேண்டும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு காங்கிரஸின் துணை வேண்டும். அப்படி துணை இருந்த நேரத்துல வெற்றி பெற்றிருக்கோம். துணை அறுந்து போன நேரத்துல வெற்றி பெறல. நாங்கள் வெற்றி பெறல, அவங்களும் வெற்றி பெறல. அதனால கூட்டணி முறியும்ன்ற அச்சம் எனக்கு இல்ல. கூட்டணி முடிக்கிறதுல ஏன் இவ்வளவு இழுபறி என்ற கவலைதான் ஒழிய அச்சமில்லை. எனக்கு அச்சமில்லை.
மு.குணசேகரன்: திடீர்னு ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் எங்களுக்கு பங்கு வேணும், அமைச்சரவையில் பங்கு அப்படின்ற ஒன்னு வந்தது. புதுசா ஒருத்தங்க கூட்டணிக்கு வரும்போது இந்த மாதிரி கோரிக்கைகள் வைப்பாங்க. ஏற்கனவே தொடருகிற செட்டில் ஆகி (settled) பயணமாகுற கூட்டணியில இந்த குரல் எங்கிருந்து வருது சார்?

ப.சிதம்பரம்: ஆட்சியில பங்குன்றது ஒரு தவறான அல்லது விசித்திரமான கோரிக்கை அல்ல. எந்த நேரத்துல ஆட்சியில பங்கு கேட்கணும்? அந்த காலம் பார்த்துதானே கேட்கணும்? ஐந்து ஆண்டுகள் ஆட்சியில பங்கு கேட்காத போது, தேர்தலுக்கு தலைவாசல்ல நிக்கும்போது ஆட்சியில பங்கு கேட்பது என்பது எனக்கு புரியல. அதனால அதை பேச விரும்பலங்கறதை நான் மேலிடத்துக்கு சொன்னேன். அவர்கள் சரி, என்னுடைய யோசனையை ஏற்றுக்கொண்டு இடத்தை மட்டும் பேசுப்பா அப்படின்னு சொன்னாங்க. ஒன்னு. இரண்டாவது ஆட்சியில பங்கு என்ன என்பது என்ன? ஒரு ரெண்டு அமைச்சர் இருப்பதுதான் ஆட்சியில பங்கா? ஆட்சியில பங்குன்னா ஆட்சி அதிகாரத்துல பங்கு, பல நிலைகள்ல பங்களிப்பு. பங்குங்கறதை விட பங்களிப்பு. நாங்களும் தமிழ்நாடு ஆட்சிக்கு, நிர்வாகத்துல பங்களிக்க விரும்புகிறோம் அப்படின்னு பார்த்தீங்கன்னா அதனுடைய கேள்வியே தன்மை மாறிடுது இல்ல?
மு.குணசேகரன்: பங்களிப்புனா அது வாலண்டரி கான்ட்ரிபியூஷன் (voluntary contribution) நீங்க சொல்றீங்க. ஆனா டிமாண்ட் (demand) பண்றது வந்து கான்ட்ரிபியூஷன் கணக்குல வருமா?
ப.சிதம்பரம்: இல்லையே இல்லையே, நாங்க பங்களிக்க விரும்புகிறோம் அப்படின்றோம். அதெல்லாம் பார்வையை பொறுத்தது.
மு.குணசேகரன்: முதலமைச்சர் இதுல என்ன நிலைப்பாடு கொண்டிருந்தார்? காங்கிரஸ் கூட்டணி வேணும், உடையாதுன்னு நினைச்சீங்களா?
ப.சிதம்பரம்: என்னப்போல காங்கிரஸ் கூட்டணி வேண்டுமென்பதில் அவருக்கு எந்த மாற்றமும் கிடையாது, தயக்கமும் கிடையாது. கூட்டணி முறியுங்குற அச்சமும் அவருக்கு இல்ல. கூட்டணி ஏற்படும், ஆனா இவ்வளவு இழுபறியாக இருக்கிறது என்ற கவலைதான் அவருக்கு. எனக்கும் அதே கவலை. அந்தக் கவலையைப் பரிமாறிக் கொண்டோம். சரி, முடிவுக்கு வந்துரணும், இன்னைக்கு இரவுக்குள்ள முடிவுக்கு வந்துரணும்னு பேசின பிறகு முடிவுக்கு வந்துருச்சே. ஒருவாட்டிதான பேசினோம். ஆமா, ஒரே சந்திப்புதான். (சென்னையில் ஸ்டாலினை அவரது இல்லத்தில் ப.சிதம்பரம் சந்தித்து பேசியது, செல்வப்பெருந்தகை இல்ல திருமண நிகழ்வில் ஸ்டாலின்- ப.சிதம்பரம் பேசிய விவரங்களை நமது மின்னம்பலத்தில் பதிவு செய்தோம். அதையே ப.சிதம்பரம் தற்போது தெளிவுபடுத்தி உள்ளார்.)
மு.குணசேகரன்: அகில இந்திய தலைமை இதுல என்ன நிலைப்பாடு வச்சிருந்தாங்க?
ப.சிதம்பரம்: தனித்தனி நபர்கள் என்ன நினைக்கிறாங்கன்னு எனக்குத் தெரியல. காங்கிரஸ் தலைவர் கார்கே, என்னிடம் தெளிவாகச் சொன்னார், கூட்டணி நிக்கணும், கூட்டணி ஏன் இழுபறியாகப் பேசிட்டு இருக்காங்க, போய் பேசி முதலமைச்சரைப் பார்த்து இன்னைக்குள்ள முடிச்சிருங்கன்னு சொன்னார். அவர் நிலைப்பாடு தெளிவு. நான் ஒரு 10 நாளைக்கு முன்னாடி சோனியா காந்தியை சந்தித்தபோது அப்ப நான் பேச்சுவார்த்தைக்குப் போகல. அப்ப அவங்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு உடன்பாடு விரைவில ஏற்பட்டா நல்லதுங்கிற கருத்தத்தான் சொன்னாங்க. (கார்கே- சோனியாவை ப.சிதம்பரம் சந்தித்து பேசிய விவரங்களை நமது மின்னம்பலத்தில் கடந்த பிப்ரவரி 10-ந் தேதி விரிவாக பதிவு செய்திருந்தோம். தற்போது ப.சிதம்பரம் அந்த பேச்சுவார்த்தையை உறுதி செய்துள்ளார்)
மு.குணசேகரன்: ராகுல் காந்திக்கு மட்டும் மாற்றுக் கருத்து இருந்ததா?
ப.சிதம்பரம்: எனக்குத் தெரியாது. நான் அவர்ட்ட பேசல. காங்கிரஸ் தலைவர் அவர்ட்ட பேசி எல்லாருடைய தலைவர்களுடைய கருத்தை எனக்குச் சொன்னார். ஒருமித்த கருத்துதான். அதைத்தான காங்கிரஸ் தலைவர் சொல்ல முடியும்.
மு.குணசேகரன்: கடந்த தேர்தல்களை ஒப்பிடுறப்ப, இந்தத் தேர்தல் கொஞ்சம் வித்தியாசமா இருக்குறது மாதிரி இருக்கு. முன்ன நேரடிப் போட்டி, இருமுனைப் போட்டி அப்படின்னு இருந்தது. இப்போ முழுக்கப் புதுப் பிளேயர் ஒருத்தர் வந்திருக்காரு.
ப.சிதம்பரம்: மூன்றாவதாக ஒரு கட்சி முளைத்திருக்கிறது. அதைத் தவிர்க்க முடியாது, அதை ஒதுக்க முடியாது. மூன்றாவதாக ஒரு கட்சி இருக்கு. அந்தக்கட்சிக்கு ஒரு பகுதி மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்பது தெரியுது. அந்தக் கூட்டங்கள் கூடும்போது இளைஞர்கள், பெண்கள் இருக்கிறார்கள் என்பது தெரியுது. ஆனா அந்தக்கட்சி என்பது திமுக தலைமையிலுள்ள கூட்டணியை வெல்ல முடியுமென்று எனக்குத் தோணல.
மு.குணசேகரன்: வெல்ற அளவுக்கு அவங்களுக்கு முதல் தேர்தல்லயே வாய்ப்பு இல்லன்னு நினைக்கிறீங்களா இல்ல…?
ப.சிதம்பரம்: இல்ல வாய்ப்பே கிடையாது. ஏன்னா அவர்கள் ஒரு கட்சி உருவாகணும். கட்சியெல்லாம் ஒரு மாசத்துல, ஒரு வருஷத்துல உருவாகுறது கிடையாது. கட்சின்னா அந்தப் பெயர்கள், கொடி, சின்னம் அதுமட்டும் கட்சி இல்ல. கட்சி அமைப்பு வேணும்ல? மாவட்ட அளவுல, ஒன்றிய அளவுல, பூத் அளவுல, வாக்குச்சாவடி அளவுல, கிராம அளவுல, பஞ்சாயத்து ஊராட்சி அளவுல கட்சியுடைய ஒரு அமைப்பு இருக்கணும். ஸ்டரக்சர்னு சொல்றோம், ஆர்கனைசேஷன். அது அந்தக் கட்சிக்கு இருப்பதாக எனக்குத் தெரியல.
மு.குணசேகரன்: இப்போ திமுக அணிக்கான ஒரு முதன்மையான போட்டியாளர், பிரைமரி சேலஞ்சரா யாரைப் பார்க்குறீங்க உங்க கூட்டணிக்கு?
ப.சிதம்பரம்: அதிமுக-தான். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். பாமக சேர்ந்திருக்கு. இப்ப அமமுக சேர்ந்திருக்கா? ஆமா, டிடிவி தினகரன் சேர்ந்திருக்காரு. அது ஒதுக்கக்கூடிய அணி அல்ல. அது வாக்குகள் உள்ள அணி. வாக்குகள் உள்ள கட்சிகள்தான் அந்த அணியை அமைத்திருக்கிறார்கள். அதுதான் பிரதான எதிர்க்கட்சியாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். பிரதான போட்டியாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்.
மு.குணசேகரன்: விஜய் சொல்றது மாதிரி தவெக-வுக்கும் திமுக-வுக்கும் போட்டின்னு அவர் ப்ரொஜெக்ட் பண்றது மாதிரி ஒரு சூழல்…
ப.சிதம்பரம்: தவெக-வுக்கும் திமுக-வுக்கும் போட்டி அல்ல. திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தனிக் கட்சி அல்ல. அது ஒரு கூட்டணி. ‘இந்தியா’ கூட்டணியுடைய தலைவர். அதனால அதுல 21, 22 கட்சி. அதை விட்டுருங்க. ஒரு பிரதான கட்சிகள், முக்கிய கட்சிகள் என்றாலே ஒரு ஐந்து ஆறு கட்சிகள் இருக்கு. அதே மாதிரி அதிமுக-ல நான்கு கட்சிகள் இருக்கு. தவெக தனிக் கட்சிதானே? அது தனிக் கட்சி மட்டுமல்ல, இதுவரை தேர்தல்ல, ஒரு இடைத்தேர்தல்ல கூட, ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபிக்காத கட்சி. அதனால தவெகவு-க்கும் திமுக-க்கும் போட்டி என்பது பொருள் இல்லாத பேச்சு.
மு.குணசேகரன்: ஆட்சி அதிகாரத்துல பங்கு தர்றோம் அப்படின்னு சொல்லியும் விஜய் பக்கம் கட்சிகள் நகராததுக்கு வெற்றி பெறுவாங்களா, அந்த கூட்டணியோட சேர்ந்தா ஜெயிக்க முடியும்னு நம்பிக்கை இல்லைன்றதுதான் அவரால ஒரு கூட்டணியை பார்ம் பண்ண முடியலையா?
ப.சிதம்பரம்: இல்லையே, என்னை விட அனுபவசாலிகள் தமிழ்நாட்டுல அரசியல் கட்சிகள்ல இருக்காங்க. நானே ஒரு கணிப்புக்கு வர்றேன்னா, ஒரு முடிவுக்கு வர்றேன்னா, அவர்களுக்கு ஸ்ட்ரக்சர் இல்ல, அமைப்பு இல்ல. கட்சி அமைப்பு இருந்தாதான் வெற்றி பெற முடியும்.
மு.குணசேகரன்: நீங்க இதை அதிமுக தலைமையிலான அணின்னு சொன்னாலும், மோதி தொடங்கி அமித்ஷா வரையில தேசிய ஜனநாயக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அப்படின்னு சொல்றாங்க.

ப.சிதம்பரம்: அதுல எல்லாம் பெரிய வித்தியாசத்தை கண்டு மக்களுக்கு சொல்ல முடியாது. மக்களுக்கு தேவை என்ன செய்வார்கள், என்ன செய்தார்கள், என்ன செய்வார்கள் அதான். எல்லாம் ரொம்ப அதாவது ஒரு யுகப் புரட்சி நடந்திருக்கு. இந்த 40, 50 ஆண்டுகள்ல யுகப் புரட்சி, அதை பார்க்குறாங்க இல்ல. 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி இருந்தது. வெவ்வேறு முதலமைச்சர்கள் – செல்வி ஜெயலலிதா, ஓபிஎஸ், ஈபிஎஸ் – வெவ்வேறு முதலமைச்சர்களா இருந்தாலும் 10 ஆண்டுகள் அவர்கள் இருந்தார்கள். இப்ப ஐந்து ஆண்டுகளாக மு.க. ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார். என்ன நடந்திருக்குன்னு தெரியுது இல்ல ஜனங்களுக்கு. இரண்டாவது வலைதளம் இருக்கு, தொலைக்காட்சி இருக்கு, வானொலி இருக்கு, பத்திரிகைகள் இருக்கு, முக்கியமாக சமுதாய வலைதளம், சமூக வலைதளம், சோசியல் மீடியா. அதை பார்த்து எல்லாரும் புரிஞ்சுக்குறாங்க. நீங்க வீட்ல இருக்குற ஒரு மூத்த பெண்மணிக்கு ஒன்றும் தெரியாதுன்னு நினைக்காதீங்க. தப்பு. அவங்களோட உட்கார்ந்து அஞ்சு நிமிஷம் பேசினா எல்லா விவரங்களும் தெரியும்.
மு.குணசேகரன்: தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்துக்கு வரக்கூடிய பிரதமர் நரேந்திர மோதி, அமித்ஷா.. பேசும்போது, தமிழ்நாடு வந்து ரொம்ப சீரழிஞ்சு போச்சு அப்படின்னு பேசுறாங்களே?
ப.சிதம்பரம்: தெரியாத மாதிரி நடிக்கிறாரு. அவர் எல்லா மாநில தேர்தல்களையும் பாருங்க. மேற்கு வங்காளத்துக்கு போனா இதுதான் மோசமான அரசு, இந்தியாவிலேயே மோசமான அரசு, இந்தியாவிலேயே ஊழலான அரசு அப்படின்னு சொல்லுவார். தமிழ்நாட்டுக்கு வந்தா தமிழ்நாட்டை பத்தி சொல்லுவார். பஞ்சாப்புக்கு போனா பஞ்சாப் அரசை பற்றி சொல்லுவார். கர்நாடகாவுக்கு போனா கர்நாடகத்தை பத்தி சொல்லுவார். கேரளாவுக்கு போனாரு, இதான் மோசமான அரசுன்னு சொல்லுவார். அவர் சொல்றதுல அப்படியே அவர் நம்பி சொல்றாருன்னா அர்த்தம் இல்லை. அவர் அந்த சூழ்நிலைக்காக தேவைக்காக சொல்றார். அப்படி ஒரு பிரதமர் பேசக்கூடாது. நீங்களும் நானும் பேசலாம், பிரதமர் பேசக்கூடாது.
மு.குணசேகரன்: அதிமுக ஒரு அசாதாரணமான நம்பிக்கையில இருக்கு, மோதி அவர்களுடைய ஆதரவு இருக்கு அப்படின்னு நம்புறாங்க.
ப.சிதம்பரம்: காலப்போக்குல கூட்டணி கட்சிகளையெல்லாம் முழுங்கிடுவாங்க. பாரதிய ஜனதா கட்சிங்கறது ஆக்டோபஸ் மாதிரி. அதுக்கு பல கால்கள் இருக்கின்றன, அதை விரிச்சு கிட்டே போகும்.
மு.குணசேகரன்: இரண்டு கேள்விகளைச் சேர்த்து கேட்கணும் சார். ஒன்று, நீங்கள் முதல்ல சொன்ன ஒரு பாயிண்ட் – ஒரு எதிர்க்கட்சியா இருந்து ஒரு கட்சி தேர்தலைச் சந்திக்குதுன்னா, அவங்களுக்கு வந்து கனவுகளை விதைச்சா போதும். நீங்க என்ன இந்த ஐந்து வருஷம் செஞ்சீங்கன்ற கேள்விக்கு பதில் சொல்லத் தேவையில்லை. ஆட்சியின் மேல குற்றப்பத்திரிகை வாசிச்சா போதும். ஆட்சியிலிருந்து தேர்தலைச் சந்திக்கும்போது அதுக்கு ஒரு சவால் இருக்கு. மக்களுடைய எதிர்பார்ப்பு அதிகமாகுது. Meeting the aspirations, அவங்க expectation-அ சேலஞ்ச் பண்றதுதான், அதை மீட் பண்றதுதான் ஒரு பெரிய சேலஞ்ச். அந்த இடத்துல தமிழ்நாட்டு மக்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யற இடத்துல இன்னைக்கு . ஸ்டாலின் இருக்காரா? அவருடைய ஐந்தாண்டு கால ஆட்சி எப்படி மதிப்பிடுறீங்க?

ப.சிதம்பரம்: மு.க. ஸ்டாலினுடைய ஐந்தாண்டு ஆட்சியைப் பற்றி பொதுவாக மக்கள் மத்தியில நிறைவு இருக்கிறது என்றுதான் நான் நம்புறேன். ஐந்தாண்டு காலத்துல கல்வி, மருத்துவத் துறையில நிறைய முதலீடு செய்திருக்கிறார்கள். அதனாலதான் இப்ப தமிழ்நாட்டுல மட்டும் தான் நினைக்கிறேன், கேரளாவுலயும் – ஏறத்தாழ நூற்றுக்கு நூறு குழந்தைகள் மருத்துவமனையிலதான் பிறக்குறாங்க. ‘Institutional birth’ அப்படின்னு சொல்லுவாங்க. ஒரு மருத்துவமனையில ஒரு பயிற்சி பெற்ற மருத்துவர் அல்லது செவிலியருடைய கண்காணிப்புலதான் பிறக்குறாங்க. அதனாலதான் maternal mortality rate/ratio, அதாவது லட்சம் பேருக்கு எத்தனை தாய்மார்கள் பிள்ளைப்பேறு காலத்துல இறக்குறாங்கங்கிறது முப்பத்தைஞ்சுதான். அதே மாதிரி infant mortality rate… 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் இறக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் 1000 பேருக்கு 13 குழந்தைகள் தான் இறக்கின்றன. பீகாரில் 27, அதாவது இரண்டு மடங்கு.
மு.குணசேகரன்: நேற்று நீங்கள் பேசிய அந்த கூட்டத்தில் அதிமுக – பாஜக கூட்டணி சேர்ந்தது பாஜக எந்த இடத்திற்கு போகிறதோ அதேபோல அதிமுகவும் பஸ்பமாகிவிடும் என்று சொன்னீர்கள். 2026 தேர்தலுக்கு பிறகு என்ன ஆகும்?
ப.சிதம்பரம்: உண்மைதானே! நேற்று என்ன ஆச்சு நிதீஷ் குமார்? நவம்பரிலேயே நான் எழுதினேன், சொன்னேன். நிதீஷ் குமார் நீண்ட காலத்திற்கு முதலமைச்சராக இருக்க முடியாது என்று. நிதீஷ் குமாரை முழுங்கி விடுவார்கள். நிதீஷ் குமார் ஸ்வாகா ஆகிவிடுவார் என்று சொன்னேன். அதுதானே நடந்திருக்கிறது? 100 நாள் வேலைத் திட்டம் அவ்வளவுதான். 100 நாள் வேலைத் திட்டம் முடிந்து போச்சு. 100 நாள் முடிந்துவிட்டது. இனி ராஜினாமா தான்.
மு.குணசேகரன்: எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொல்கிறார்கள் “என்னை முதலமைச்சர் ஆக்குவதற்கு தான் அவர்கள் முன்வந்திருக்கிறார்கள்”. எங்களுடைய ஆட்சிக்கு கடந்த காலத்தில் உறுதுணையாக இருந்தார்கள். நான்தான் முதலமைச்சர் வேட்பாளர், அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? அதிமுக தனிப் பெரும்பான்மை பெறும். ஏன் பாஜகவை காட்டி பயமுறுத்துகிறீர்கள் என்று கேட்கிறார்.
ப.சிதம்பரம்: பாஜக இல்லாமல் நிற்கட்டுமே. யார் வேண்டாம் என்கிறீர்கள்? தமிழ்நாட்டில் மற்ற பாரதிய ஜனதா கட்சியைத் தவிர அத்தனை கட்சிகளையும் சேர்த்து ஒரு கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வரட்டுமே. வேண்டாம் என்று சொல்லவில்லையே. எம்.ஜி.ஆர் அப்படிச் செய்தார், செல்வி ஜெயலலிதா அவர்கள் செய்தார்கள். ஏன் பாரதிய ஜனதா கட்சியை சேர்த்துக் கொள்கிறீர்கள்? பாரதிய ஜனதா கட்சியின் மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறீர்களா? பாரதிய ஜனதா கட்சியின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? நீட் தேர்வை ஏற்றுக் கொள்கிறோம், இந்துத்துவ கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம், ஒரே நாடு ஒரே தேர்தலை ஏற்றுக் கொள்கிறோம், பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லட்டுமே.
மு.குணசேகரன்: கொள்கை வேற வேற தான். தேர்தலுக்காக சேர்ந்திருக்கிறோம். எங்களுடைய நோக்கமே திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்காக நாங்கள் யாரை வேண்டுமானாலும் சேர்ப்போம். உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார்கள்.
ப.சிதம்பரம்: அப்புறம் என்ன பண்ணுவீங்க? தப்பித் தவறி ஆட்சிக்கு வந்துட்டீங்கன்னா… ஹிந்தி மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்வீர்களா? நீட் தேர்வை நிரந்தரமாக ஏற்றுக் கொள்வீர்களா? ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் வரப்போகிறது. இந்த வருடம் வராவிட்டாலும் 2029-க்குள் கண்டிப்பாக வந்துவிடும். அதை ஏற்றுக் கொள்வீர்களா? சொல்லுங்கள்.
மு.குணசேகரன்: அதிமுக ஒரு அசாத்தியமான நம்பிக்கையில் இருக்கிறது. எங்களுக்கு மோடி அவர்களுடைய ஆதரவு இருக்கு என்று நம்புகிறார்கள். நீங்கள் பாஜக யாரோடு சேர்கிறதோ அவர்கள் பஸ்பமாகி விடுவார்கள் என்று சொல்கிறீர்கள்.
ப.சிதம்பரம்: அப்படித்தான். காலப்போக்கில் அவர்கள் அந்த கூட்டணி கட்சிகளை எல்லாம் முழுங்கி விடுவார்கள். இதே அச்சம் எடப்பாடி பழனிச்சாமிக்கும் வேண்டும். சந்திரபாபு நாயுடுக்கும் வேண்டும். கடந்த காலத்தில் என்ன நடந்திருக்கிறது? ஒரிசாவில் என்ன நடந்தது? பஞ்சாபில் என்ன நடந்தது? அகாலிதளம் இப்போது சுவடே கிடையாது.
மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது? முதலமைச்சராக இருந்தவரை துணை முதலமைச்சர் ஆக்கிவிட்டார்கள். இன்னும் இரண்டு வருடம் கழித்து அவர் துணை முதலமைச்சராக இருப்பார் என்று கூட சொல்ல முடியாது.
பாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு ஆக்டோபஸ் (Octopus) மாதிரி. அதற்கு பல கால்கள் இருக்கின்றன. அதை விரித்துக் கொண்டே போகும். ஆக்டோபஸ் என்பது தவறான வார்த்தை இல்லை. தவறாக அர்த்தம் பண்ணிக்க வேண்டாம். அது பல கால்கள் உள்ள ஒரு ஊர்ந்து சொல்லக்கூடிய ஒரு பிறப்பு. அது எல்லா திசைகளிலும் விரிக்கும். அப்படி வரும்போது சின்ன சின்ன கட்சிகள் எல்லாம் முழுங்கி விடும்.

மு.குணசேகரன்: அதிமுக ஒரு பெரிய கட்சி. அதை முழுங்க முடியாது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ப.சிதம்பரம்: பெரிய கட்சியாகத் தொடர்ந்து இருந்தால் தானே! இப்போது அதிமுக எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்த பலத்திலா எடப்பாடி பழனிச்சாமி காலத்தில் இருக்கிறது? இல்லையே. ஒரு காலத்தில் அவர் 140, 135, 140 இடங்களில் இருந்தார். போன தடவை 66 தானே வந்தது. இந்த தடவை 66 வருமா?
குறைஞ்சிருச்சுன்னா… குறைஞ்சிருச்சுன்னா… எனக்குச் சொல்லத் தெரியல… குறைஞ்சிருச்சுன்னா பாரதிய ஜனதா கட்சி கால் எடுத்து வச்சிருச்சுன்னா… கால் பதிச்சிருச்சுன்னா… கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவுடைய… அதிமுகவை கரைக்க ஆரம்பிப்பாங்க. அது கரைந்தால்தானே இவங்க வளர முடியும்?
மு.குணசேகரன்: இந்தத் தேர்தலுடைய முதன்மையான விஷயமா என்ன சார் இருக்கும்? தமிழ்நாடு தேர்தலுடைய தலையாய கேள்வியாக என்ன இருக்கும்? தலையாய பிரச்சனையாக என்ன இருக்கும்?
ப.சிதம்பரம்: தலையாய கேள்வி… என்னைப் பொறுத்தவரைக்கும் தலையாய கேள்வி… மத்திய அரசு தடைகளை மீறி தமிழ்நாட்டுல சுயமரியாதையுடன், சுயாட்சியுடன் ஒரு ஆட்சி நடத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து இதே வேகத்துல வளர்க்க முடியுமா என்பதுதான் கேள்வி.
பாரதிய ஜனதா கட்சி – அதிமுக கூட்டணி அரசு அமைந்திருந்தால் – அமையாதுன்னு நான் நம்புறேன் – அமைந்தால், மாசம் மூணு தடவை முதலமைச்சர் அவர்கள்… அந்த அதிமுக முதலமைச்சர் அவர்கள் டெல்லியில்தான் முகாம் இடணும். அவர்கள் தான் நடத்துவாங்க, அதுல ஒண்ணும் சந்தேகமே கிடையாது. அவர்கள் அதிகாரிகள் மூலமா, ஆளுநர் மூலமாக, சில அமைச்சர்கள் மூலமாக எப்படி நடத்தணும் அப்படின்னு அரசாங்கத்தை நடத்துவாங்க.
மு.குணசேகரன்: அப்போ செயின்ட் ஜார்ஜ் கோட்டை வந்து டெல்லி கண்ட்ரோலுக்கு போயிரும்ன்றீங்க?
ப.சிதம்பரம்: செயின்ட் ஜார்ஜ் கோட்டையெல்லாம் நீங்க கற்பனையில பாக்குறீங்க… உள்துறை அமைச்சர், பிரதம அமைச்சர் சொல்றபடிதான் அரசு நடக்கும். எல்லாத் திட்டங்களுக்கும் எல்லா கொள்கைகளுக்கும் அங்க தொலைபேசி மூலமாக கேட்டுத்தான் பண்ண முடியும். சுதந்திரமாக ஒரு அரசு நடக்காது.
மு.குணசேகரன்: இதுல திரு. ஸ்டாலின் எங்க நிக்கிறார்? திரு. எடப்பாடி பழனிசாமி எங்க நிக்கிறார்?
ப.சிதம்பரம்: மு.க. ஸ்டாலின் அவர்கள் உறுதியாக நிற்கிறார். தமிழ்நாட்டுல நம்முடைய ஆட்சி, தமிழர்களுடைய ஆட்சி, தமிழ்நாடு நலன் காக்கக்கூடிய ஆட்சி நடத்த வேண்டும், சுயமரியாதையோடு நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமி அவர்கள் எப்படியாவது முதலமைச்சர் ஆயிடணும், அதுக்காக எந்த அளவுக்குத் தாழ்ந்து போகணுமோ, பணிந்து போகணுமோ பணிந்து போகலாம். பாரதிய ஜனதா கட்சியுடைய அதிகாரம், பணம், நெளிவு சுளிவெல்லாம் கிடைச்சா போதும், எப்படியாவது தேர்தலிலே வென்று முதலமைச்சராக ஆக வேண்டும் என்று சொல்கிறார். பாரதிய ஜனதா கட்சி அங்க, இங்கயும் பாரதிய ஜனதா கட்சியோட கட்டுப்பாட்டுக்குள்ள அரசுன்னா அது டபுள் இன்ஜின் அரசு அல்ல, அடிமை அரசு. அடிபணிந்து போகிற அரசு. அடிபணிந்து போகிற அரசா? சுயமரியாதையோடு இருக்கிற அரசா? அதான் கேள்வி. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
