6 ஆண்டுகளாக தமிழ்நாட்டையே அதிரவைத்த வழக்கு…யார் இந்த நிர்மலா தேவி? இந்த வழக்கில் என்ன நடந்தது?

Published On:

| By vivekanandhan

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டையே அதிரவைத்த நிர்மலா தேவி வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யார் இந்த நிர்மலா தேவி, இந்த வழக்கில் என்ன நடந்தது, தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஏப்ரல் 15, 2018 அன்று ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கியது. அந்த தொலைபேசி ஆடியோவில் ஒரு கல்லூரி பேராசிரியை தன்னிடம் படிக்கும் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்துக் கொண்டிருந்தார்.

அதற்கு அந்த மாணவிகள் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்த போதும், தொடர்ச்சியாக அந்த மாணவிகளிடம் உங்களுக்கு மாதம்தோறும் சம்பளம் கிரெடிட் ஆகிற மாதிரி பணம் வந்துடும், எக்சாம், ரிசல்ட் எல்லாத்தையும் பாத்துக்கலாம், நல்ல opportunity…இது மாதிரி யாருக்கும் கிடைக்காது…யோசித்து சொல்லுங்க என்று மாணவிகளை பாலியல் தொழிலுக்கு வருமாறு வற்புறுத்திக் கொண்டே இருந்தார் அந்த பேராசிரியை.

அந்த பேராசிரியை தான் இன்று குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிற நிர்மலா தேவி.

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெரிய தொடர்புகளை வைத்திருந்தவர்.

பல்கலைக்கழகத்தின் பெயரை சொல்லித்தான் மாணவிகளை பாலியலுக்கு அழைத்துக் கொண்டிருந்தார்.

யார் கூப்பிட்டதுன்னு பெயரை மட்டும் சொல்ல மாட்டேன், ஆனா ரொம்ப பெரிய இடம்…அதனால தான் உங்ககிட்ட சொல்றேன் என்று சொல்லி விட்டு “கவர்னர் லெவல்” என்ற வார்த்தையை மாணவிகளிடம் பயன்படுத்தினார். இதுதான் இந்த விவகாரத்தில் புயலைக் கிளப்பியது.

ஆனால் மாணவிகள் இதற்கு மேல் இதைப் பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி விட்டனர். அவர்களிடம் இதைப்பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்ற உறுதிமொழியை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தார் நிர்மலா தேவி.

இந்த ஆடியோ வெளியான பிறகு பெற்றோர்கள், மாணவர்கள், எஸ்.எஃப்.ஐ போன்ற மாணவர் அமைப்புகள், மாதர் சங்கம் என பலரும் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து ஏப்ரல் 16, 2018 அன்று நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவியை விசாரித்ததில், பல பெரிய தலைகளுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாக தெரிய வந்ததால், இந்த வழக்கு அடுத்த நாளே சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தராக இருப்பவர் ஆளுநர் தான் என்பதால், கவர்னர் லெவல் என்று நிர்மலா தேவி சொன்ன வார்த்தைகளை முன்வைத்து ஆளுநர் மாளிகையை மையப்படுத்தி பல விவாதங்கள் எழ ஆரம்பித்தன.

இதன் காரணமாக நிர்மலா தேவி விவகாரத்தில் ஏப்ரல் 19, 2018 அன்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் தனியாக ஒரு விசாரணைக் குழுவை ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் நியமித்தார்.

சிபிசிஐடி போலீஸ் இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்ச்சியாக பலரிடமும் விசாரணை நடைபெற்ற இந்த வழக்கில் நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என்று 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

2018 அக்டோபர் மாதத்திலிருந்து  ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்துவந்த நிர்மலா தேவி உள்ளிட்ட மூவருக்கு 2019 மார்ச் 12 அன்று மதுரை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மூவரும் வெளியில் வந்த நிலையில் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நீதிமன்றத்தில் ஆஜராகும் போது நிர்மலா தேவி மொட்டையடித்துக் கொண்டு வந்து மனநிலை சரியில்லாமல் போய்விட்டதாகச் சொல்வது, சாமியாடுவது என நிர்மலா தேவி விவகாரம் அடுத்த பல ஆண்டுகளுக்கு தொடர் விவாதமாகவே இருந்து வந்தது.

 v

இந்நிலையில் இந்த மாதம் ஏப்ரல் 26 அன்று நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தீர்ப்பு நாளான அன்று நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

முருகன் மற்றும் கருப்பசாமி இருவர் மட்டுமே ஆஜரானார்கள். உடல்நலக் குறைவு காரணமாக நிர்மலா தேவி ஆஜராகவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதன் காரணமாக நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பு 29 ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்ததுடன், அன்று நிர்மலா தேவி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஏப்ரல் 29 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிபதி பகவதி அம்மாள், நிர்மலா தேவி குற்றவாளி என்பதை உறுதி செய்தார். நிர்மலா தேவி குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரது தண்டனை குறித்த விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று நீதிமன்றத்தில் நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், “நிர்மலா தேவியால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் புகார் அளித்த மாணவிகள் சமூகத்தில் எந்த வகையிலும் ஒடுக்கப்படவும் இல்லை, ஒதுக்கப்படவும் இல்லை. அவர்கள் சராசரி மனிதர்களாகவே இயல்பாக வாழ்ந்து வருகின்றனர். நிர்மலா தேவியால் அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. எனவே அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். நிர்மலா தேவி செய்த செயலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகள் எந்த வகையிலும் நேரடியாக பாதிக்கவில்லை. அதனால் அவருக்கு 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க வேண்டும்” எனக் கேட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், “இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகளில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான சில உத்தரவுகளை வழங்கி இருக்கின்றது. அதன் அடிப்படையில் இந்த நீதிமன்றம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். துன்புறுத்தும் வகையில் பேசி குற்றத்துக்கு அழைத்ததே குற்றம்தான். சாட்சிகளிடம் விசாரணை முறையாக நடைபெற்றுள்ளது. எனவே, இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிர்மலா தேவிக்கு எந்த வகையிலும் தண்டனையை குறைத்து விடக் கூடாது என்பது தான் எங்கள் தரப்பு வாதம்” என்று கூறினார்.

இதனையடுத்து தீர்ப்பை அறிவித்த நீதிபதி பகவதி அம்மாள், ஐந்து பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ள நிர்மலா தேவிக்கு தண்டனைகளை அறிவித்தார்.

அதன்படி,

  • பிரிவு 370(1) ன் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம்.
  • பிரிவு 370(3) ன் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம்
  • Immoral traffic Prevention Act-ன் பிரிவு 5(1)(a) ன் கீழ் 5ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம்.
  • அதே ITP சட்டத்தின் பிரிவு 9 ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10000 ரூபாய் அபராதம்.
  • ஐடி சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம்.

தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்று நீதிபதி சொல்லியிருப்பதால் 10 ஆண்டுகள் நிர்மலா தேவி சிறையில் கழிக்க வேண்டும். தண்டனையில் அவர் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை கழித்துக் கொள்ளலாம். மேலும் அவருக்கு மொத்தமாக 2,42,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் நிர்மலா தேவி.

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த நிர்மலா தேவிக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் நிர்மலா தேவி யாருக்காக மாணவிகளை பாலியலுக்கு அழைத்தார் என்பது மட்டும் இன்னும் வெளிவராத ரகசியமாகவே இருக்கிறது என்பது கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

என்னுடைய சீக்ரெட் ஆஃப் எனர்ஜி இதுதான்: மனம் திறந்த மோடி

தண்ணீர் பந்தல் வைப்பதிலும் கோஷ்டி மோதல்! எடப்பாடியிடம் போன பஞ்சாயத்து!

கஞ்சா பொட்டலத்துடன் மனு : பாஜக நிர்வாகி சிறையிலடைப்பு!

நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சிபிசிஐடி சம்மன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share