சட்டமன்றத்தில் நேற்று (ஏப்ரல் 16) சமூக நலத்துறை, செய்தித்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது. What happened in assembly
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரை சித்திரை திருவிழா குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு, ”கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள். ஆனால், அந்த துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இல்லை” என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், “இதுகுறித்து நான் ஏற்கனவே இரண்டு முறை பேசியிருக்கிறேன். சட்டமன்றத்தை அதிகாரிகள் மதிக்க வேண்டும். எந்த துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் வருகிறதோ, அந்த துறை சார்ந்த அதிகாரிகள், அவைக்குள் இருக்க வேண்டும். அருகில் உள்ள அறைகளில் இருக்கக்கூடாது” என்று தெரிவித்தார்.
சபாநாயகரின் அறிவுறுத்தலுக்கு பிறகு, ஐஏஎஸ் அதிகாரிகள் சட்டமன்றத்திற்குள் வந்து தங்கள் இருக்கையில் அமர்ந்து அவை நடவடிக்கையில் பங்கேற்றனர்.
சட்டமன்றத்தில் நடந்த இந்த சூடான விவாதம் தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம்…
“தமிழக அரசின் 30 செயலாளர்களும் அசெம்ப்ளி நடக்கும்போது உள்ளே உட்கார முடியாது. அனைவரும் சட்டமன்றத்திற்கு சென்றால், அரசு பணிகள் முடங்கி போய்விடும். அதனால் மானியக்கோரிக்கையின் மீதான விவாதம் நடக்கும் போது, அந்தந்த துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அவையில் இருப்பார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் முன்கூட்டியே என்னென்ன கேள்வி எழுப்ப போகிறார்கள் என்ற விவரங்களும் ஓரளவுக்கு அதிகாரிகளுக்கு வந்துவிடும். அவர்களும் அதுதொடர்பாக பதில் தயாரித்து அமைச்சர்களிடம் கொடுத்து விடுவார்கள்.
சட்டமன்றத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மட்டும் தான் பேச முடியுமே தவிர, அதிகாரிகள் பேச முடியாது.
மேலும், முதல்வரின் முக்கிய அதிகாரிகள், செயலாளர்கள் சட்டமன்றத்தில் குவிந்திருக்க வேண்டாம், துறைசார்ந்த அதிகாரிகள் மட்டும் இருந்தால் போதும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி துறை சார்ந்த அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். நேற்று கூட சட்டமன்றத்தில் இந்த பிரச்சனை நடந்தபோது அவையில் அதிகாரிகள் இருந்தார்கள்” என்கிறார். What happened in assembly
