சந்தைக்கு வந்த தாய்ப்பால்… எங்கே போகிறது தமிழ்நாடு? ஷாக் ரிப்போர்ட்!

Published On:

| By Selvam

இந்த உலகில் பிறக்கும் பச்சிளம் குழந்தையின் முதல் உணவு ஆதாரம் என்பது தாய்ப்பால் தான். இதனால் தான் அதை  திரவ தங்கம் அதாவது லிக்விட் கோல்ட் என்கிறார்கள். தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தான கொழுப்பு, புரதம், தாதுக்கள், உயிர்ச்சத்துக்கள் உள்ளன. தூய்மையான உணவு என்றால் அது தாய் பால் தான்.

அப்படிப்பட்ட தாய்ப்பாலை சட்டவிரோதமாக தலைநகர் சென்னையில் உள்ள ஒரு சிறிய மருந்து கடையில் விற்பனை செய்து வந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் முக்கியமான பேசுபொருளாகவும், தாய்ப்பாலின் அவசியம் குறித்த உரையாடலையும் ஒருசேர எழுப்பியுள்ளது.

என்ன தான் நடந்தது?

சென்னை மாதவரம் கே.கே.ஆர்.கார்டன் பகுதியில் செம்பியன் முத்தையாவுக்கு சொந்தமான லைஃப் வேக்‌ஷின் ஸ்டோர் புரோட்டீன் மருந்துக்கடை இயங்கி வருகிறது.

இங்கு சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை நடந்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைதொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில், மாதவரம் உணவு பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி உள்ளிட்டோர் அடங்கிய டீம் புரோட்டீன் மருந்து கடையில் மே 31-ஆம் தேதி சோதனை நடத்தினர்.

அப்போது தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. கடையில் இருந்த 90-க்கும் மேற்பட்ட 100 மி.லி அளவு கொண்ட தாய்ப்பால் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.

இதில் 40-க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் லேபில் ஒட்டாமலும், பதப்படுத்தப்படாமலும் இருந்தது தெரியவந்துள்ளது. உரிமையாளர் செம்பியன் முத்தையாவிடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இன்வஸ்டிகேஷன் செய்து வருகின்றனர்.

தாய்ப்பால் விற்பனை சட்டவிரோதம்!

இதுதொடர்பாக திருவள்ளூர் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறும்போது,

“கடந்த 10 நாட்களுக்கு முன்பாக மாதவரம் கே.கே.ஆர் கார்டன் பகுதியில் உள்ள மருந்து கடையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பதாக மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.

கடந்த ஒரு வாரகாலமாக எங்களுக்கு எந்தவிதமான துப்பும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் தான் தற்போது சோதனை நடத்தினோம்.

திருவள்ளூர் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ்

தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ததை கண்டறிந்தோம். சில பாட்டில்களில் தாய்ப்பால் கொடுத்தவர்களின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு நோட்டை பறிமுதல் செய்திருக்கிறோம். அந்த நோட்டில் யார் யாரிடம் இருந்து தாய்ப்பால் பெறப்பட்டது என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அதில் 50 பேரின் பெயர் இருக்கிறது. புரோட்டீன் பெளடர்ஸ் விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு துறையில் லைசன்ஸ் வாங்கியிருக்கிறார்கள்.

அதில் சிலருக்கு நாங்கள் போன் செய்தோம். சிலர் போனை எடுக்கவில்லை. அவர்களிடம் விசாரித்தால் தான் இந்த தாய்ப்பால் எங்கிருந்து பெறப்பட்டது என்பது முழுமையாக தெரியவரும். யாருக்கும் பில் போட்டு விற்பனை செய்யவில்லை.

மூன்று மாதமாக தாய்ப்பால் விற்பனை செய்துவருவதாக சொல்கிறார். 100 மி.லி பாட்டில் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தாய்ப்பால் விற்பனை செய்தவர்களை நேரடியாக சென்றடைந்து அவர்களிடம் தாய்ப்பால் பாட்டில் திரும்ப பெறப்படும். இதையெல்லாம் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு பகுப்பாய்வு கூடத்திற்கு ஆய்வுக்காக சேம்பிள்ஸ் அனுப்பியிருக்கிறோம். இந்த ஆய்வின் முடிவில் அதன் உண்மைத்தன்மை தெரிந்துவிடும்.

தாய்ப்பாலை விலைக்கு சந்தைப்படுத்துவதை உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை செய்துள்ளது. அப்படி தடை செய்த பொருளை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய முடியாது.

இந்த ஆய்வின் முடிவுகள் வந்தபிறகு, உணவு பாதுகாப்புத்துறை ஆணையரிடம் பரிந்துரை செய்து முத்தையா மீது குற்றவழக்கு தொடரப்படும்” என்றார்.

உரிமையாளர் முத்தையா சொல்வது என்ன?

உரிமையாளர் முத்தையா,

“நான் எம்.எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படித்திருக்கிறேன். ஏற்கனவே தாய்ப்பால் விற்னை செய்த ஒரு கம்பெனியில் வேலை பார்த்தேன். அங்கு தாய்ப்பாலை 1500 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். அனைத்து குழந்தைகளுக்கும் குறைந்த விலையில் தாய்ப்பால் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் 500 ரூபாய்க்கு தாய்ப்பால் விற்பனை செய்து வருகிறோம்.

உரிமையாளர் முத்தையா

மூன்று பேரிடம் மட்டுமே நாங்கள் தாய்ப்பால் வாங்கினோம். அந்த டீட்டைல்ஸ் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டேன். தாய்ப்பால் விற்பனையை தடை செய்திருப்பது கடந்த மாதம் தான் எனக்கு தெரியவந்தது. அதனால் தாய்ப்பால் விற்பனையை நாங்கள் நிறுத்திவிட்டோம்” என்றார்.

சென்னையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்தது கண்டறியப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் இந்த சோதனையானது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 18 டீம் போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை நடைபெற்றால், 9444042322 மற்றும் 9444811717 என்ற எண்ணுக்கு புகாரளிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தாய்ப்பால் வாங்குவது எப்படி?

மருத்துவ சிகிச்சையின் போது ஒருவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டால், ரத்த வங்கியில் சென்று ரத்தம் வாங்குகிறோம். அதைபோல, பிறந்த பச்சிளம் குழந்தைகளின் அம்மாவுக்கு பால் சரியாக சுரக்கவில்லை என்றால், தாய்ப்பால் வங்கியில் சென்று பால் வாங்கிக்கொள்ளலாம்.

இந்தியாவில் முதன்முறையாக 1989-ஆம் ஆண்டு மும்பையில் தாய்ப்பால் வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 45 தாய்ப்பால் வங்கிகள் இருக்கிறது. அதில் 35 வங்கிகள் மருத்துவ கல்லூரிகளில் உள்ளது.

குறைந்த எடையில் பிறந்த குழந்தைகள்,  மார்பக கேன்சர், ஹெச்ஐவி ட்ரீட்மெண்டில் இருக்கும் குழந்தைகளின் தாய்மார்கள் தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் பெற்றுக்கொள்ளலாம்.

தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய பிறகும், சில தாய்மார்களுக்கு அதிகளவில் பால் சுரக்கும். அவர்கள் தாய்ப்பாலை டொனேட் செய்யலாம்.

இதற்காக என்ஜிஓ இருக்கிறார்கள். அவர்கள் தாய்ப்பால் தானமாக கொடுக்க விரும்பும் தாய்மார்களை தொடர்புகொண்டு, அவர்களிடம் இருந்து தாய்ப்பால் சேகரித்து வங்கியில் கொடுப்பார்கள்.

அதனை தாய்ப்பால் வங்கியில் சோதனை செய்து -20 டிகிரி செல்சியஸில் பதப்படுத்தி குழந்தைகளுக்கு விற்பனை செய்வார்கள். இந்த தாய்ப்பாலை ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம். குழந்தைகள் நல மருத்துவரின் ப்ரிஸ்கிரிப்ஷன் வைத்திருந்தால் மட்டுமே தாய்ப்பால் வாங்க முடியும். இது மிகவும் பாதுகாப்பானது.

தாய்ப்பாலை வணிக சந்தையில் விற்பது தடை செய்யப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் அதனை தாய்மார்கள் வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே மருத்துவர்களின் எச்சரிக்கை.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோலி சிறந்த வீரர் தான், ஆனால்…. – கங்குலி சொன்ன குட் ஐடியா!

இறுதிக்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் – 1 மணி நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share