சட்டமன்றத்தில் துரைமுருகன் சொன்ன சென்னாரெட்டி ஃப்ளாஷ் பேக்… ஆர்.என். ரவிக்கு எச்சரிக்கையா? என்ன நடந்தது அன்னிக்கு!

Published On:

| By Aara

இன்று (ஜனவரி 6) ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரில் உரையாற்ற  வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி.  தேசிய கீதம் சட்டமன்றத்தில்  அவமதிக்கப்பட்டதாக சொல்லி வெளியேறினார்.

இதையடுத்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.

அதற்குப் பிறகு அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் எழுந்து நின்று உரையாற்றினார்.   அதாவது  அச்சடிக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆளுநர் உரையை அவை பதிவில் ஏற்றும்படி வேண்டுகோள் வைத்து அவை எண் 17 ஐ தளர்த்தி தீர்மானம் கொண்டு வந்தார் துரைமுருகன். அது ஒரு மனதாக நிறைவேறியது.

அதற்கு முன்பு துரைமுருகன் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில் முக்கியமான ஒரு ஃப்ளாஷ்பேக் சம்பவத்தைக் கூறினார்.

 “இன்று  ஆளுநர் உரையின் தொடக்கத்தில் நடந்த சில சம்பவங்கள் தொடர்பாக பின் வரும் விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

2023 இல் ஜனவரி 9  ஆம் தேதியன்று மாண்புமிகு ஆளுநர்  பேரவையில் உரையாற்றியபோது… ஏற்கனவே அவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையில் இருந்து சில பகுதிகளை வேண்டுமென்றே  விடுத்தும், சில பகுதிகளை சேர்த்தும் உரையாற்றினார்.  தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் கண்ணியத்தை காக்கும் வகையில் அப்போது ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆளுநர் உரையை அவைக்குறிப்பில் ஏற்றி  முதல்வர் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அது ஆளுநருக்கு புரிந்திருக்காது.

2024 பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் பேரவையில் உரையாற்றியபோது இதே முறை தொடர்ந்ததால், அன்று என்னால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்ற துரைமுருகன் சட்டமன்றத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக்கை கூறினார்.

“1995 இல் அரசு ஒரு  அரசினர் தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அப்போதைய ஆளுநர் டாக்டர் சென்னாரெட்டியை திரும்பப் பெறுமாறு தீர்மானம் கொண்டுவந்தது. அதன் பிறகும் கூட 1996 இல் சென்னாரெட்டி ஆளுநர் உரையை வாசித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.

ஆளுநர் சென்னாரெட்டிக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் 1993-96 ஆண்டுகளில் அப்படி என்னதான் நடந்தது என்று பார்க்கலாமா?

1993 ஆகஸ்ட் மாதம் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து மாநில நிர்வாகம் உடனடியாகத் தெரிவிக்கத் தவறியதாக ஆளுநர்  சென்னா ரெட்டி  அதிருப்தி தெரிவித்தார்.

அதன் பின்னர்  1993 செப்டம்பரில் பழனி மக்களவை மற்றும் ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது சட்டம் ஒழுங்கு குறித்த அறிக்கையை நேரடியாகத் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலாளர் டி.வி. வெங்கடராமனுக்கு உத்தரவு போட்டார் ஆளுநர் சென்னாரெட்டி.  அப்போது ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த  எஸ்.டி. சோமச்ந்தரம்,  “தமிழ்நாட்டுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இருக்கிறார். ஆளுநர் என்ன சூப்பர் முதலமைச்சரா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதனால்  அதிமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் அதிகரித்தது. இதை அடுத்த லெவலுக்கு இட்டுச் சென்றது ஆளுநரின் இன்னொரு நடவடிக்கை. சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு  அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலை ஆளுநர் நிராகரித்தார்.

இதற்கு மேலும் சும்மா இருக்க முடியாது என வெகுண்டெழுந்த முதல்வர் ஜெயலலிதா… தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே ஆளுநர் சென்னா ரெட்டியை  மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை அரசினர் தீர்மானமாகக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

1995 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, “ஆளுநர் சென்னா ரெட்டி என்னை வெளிப்படையாக அவமதிக்கிறார். இதுமட்டுல்ல… ஆகஸ்ட் 1993 இல் ராஜ்பவனில் அவரைச் சந்தித்தபோது கண்ணியமின்றி நடந்து கொண்டார்” என்று பரபரப்பான  குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.

அதே நாளில் சென்னையிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள திண்டிவனத்தில் சென்று கொண்டிருந்த ஆளுநர் சென்னாரெட்டியின் கான்வாய் அதிமுக தொண்டர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.

முதலமைச்சருக்கு எதிரான ஆளுநரின் நடவடிக்கையின் உச்சக்கட்டம், டான்சி நிலம் மற்றும் நிலக்கரி இறக்குமதி தொடர்பான வழக்குகளில் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர மார்ச் 1995 இல் அவர் அனுமதி அளித்ததுதான்.

ஆனால் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த ஆண்டின் முதல் சட்டமன்றத்தில் ஆளுநர் சென்னாரெட்டி  ஆற்றிய உரையில், ஜெயலலிதாவின் “ஊக்கமளிக்கும் தலைமைத்துவத்திற்காக” அவரைப் பாராட்டினார்.

இந்த ஃப்ளாஷ்பேக்கைதான் இன்று சட்டமன்றத்தில் அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் சுருக்கமாக சுட்டிக் காட்டினார்.

சென்னாரெட்டி ஃப்ளாஷ்பேக்கை அமைச்சர் துரைமுருகன் நினைவுபடுத்தியது திமுக தொண்டர்களுக்கான மெசேஜா, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கான எச்சரிக்கையா என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் நடந்து வருகிறது.

வேந்தன்

பேரவையில் ஆளுநர் கருத்து சொல்லலாமா? விதி என்ன சொல்கிறது?

சென்னை வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்… காமாட்சி மருத்துவமனையில் சந்திப்பில் வரும் மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share