சென்னை ஒஎம்சிஏ திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இன்று(டிசம்பர் 21) காலை நடைபெற்றது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உழைப்பு
இந்த கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “நமது இயக்கம் சாதாரண கட்சி அல்ல. நெருப்பில் பூத்த மலர். ஊழலை ஒழிக்க உதித்த இயக்கம். எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தைத் தொடங்கியபோது, சோதனைகளையும், அவமானங்களையும் அதிகளவு எதிர்கொண்டார். ஆனால் அத்தனையும் தாண்டி, அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்.
அதுபோன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் தியாகங்களாலும், கடுமையான உழைப்பாலும் எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாத கோட்டையாக அதிமுகவை மாற்றினார். சுதந்திரத்துக்குப் பின்னால் 30 ஆண்டுகள் ஆண்ட கட்சி என்ற பெருமையை இருவரும் உருவாக்கினார்கள்.

இப்படிப்பட்ட இயக்கத்தின் நிலை இன்று என்னவாக இருக்கிறது. சர்வாதிகாரத்தின் உச்ச நிலையிலிருந்து கொண்டு, நான் சொல்வதுதான் சட்டம் என்று முயற்சி செய்துவருகிறார்கள். நிரந்தர பொதுச் செயலாளர் என்று ஜெயலலிதாவை அழைத்திருக்கிறோம். பொதுக்குழுவில் தீர்மானங்களையும் கொண்டு வந்து நிறைவேற்றினோம்.
அந்த தீர்மானத்தை ரத்து செய்ய ஒருவருக்கு மனம் இருந்தால், அவர்களை இந்த நாடு மன்னிக்குமா? இந்த தீர்மானத்தை ரத்து செய்த மகாபாவிகளை இந்த நாடு மன்னிக்காது.
அன்று தியாகம் – இன்று பணம்
அதிமுக ஜெயலலிதா சொல்வது போல பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்யும். அதுவரை ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச் செயலாளர். அதிகாரபலம் தங்களிடம் இருப்பதைக் கொண்டு எம்.ஜி.ஆரை திமுகவிலிருந்து நீக்கினார்கள். திமுக அரியணை ஏறுவதற்கு அவர் செய்த தியாகங்கள் பல. திரைப்படங்களில் கூட நெற்றியில் உதயசூரியனைப் போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார். அவரை மாவட்டச் செயலாளர்கள் கூடி நீக்கினார்கள்.
அப்போது, 1972ல் இந்த இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்பவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலமாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று சட்டவிதியை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். இந்த சட்டவிதியைத் திருத்தம் செய்ய முடியாது என்ற சட்டத்தையும் அதில் சேர்த்தார்கள்.
ஆனால் இன்று என்ன நிலைமை?. இடைக்கால பொதுச்செயலாளராம்… பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவார்களாம்… கூவத்தூரில் தொடங்கி இன்று வரை பொதுக்குழு உறுப்பினர்களை எல்லாம் தன்வசம் வைத்திருக்கக் காரணம் பணம் தான் என்று சைகையால் எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டார்.
பழனிசாமிக்கு சவால்
மேலும் அவர், “என்ன தைரியம். இவர்கள் கொண்டு வந்த சட்டத்தால் சாதாரண தொண்டன் பொதுச்செயலாளர் ஆக முடியுமா? இந்த ஜனநாயக படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டிய சக்தியாக நீங்கள் இருக்கிறீர்கள்” என்று அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினார்.
ஒற்றுமையாக இருக்கலாம் என்று நாம் சொல்கிறோம். ஆனால் ஒற்றுமையாக இருக்கமாட்டோம் என ஒருவர் சொல்கிறார் என்றால் அது எடப்பாடிதான். உனக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி ஆரம்பித்து நடத்தி பார். வீதிக்கு வந்து தனிக்கட்சி தொடங்குகிறேன் என்று சொல்லிப்பார். நீ எங்கே போய் விழுவாய் என்று தெரியும் கடுமையாக விமர்சித்தார்.

வேண்டுமென்றே தடை ஏற்படுத்தினர்
பல ஆயிரம் உயிர்களை இழந்து, ரத்தம் சிந்தி வந்த இந்த இயக்கத்தை கபளீகரம் செய்யலாம் என்று நினைத்தால் அது நடக்காது.என்னை பொதுக்குழுவில் அவமானப்படுத்தி வெளியே அனுப்பியதை இங்கே சொன்னார்கள்.
ஆனால் அதைக்காட்டிலும் சதி நடந்தது. அந்த பொதுக்குழுவிலே கலந்துகொள்ள முடியாத அளவுக்கு தடை ஏற்படுத்தினார். அன்றைய தினம் 7 மணிக்குத்தான் கிளம்பினார். 8 பாயிண்ட்டுகளில் வரவேற்பு கொடுத்து, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர். இதன்மூலம் என்னை வர விடாமல் செய்வதற்கு இப்படி செய்தனர்.
இரண்டு பேரும் ஒரே வழியில் தான் செல்ல வேண்டும். நான் வருவதற்குள் தீர்மானத்தை நிறைவேற்றத் திட்டமிட்டு இவ்வாறு செய்தனர்.
இதனால் அண்ணா மேம்பால பகுதியில் 40 நிமிடங்கள் நான் நின்றுகொண்டிருந்தேன். இவர் முன்னால் வரவேற்பை வாங்கிக்கொண்டிருக்கிறார். இவர் என்ன அவ்வளவு பெரிய தலைவரா? போட்டவர்களே மீண்டும் மீண்டும் மாலை வந்து போடுகிறார்கள். இதையெல்லாம் நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்.
அங்கு ஏசி ஒருவர் வந்தார். அவர்தான், ‘ஐயா வேண்டுமென்றே உங்களை ப்ளாக் செய்ய வேண்டுமென முன்னால் நின்று கொண்டிருக்கிறார்கள். இன்னொரு வழியில் கூட்டிச் சென்று அவர்களுக்கு முன்னால் உங்களைக் கொண்டு போய் சேர்த்துவிடுகிறேன்’ என்றார். அதன்படி அவர்தான் என்னை அழைத்து சென்றார். நானும் போய் மண்டபத்தில் உட்கார்ந்திருந்தேன். அப்போது மகாலிங்கம் என்னிடம், ”அண்ணன் வந்து கொண்டிருக்கிறார். நீங்கள் உட்காருங்கள், அவர் வந்ததும் சேர்ந்து போய்விடலாம்” என்றார்.
நானும் உட்கார்ந்திருந்தேன். அவர் வந்தார். எனக்கிருந்த அறைக்கு வந்தார் முகத்தைத் திருப்பிக்கொண்டு மேடைக்கு போய்விட்டார். ஒருவார்த்தைகூட என்னிடம் சொல்லவில்லை. ஒரு ஒருங்கிணைப்பாளர் உட்கார்ந்திருக்கிறாரே என்று கூட இல்லாமல் போய்விட்டார். அவைத்தலைவரை நான் முன்மொழிகிறேன். அவர் வழிமொழிந்தார். அவ்வளவுதான் முடிந்துவிட்டது.
இந்த உலகிலே இல்லாதவர் இந்த சட்டமேதை சி.வி.சண்முகம். அவருக்கு வலது கை விளங்காது போல. 23 தீர்மானங்களையும் ரத்து செய்கிறோம், ரத்து செய்கிறோம் என்று கத்துகிறார்.
வங்கி கணக்கு; சட்டப்படி நடவடிக்கை
நான் 13 வருடங்களாக வரவு செலவு கணக்குகளைப் பார்த்திருக்கிறேன். அம்மா என்னைப் பெருமையோடு பார்ப்பார். நான் பொறுப்பேற்ற அடுத்த வருடம், ”எனக்கு ஒரு 2 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. நான் கழக கணக்கிலிருந்து எடுத்துக்கொண்டு அடுத்த வருடம் வைத்துவிடுகிறேன்” என்றார். சொல்லி வைத்தது போல் இரண்டே வருடத்தில் கொடுத்துவிட்டார்.
ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் 256 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதில் வரும் வட்டியை வைத்து கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம்.
இதையெல்லாம் யார் தந்தது. யாரும் நன்கொடை கொடுக்கவில்லை. யாரிடமும் போய் நாம் வசூல் செய்யவில்லை. எல்லாம் தொண்டர்களின் உழைப்பு.
எனக்கு இப்போது ஒரு கவலை இருக்கிறது. செக்கில் இப்போது சீனிவாசன் கையெழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார். ஏகப்பட்ட கணக்கு வைத்திருப்பதாக எனக்கு தகவல் வருகிறது. ஆனால் அவர்கள் வங்கிக் கணக்கை முறையாகக் கையாளவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மன்னிப்பு கேட்க நான் தயார்
மேலும் அவர், “அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலின் போது என்னால் ஆட்சி போய்விடக் கூடாது என்பதற்காக இணைந்தோம். எந்த நிபந்தனையும் பேசவில்லை. அந்த துணை முதலமைச்சர் பதவி டம்மி என எனக்குத் தெரியும். அதனால் வேண்டாம் என்று சொன்னேன். பிரதமர் நான் முதல்வராக இருந்த போது எனக்கு உதவி செய்தார். அப்போது மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக 10 லட்சம் பேர் கூடிவிட்டார்கள். அப்போது பிரதமரிடம் போய் சொன்னேன். இன்று ஜல்லிக்கட்டு நடப்பதற்கே மோடிதான் காரணம்.
அடுத்து வர்தா புயல் வந்துவிட்டது. தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வரத்து குறைந்துவிட்டது. இதற்காக சந்திரபாபு நாயுடுவிடம் பேச போனேன்.
அப்போது ஓன் டூ ஒன் பேசலாம் என்று என்னை உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார். உள்ளே அழைத்து செல்லும் போதே அதிகாரிகளை அழைத்து தண்ணீரை திறந்துவிடுங்கள் என்று எனக்குத் தெரியாமலேயே சொல்லிவிட்டார்.
இருவரும் பேசிவிட்டு வந்து கான்பிரன்ஸ் ஹாலில் உட்காருகிறோம். தண்ணீர் தமிழ்நாட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என டிவியில் ஓடுகிறது.
இதுவரை இந்த நான்கரை ஆண்டுக்காலம் ஆட்சி நடைமுறையில் நான் ஏதாவது தவறு செய்திருக்கிறேன் என்று சொல். பகிரங்கமாக மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்.
திட்டமிட்ட சதி
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, இடைத்தேர்தலில் தோல்வி, நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அனைத்துக்கும் எடப்பாடி பழனிசாமிதான் காரணம். ஒரே ஒரு தொகுதியில் தேனியில் வெற்றி பெற்றோம். அப்போது அதிகாரப்பூர்வமான பாஜக தொலைக்காட்சியில் ரவீந்திரநாத் மத்திய அரசு பட்டியலில் இருக்கிறார் என்று செய்தி வெளியானது. இது என்ன வினைக்குப் போட்டார்கள் என தெரியவில்லை.
உடனடியாக எடப்பாடி பழனிசாமி 9 அமைச்சர்களுடன் டெல்லி வந்து எதுவும் இல்லாமல் செய்துவிட்டார். திட்டமிட்டு சதி செய்து தடுத்து நிறுத்திவிட்டார்கள்.
ஆனால் எதாவது நான் எதிர்வினை ஆற்றினேனா. இல்லை.

18 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் வேலை செய்திருக்கிறேன். ஒருநாளும் என்னை நீக்கியது இல்லை. அந்த நன்றி உணர்வோடுதான் நான் இருக்கிறேன்.
எனவே அவர் கட்டிக்காத்த இந்த கட்சிக்குச் சிறு பங்கம் வந்தாலும், அதை எதிர்த்து முதல் நாளாகக் குரல் கொடுப்பேன்.
என்னால் ஒரு மாவட்டச் செயலாளர்கள் கூட நியமிக்க முடியாது என்றார்கள். இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பாருங்கள். இன்று ஒரு தனிக்கட்சி கழக சட்டவிதிகளைக் காப்பாற்றுவதற்காக உச்ச நீதிமன்றம் வரை போராடிக்கொண்டிருக்கிறோம்” என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
Comments are closed.