தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 27) இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா புறப்படுகிறார்.
மொத்தம் 17 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் நிலையில் அமெரிக்காவில் தான் பங்கேற்க உள்ள நிகழ்ச்சியின் விவரங்களை பட்டியலிட்டு திமுக தொண்டர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ”ஆகஸ்ட் 29 அன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்துவதுடன், ஆகஸ்ட் 31 அன்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து பேசுகிறேன். அதன்பின், செப்டம்பர் 2ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறேன்.
10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்கிட அழைப்பு விடுக்கிறேன்.
“ஃபார்ச்சூன் 500” நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை சந்தித்து உரையாடவிருக்கிறேன். இவையனைத்தும் அன்னைத் தமிழ்நாடு தொழில்வளம் பெறவும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடவுமான முயற்சிகளாகும்.
தொழில்முதலீடு சார்ந்த பயணம் என்றாலும், அமெரிக்காவாழ் தமிழர்களுக்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கித்தராமல் இருக்க முடியுமா? செப்டம்பர் 7-ஆம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது.
1971-ஆம் ஆண்டு நம் உயிர்நிகர் தலைவர் – தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் மண்டபத்தில் அரிய உரை நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அவருடைய மனசாட்சியான முரசொலி மாறனும் அந்தப் பயணத்தில் உடன் சென்றிருந்தார். அன்றைய சிகாகோ வாழ் தமிழர்களும் அருகில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழர்களும் தலைவர் கலைஞரின் உரை கேட்டு மகிழ்ந்தனர்.
அதன்பின், நியூயார்க் நகருக்குச் சென்று அங்கு தமிழ் மன்றத்தைத் தொடங்கி வைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுகளுடன், ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் அதுவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்கா வாழ் தமிழர்களைச் சந்திப்பது எனக்கும் அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
அமெரிக்கப் பயணத் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக தொழில்-முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்கூட்டியே அங்குச் சென்று ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
ஆகஸ்ட் 27 தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்தப் பயண நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்கவேண்டும் என்பதுதான். இந்தக் குறுகிய இடைவெளியில், தமிழ்நாடு அரசின் நிர்வாகப் பணிகள் தொய்வின்றித் தொடரவும், மக்கள் நலன் சார்ந்து திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் பயன்கள் தொடர்ந்து கிடைத்திடவும் அமைச்சர்களும் அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
கழகத்தின் மாநில அளவிலான பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் செப்டம்பர் 17-ஆம் நாள் நடைபெறவுள்ள கழகத்தின் பவளவிழா ஆண்டின் முப்பெரும் விழாவை எழுச்சியுடன் நடத்திடுவதற்கான பணிகளை இப்போதே தொடங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024 : இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீராங்கனை!