சிறப்புக் கட்டுரை : ராகுல் இனி என்ன செய்ய வேண்டும்?

Published On:

| By Balaji

கா. தீனா

இந்தியாவில் பிரதமர் நாற்காலிக்கான பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும் ராகுலிடம் ஒரு தனித்தன்மை உள்ளது. ராகுல் தன் சொந்த கட்சியின் மீதான விமர்சனங்களையும் வெளிப்படையாக பதிவு செய்கிறார். தான் பேச நினைப்பதை எந்த இடத்திலும் தைரியமாக பேசுகிறார்.

ADVERTISEMENT

மூத்த பத்திரிக்கையாளர் குஷ்வந்த் சிங் அவர்களும் பதிவு செய்திருப்பதைப் போல, ‘ராகுல் அவருடைய தந்தையை விட புத்திசாலி’.

ராகுல் மட்டுமல்ல, அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள், அவதூறுகள், கேலிகளும் தனித்தன்மை கொண்டவை.

ADVERTISEMENT

“இந்தியர்களை ஏமாற்ற ராவுல் என்ற கிறித்துவ பெயரை ராகுல் காந்தி என மாற்றிக்கொண்டார்”..

“இவருக்கு இத்தாலி நாட்டு பாஸ்போர்ட்டும் குடியுரிமையும் உண்டு, இந்தியாவில் ஏதாவது பிரச்சனை என்றால் இத்தாலிக்கு சென்றுவிடுவார்”

ADVERTISEMENT

“இவருக்கு புகை மற்றும் குடிப்பழக்கமும் உள்ளது”

“இவருக்கு சொந்தமாக யோசிக்க தெரியாது, பிறர் தயாரித்துக் கொடுத்த அறிக்கையில்லாமல் இவரால் பேசவே முடியாது”

“முறையாக கல்லூரி படிப்பை முடிக்காத சுமாரான மாணவர்”

“இவருடைய பெண் தோழி வெணிசுலா நாட்டு கடத்தல்காரரின் மகள்.. ஜூவானிதா என்ற பெயர் கொண்ட அவர் போதை மருந்துக்கு அடிமையானவர்”

“இருவரும் ஏராளமான பணத்தை கடத்தி அமெரிக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்

இவையெல்லாம், அரசியல் வருகைக்கு முன்பான ராகுலின் அடையாளங்கள் மீது வைக்கப்பட்ட திரிப்புகள். அரசியலுக்கு பிறகான அவருடைய நடவடிக்கைகள் வேறு எந்த அரசியல்வாதியையும் விட அதிகம் கேலி செய்யப்பட்டன.

பாதுகாப்பு கட்டமைப்புகளை உடைத்து பொதுமக்களை சந்திப்பது, குடிசைகளுக்குள் சென்று ஏழைகளுடன் உணவு உட்கொள்வதை ‘சீன் போடுகிறார்’ என விமர்சிக்கப்பட்டது. 2012 உத்திரபிரதேச தேர்தலில் குடிசைகளில் தங்கியபோது, ஏழைகளின் ஒருவேளை கஞ்சியையும் பிடுங்கி குடித்துவிட்டார் என விமர்சிக்கப்பட்ட ராகுல், அரசியல் செய்யத்தெரியாத பப்பு என முத்திரை குத்தப்பட்டார். மீடியாக்கள் மோடியாவாக இயங்கிய 2014தேர்தலை ஒட்டிய காலத்தில், தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் என அனைத்துத் தரப்பிலும் இந்த கேலிகள் கொடிகட்டிப் பறந்தன.

தனிப்பட்ட ராகுலுக்குத் தகுதியில்லையா?

ராகுலுக்கு எதிராக நாடக நடிகை ஸ்மிருதி இரானி களம் கண்ட போதுதான், ராகுலின் கல்வித்தகுதியை பாஜக அதிக சந்தேகத்திற்குள்ளாக்கியது. ஸ்மிருதியின் கல்வித்தகுதி தேர்தலுக்கு தேர்தல் மாறுகிறது. ஆனால், ராகுலின் கல்வித்தகுதி என்ன?

ராகுல் காந்தி டிரினிடி பல்கலைக்கழகத்தில் MPhil பட்டம் படித்தவர். இலண்டனில் அமைந்துள்ள ‘மானிட்டர் க்ரூப்’ எனும் நிறுவனத்தில் strategy consultant ஆக 2002 வரை வேலை பார்த்தவர்.

சைக்கிளிங், ஸ்கூபா டைவிங், ஸ்குவாஷ் மற்றும் நீச்சல் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட அவர், புத்தகங்களை படிப்பது, செஸ் விளையாடுவது போன்றவற்றை பொழுதுபோக்காக கொண்டவர். விமானம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் கூட அவரிடம் உண்டு. காமெடி யோகா வீடியோ போடுகிறவர்கள் மத்தியில் அய்க்கிடோ கற்ற வீரர் அவர்.

அவருடைய பெண் தோழியின் பெயர் பாஜகவினர் கூறுவதை போல ஜூவானிதா அல்ல. அவர் கடத்தல்காரரின் மகளும் அல்ல. அவருடைய பெயர் வெரோனிக்கா. ஸ்பெயின் நாட்டைச்சார்ந்த கட்டடக்கலை நிபுணர். தன்னுடைய பெண் தோழியைப் பற்றி அவர் பொதுவெளியில் என்றுமே மறைக்க விரும்பியதில்லை.

ராகுலும் மோடியும்

ராகுலின் பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தபோதும், அவரின் நோக்கங்களைக் கொச்சைப்படுத்தியபோதும் ராகுல் ஒருபோதும் மோசமாகப் பதிலடி தந்ததில்லை. மற்றொருபுறம் முதிர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் கூட பேச மறுக்கும் உணர்வுபூர்வமான பிரச்சனைகளை பற்றி தைரியமாக பேசுகிறார். அவரிடம் பொதுமக்களை சந்திப்பது பற்றி கேட்டபோது, “பொதுமக்களின் பிரச்சனையை உண்மையாக களைய வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களுடன் உரையாடலை நடத்துகிறேன்” என்றார்.

மோடியின் அரசு கொண்டுவரும் திட்டங்களை விமர்சிக்கும்போதுகூட, இந்த உரையாடல் வடிவத்தை நாம் காணலாம். வெறுமனே எதிர்க்கட்சி என்ற நிலையிலிருந்து குற்றம் சுமத்தாமல், பாதிப்புகள் ஏற்படும் விளைவுகளைக் குறிப்பிட்டே விமர்சிக்கும் ராகுலின் பாணி, மிகச்சிறந்த அரசியல் உரையாடல். ராகுலின் கட்டிப்பிடி வைத்தியம் வரை அந்த உரையாடல் நீண்டது.

அதனால்தான், இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியாவில் எங்கு வேண்டுமானால் செல்லவும் தங்கவும் தொழில் செய்யவும் உரிமை இருக்கிறது என்று கூறியதற்கு ராகுலை கண்டித்து போராட்டம் நடத்திய சிவசேனா இதை ராகுல் மோடியைக் கட்டிப்பிடித்த நிகழ்வை, ‘மோடிக்கு ராகுல் கொடுத்த ஷாக்’ என வர்ணித்தது.

மோடி சமூக வலைதளங்களை கைவிடப்போகிறேன் என்று கூறும்போது, அதெல்லாம் வேண்டாம் வெறுப்பை கைவிடுங்கள் போதும் என்று சொற்களால் அடித்தார். வெறுப்புக்கு எதிரான போராட்டத்தில் ராகுலுக்கு சிறுவயதிலிருந்தே அனுபவம் உள்ளது.

நாம் இன்று 2020-ல் கொரோனோ காலகட்டத்தில் அனுபவிக்கும் ஊரடங்கை தன்னுடைய பாட்டி இந்திரா மறைவிற்கு பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக 5 வருடம் அனுபவித்தவர் ராகுல். அவருக்குத் துணையாக தங்கை பிரியங்கா காந்தி மட்டுமே, வீட்டிலிருந்தே இருவரும் பள்ளிக்கல்வியை முடித்தனர். அதைத்தொடர்ந்து வெளிநாட்டில் உயர்கல்வி மற்றும் பணி என்று இருந்த ராகுலுக்கு இந்திய மக்களுடன் நெருங்கி பழகுவதற்கும், அவர்களின் அன்பை பெறுவதற்கும் எந்த வாய்ப்பும் கிட்டவில்லை. மோடி சொல்லிக்கொள்வது உண்மையெனில், சுதந்திரமாக வெளியில் சுற்றித்திரிந்து டீ-யாவது விற்றார். ஆனால், அந்தச் சுதந்திரவெளிகூட ராகுலுக்கு கிட்டவில்லை என்பதே உண்மை.

இந்த முரண்பாட்டுக்கு நடுவே, “வேதனையில் இருப்பவர்களை தேடிச்சென்று அவர்களை தழுவிக் கொள்வேன். வெறுப்புணர்வு மற்றும் அச்சத்தை போக்க விரும்புகிறேன். ஒரு காங்கிரஸ்காரனாக நான் அனைத்து உயிர்களையும் நேசிக்கிறேன்” என சொல்லும் விழுமிய ஆற்றல் ராகுலிடம் இருக்கிறது. வசூல்ராஜாவின் எரிந்துவிழும் ஊழியர் ஒருவருக்கு கமல் கட்டிப்பிடி வைத்தியம் செய்வார். அதை ராகுல் மோடிக்கு செய்தது நினைவிருக்கலாம். என்ன ஒன்று, அந்த பெரியவருக்கு எரிச்சல் குணமாகிவிடும், மோடிக்கு மக்கள் மீதான வெறுப்பு குணமாகவில்லை.

ராகுலின் அரசியல் எப்படிப்பட்டது?

ராகுலின் அரசியல், ஆரம்பத்தில் இருந்தே அமைதி, வளம் மற்றும் வளர்ச்சி என்பதாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கிராமங்களை முன்னேற்ற வேண்டும், இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள ஏழைகளின் சக்தியை ஆக்கப்பூர்வச் செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றே ராகுல் விரும்புகிறார்.

அதனால்தான் பாஜகவினரோ எதிர்க்கட்சியினரோ அவரை தரம்தாழ்ந்து விமர்சிக்கும்போதும் இது என்னுடைய வேலையில்லை என்று அமைதியாக கடக்க முடிகிறது. சோனியா மீது பாஜகவினர் பொழியாத வசைகள் இல்லை, சொல்லாத அவதூறுகள் இல்லை. நினைத்திருந்தால் மோடியின் ‘உண்மையான’ தனிப்பட்ட வாழ்க்கையை ராகுல் விமர்சித்திருக்கலாம். ஆனால் அந்த எண்ணம் கூட அவருக்கு ஏற்படவில்லை.

“சாதி, மதம், மொழி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்தியா ‘ஒரே நாடாக’ பயணிக்க முடியாது” என்றும்,

“பாரதீய ஜனதா (பாஜக) மீது எனக்கு எந்த வெறுப்பும் கோபமும் இல்லை, ஆனால் என் உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் இந்தியா குறித்த அவர்களின் எண்ணத்தை இயல்பாகவே எதிர்க்கின்றன” என்ற ராகுலின் பேச்சு அவர் எதை எதிர்க்கிறார் என்பதையும், அவர் யாருக்கான தலைவர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

2014 ல் ஆட்சியை இழந்த பிறகு, காங்கிரஸ் இந்தியா முழுவதிலும் பெரும் சரிவை சந்தித்தற்கு ஏராளமான காரணங்கள் இருந்தாலும், ராகுல் அதை சரிசெய்ய பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளையோ குறுக்கு வழிகளையோ தேடவில்லை. பாஜக அரசுக்கு எதிராக அரசியல் லாபத்திற்காக தேசத்தை உலுக்கும் போராட்டத்தையோ, மக்களை குழுக்களாக பிரித்து தேர்தலில் வெற்றி பெறுவதையோ விரும்பவில்லை. அது குறுகிய காலத்தில் பலன் தந்தாலும் அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு எதிரானது என்பதை உணர்ந்தே இருந்தார்.

ஆனாலும் ராகுலின் இந்த அமைதி வளம் வளர்ச்சி என்ற எண்ணம்தான் பாஜக 2019-ல் மீண்டும் காங்கிரஸை எளிதில் வீழ்த்த காரணமாக இருந்தது என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருந்தாலும், நாங்கள் ஒரு அரசியல் கட்சியுடன் போராடவில்லை, அரசியல் கட்சியின் கைப்பாவையாக மாறிப்போயிருக்கும் அரசு இயந்திரங்களை ஒட்டுமொத்தமாக எதிர்த்துப் போராடினோம் என்று ராகுல் கூறியதையும் புறந்தள்ளிவிட முடியாது.

எல்லாவற்றையும் தாண்டி கடந்த ஆறு ஆண்டுகளில் ராகுலின் செயல்பாடுகளை உற்றுநோக்கினால் நேரு, இந்திரா, ராஜீவ் என்ற பாரம்பரியத்திலிருந்து வந்த ராகுல் அவர்களை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறார், எந்தளவுக்கு தன்னுடைய தனித்தன்மையை நிரூபித்திருக்கிறார்?.

ராகுலின் நிரூபணங்கள் எடுபடுகின்றனவா?

பாஜகவுக்கு எதிரான அரசியலை ராகுல் செய்கிறார் என்பது சரி. ஆனால், அவர் செய்யும் அரசியல் விமர்சனங்கள் சரியாக இருக்கின்றனவா?

பணமதிப்பு நடவடிக்கையை பற்றி கூறும்போது, “இந்தியா எத்தனையோ சோகங்களை கண்டுள்ளது. அவையெல்லாம் வெளிநாட்டு எதிரிகள் நமக்கு இழைத்தவை. ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை தனித்துவம் வாய்ந்தது. அது, நமக்கு நாமே தேடிக்கொண்ட சோகம். பல லட்சம் பேரின் வாழ்க்கையையும், ஆயிரக்கணக்கான சிறு தொழில்களையும் அழித்த தற்கொலைத் தாக்குதல்” என்று தெரிவித்தார்.

உண்மையில் 2016 ல் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பு நடவடிக்கை, பொருளாதாரத்தை சீர்குலைத்து இன்று வரை மறைமுகமாக யாரோ ஒருவர் வேலையிழக்க காரணமாக இருக்கத்தான் செய்கிறது. இது தற்கொலைத் தாக்குதல் அல்லாமல் வேறென்ன?

2017 ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசிய ராகுல் சிறப்பு பொருளாதார நிபுணரின் அனுமதியின்றி ஓரிரவில் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், அவசர அவசரமாக அமுல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியும் நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்த துவங்கிவிட்டன. இது விரைவில் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்கு கொண்டு செல்வதோடு, அதனோடு நெருங்கிய தொடர்பில் உள்ள மக்களின் கோபத்தை பலமடங்கு உயர்த்தும் என்றும் எச்சரித்தார்.

2019-2020 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 வருடங்களில் இல்லாத மிகவும் குறைந்த 4.2 விழுக்காட்டை எட்டியது. இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் 0.5 (2018-19) விழுக்காடு குறைவானது என்பதிலிருந்து அன்று ராகுல் எச்சரித்ததை போலவே இன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீரான வேகத்தில் சறுக்கிக்கொண்டிருப்பது நாட்டு மக்களுக்கு தெளிவானது.

உஜ்வாலா, ஆயுஷ்மான் பாரத் (காப்பீட்டு திட்டம்), கிராமப்புற மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், ஜன் தன் (வங்கிக்கணக்கு), ஸ்வச் பாரத் போன்ற திட்டங்கள் எல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்களாகவும், விளம்பர வாக்கியங்களாகவும், தேவையில்லாத ஆணிகளாகவும் மட்டுமே இருக்கும் நிலையில், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், சட்டப் பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம், ராமர் கோவில் கட்ட அரசு சார்பில் அறக்கட்டளை போன்ற விஷயங்கள் உலக அளவில் இந்தியாவிற்கு இருந்த நற்பெயரைக் கெடுத்து நம்மை அந்தக்கால பாகிஸ்தானாக நிறுத்தியிருக்கிறது.

”2016 ஆம் ஆண்டு பாஜக அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி மோசமானது, இது ஏழை எளிய மக்களை அதிகம் பாதிக்கும் என்றார் ராகுல்.

குடியுரிமை திருத்தச்சட்ட அச்சம் ஒரு சுனாமியாக இந்திய மக்களை தாக்கிக்கொண்டிருந்த நேரத்தில், கொரோனோ எனும் கொடிய அரக்கன் உலகையே தாக்கிவிட்டது.

இதன் கோரத்தன்மையை ஆரம்பத்திலேயே கணித்து பிப்ரவரி மாதத்தில் ராகுல் எச்சரித்தபோது மோடி சுவையான சமோசாவும் சூடான டீயும் சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்துகொண்டிருந்தார்.

ஜேஎன்யூ தாக்குதல் எதிர்ப்பு , சிஏஏ போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, எல்ஐசி தனியார்மயம் கண்டிப்பு என்று தொடர்ச்சியாக ஆக்கப்பூர்வமாக இந்த அரசை ராகுல் விமர்சிக்கிறார்.

மோடியை பாராளுமன்றத்திலே விமர்சித்துவிட்டு அவரை கட்டித்தழுவினார்.

நம் இளைஞர்களுக்கு தேவை வேலை வாய்ப்பு தான், ஒன்றுமில்லாத உங்களின் நீண்ட நெடிய பேச்சு அல்ல என்று நிர்மலா சீதாராமனை விமர்சிக்கிறார்.

“சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்துவிட்டது, மக்களுக்கான அரசு என்று கூறுகிறீர்களே ஏன் நீங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கூடாது என்று கேட்டேன். ஆனால் இந்த ஜீனியஸோ சுங்கவரியை உயர்த்திவிட்டார்,” என்று வருத்தத்துடன் கிண்டலடித்தார்.

புல்வாமா தாக்குதல், பதன்கோட் தாக்குதல், காஷ்மீர் தாக்குதல் மற்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சீனா உடனான எல்லை பிரச்சினைகளில் உயிர்நீத்த குடும்பத்தினர் வரை நேரிலோ தொலைபேசியிலோ தொடர்புகொண்டு ஆறுதல் கூறுகிறார். எல்லைப் பிரச்சினையில் வெளிப்படைத்தன்மையை கோருகிறார். இந்த அரசின் மீது எனக்கு மாற்றுக்கருத்துகளும் விமர்சனங்களும் உண்டு ஆனால் காஷ்மீரில் பாகிஸ்தான் ஊடுறுவலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்கிறார்.

ஊரடங்கு காலகட்டத்தில் ஆக்கப்பூர்வமாக முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் அவர்களுடன் கொரோனாவுக்கு பிறகான பொருளாதார சூழல் மற்றும் அதை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நிலை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து உரையாற்றுகிறார்.

பெண்கள் ஆண்களுக்கு நிகராக கட்டளை பிறப்பிக்கும் தளபதிகளாக பணியாற்ற முடியாது என்று பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடியதை கடுமையாக சாடிய ராகுல், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்த விழாவில் பங்கேற்றபோது “சார்” என்று அழைத்த மாணவியை ‘ராகுல்’ என்று பெயர் சொல்லி அழைக்க சொன்னது அனைத்து தரப்பினரிடையே ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றது. இதற்கு காரணம் அவர் வளர்ந்த மேற்கத்திய சூழலின் தாக்கம் என்று எடுத்துக்கொண்டாலும், பாட்டி இந்திராவின் அரவணைப்பில் வளர்ந்த ராகுல், தாய் சோனியா தந்தையின் மறைவிற்கு பிறகு கட்சியை வழிநடத்தியபோது அவருக்கு உறுதுணையாக இருந்த ராகுலுக்கு இயல்பாகவே பெண்களின் மீதான மரியாதையும் அக்கறையும் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. இதுபோன்ற காரணிகள் பெண்களுக்கு இயல்பாகவே காங்கிரஸ் மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றன.

ராகுல் என்ன செய்ய வேண்டும்?

பாட்டி இந்திரா, தந்தை ராஜீவ் ஆகியோரை வெகு சீக்கிரமே ராகுலிடமிருந்து பிரித்துக்கொண்ட காலம் யாரும் அடைய முடியாத உயர்பதவிகளை சீக்கிரமே ராகுலுக்கு கொடுத்து ஈடு செய்தது.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஆட்சி செய்த மோடி தலைமையிலான பாஜக நாடு முழுவதும் ஏற்படுத்திய பல்வேறு சர்ச்சைகள் இயல்பாகவே மக்களை காங்கிரஸை நோக்கி நகர்த்த துவங்கியிருக்கின்றன.

பழமையான காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையினால் புத்துணர்ச்சி கொள்ளும் என்பதை தாண்டி, ராகுல்காந்தியின் வயதில் அவருக்கு இணையான ஒரு ஆளுமை இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்பது ராகுலுக்கு பெரும்பலம்.

இன்று இந்தியா பாஜக தலைமையின் கீழ் அதனுடைய விருப்பத்திற்கு நேரெதிராக, அதன் இயல்புக்கு நேரெதிராகப் பயணித்துக்கொண்டிருக்கிறது. இதை சரிசெய்ய தேர்தல் வெற்றி மட்டும் போதாது. ராகுலின் கூட்டணி நண்பரான ஸ்டாலின் சொல்வதைப் போல அது இன்னொரு சுதந்திர போர்.

உள்நாட்டை மட்டுமல்லாமல் வெளிநாட்டுப் பிரச்சினைகளையும் தீனிபோட்டு வளர்த்திருக்கிறார் அதையெல்லாம் சரிசெய்யவேண்டும் என்றால், அதிகாரப்போட்டியில் ராகுல் நேருவைப் போல செயல்படவேண்டிய தேவை இருக்கிறது.

கட்டுரையாளர் : கா. தீனா, பொருண்மை அறிவியல் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share