பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 8) சென்னை வந்தபோது அவரோடு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடிய போட்டோக்களும் வீடியோக்களும் சமூக தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில்… ரயிலுக்கு பச்சை கொடி காட்டுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக ஸ்டாலினுக்கும் மோடிக்கும் இடையே நடந்த அந்த சம்பவ வீடியோ பல சஸ்பென்ஸ்களை உள்ளடக்கியதாக உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் மோடியை அழைத்து எதிர்ப்பக்கம் பார்க்குமாறு கையை காட்டுகிறார். உடனே மோடி அந்த திசையில் பார்த்து கையசைத்து பிறகு வணங்குகிறார். இந்த நேரத்தில் ஸ்டாலினும் மோடியும் சிரித்து பேசிக் கொள்கிறார்கள்.
பிரதமர் மோடிக்கு அப்படி ஸ்டாலின் எதை சுட்டிக் காட்டினார்?
வந்தே பாரத் ரயில் துவக்க விழாவுக்கு மோடி வருவதை ஒட்டி அந்த பிளாட்பாரத்திற்கு எதிரே உள்ள மற்ற பிளாட்பாரங்களில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், மக்கள் கூடியிருந்தனர். அவர்களில் சிலர் கூட்டமாக ஒரே மாதிரியான காவி தலைப்பாகை அணிந்து கொண்டு வந்திருந்தனர்.
மோடியின் பார்வை தங்கள் மீது விழ வேண்டும் என்று விரும்பிய அவர்கள், மோடியை நோக்கி கையசைத்தவாறே இருந்தனர். ஆனால் மோடி அவர்களை கவனிக்கவில்லை.
இதைப் பார்த்த ஸ்டாலின் காவி தலைப்பாகை அணிந்திருப்பவர்களை மோடியிடம் சுட்டிக்காட்டி, ’அதோ பாருங்கள் உங்களைப் பார்க்க விரும்புகிறார்கள்’ என்று தெரிவித்தார்.
உடனே ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன மோடி, அந்தக் காவித் தலைப்பாகை காரர்களைப் பார்த்து கையசைத்தார். அவர்களும் பதிலுக்கு கையசைத்தார்கள்.
இதுதான் ஸ்டாலின், மோடியிடம் சுட்டிக்காட்டிய அந்த காட்சி.
–வேந்தன்
