முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் எவ்வித சாதனையும் செய்யவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளிலாவது சாதனை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மே 23) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து பேசிய அவர், “திமுக அளித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றப்பட்டுவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் பெரும்பாலான வாக்குறுதிகளை இன்றைய திமுக அரசு நிறைவேற்றவில்லை.
இது மக்களை ஏமாற்றும் செயல். ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் 510 வாக்குறுதிகளில் எத்தனை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
மக்களுக்கு சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்பு, வசிப்பிடம், வாரிசு சான்றிதழ்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பெறுவதற்கு குறைந்தது 500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கையூட்டு வழங்க வேண்டி இருப்பதாகவும், அப்படி கொடுத்தாலும் சான்றிதழ்கள் கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எனவே அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய பொது சேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
ஸ்டாலின் என்ன சாதனை படைத்தார்…

மேலும், “தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த ஒவ்வொருவரும் சாதனை படைத்து வரலாற்றில் அவர்களின் பெயரை பதிவு செய்திருக்கின்றனர்.
ராஜாஜி, சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முதன்முதலாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார்.
அவருக்குப் பிறகு வந்த ஓமந்தூரார் சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினார்.
அவரைத்தொடர்ந்து காமராஜர், ஏராளமான பாசன திட்டங்களையும், தொழில் திட்டங்களையும் செயல்படுத்தினார்.
அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்தில், மும்மொழி திட்டம் ரத்து செய்யப்பட்டு இரு மொழி திட்டம் கொண்டுவரப்பட்டது. சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அடுத்து கலைஞர், பேருந்துகளை அரசுடைமையாக்கினார். எம்பிசி, இஸ்லாமியர், அருந்ததியர் என மூன்று வகையான இட ஒதுக்கீட்டை வழங்கினார்.
எம்ஜிஆர், சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
ஜெயலலிதா, தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார். 69 சதவிகித இட ஒதுக்கீட்டை ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்தார்.
ஆனால் மூன்றாண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து முடித்துள்ள ஸ்டாலின், சொல்லிக் கொள்ளும்படி இதுவரை எந்த சாதனையையும் படைக்கவில்லை.
மீதமுள்ள இரண்டு ஆண்டுகளிலாவது சமூக நீதி சார்ந்த, நடவடிக்கைகளை மேற்கொண்டு வரலாற்றில் முத்திரை பதிக்க வேண்டும்.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னாலும் அதை நடைமுறைபடுத்தவில்லை” என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விஷாலின் ரத்னம், ராமராஜனின் ரீ என்ட்ரி… இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்..!
