அமைச்சரிடம் சீறிய ஸ்டாலின் : மா.செ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

Published On:

| By Kavi

What did MK Stalin say in the DMK district secretaries meeting?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் அதற்கான வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்திய அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 20 ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். அதுபோன்று சேலத்திலும் திமுக இளைஞரணி மாநாடு வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இதுபோன்ற பரபரப்பான அரசியல் சூழலில் இன்று (ஆகஸ்ட் 5) திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் கூட்டம் நடைபெற்றது.

காலை 10.45 மணிக்கு தொடங்கி 12 மணி வரை காணொளி காட்சி மூலமாக நடைபெற்றது.

வழக்கமாக இதுபோன்று காணொளி காட்சி மூலமாக கூட்டம் நடைபெற்றால் கட்சித் தலைவர் பேசுவதை ஸ்பீக்கர் மூலம் கேட்பார்கள். அது மாவட்ட செயலாளர்களுடன் இருப்பவர்களுக்கும் கேட்கும்.

ஆனால் இம்முறை அதுபோன்று கேட்கக்கூடாது என்பதற்காக ஸ்பீக்கர் எல்லாம் போடக்கூடாது. அனைவரும் ஹெட் போன் அல்லது ப்ளூடூத் பயன்படுத்தி தான் கேட்க வேண்டும் என்று தலைமையிடமிருந்து அறிவுரை வந்திருக்கிறது.

அதன்படி கூட்டம் தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக, திமுக ஐடிவிங் மூலம் அனைவருக்கும், ஹெட்செட் , ப்ளூடூத் எப்படி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டு, அனைவரும் இந்த வழிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் என்ன நடந்தது, திமுக தலைவர் ஸ்டாலின் என்ன பேசினார் என்று அதில் கலந்து கொண்ட சிலரிடம் பேசினோம்.

“முதலில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி பேசினார்.   ‘கலைஞரின் நூற்றாண்டு விழாவுக்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்’ என்று அவர் கூறினார்.

ஐந்தாவது நபராக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான செஞ்சி மஸ்தான் பேசினார்.

அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், “சோசியல் மீடியாக்களில் நல்லதை கூட தவறாக சித்தரித்து போடுகிறார்கள். இப்படிப்பட்ட காலத்தில் ஓப்பனாக மைக்கில் பேசலாமா. ஏற்கனவே ஒரு விஷயத்தில் உங்களை கண்டித்து விட்டிருக்கிறேன். ஆனால் மீண்டும் மீண்டும் இப்படி பேசுகிறீர்கள். என்னை நேரில் வந்து பாருங்கள்” என்று செஞ்சி மஸ்தானிடம் கோபப்பட்டார்.

அதாவது கடந்த வாரம் திண்டிவனத்தில் நடந்த நகர நிர்வாகிகள் கூட்டத்தில் கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘என் மருமகனும் என் குடும்பத்தினரும் ஒன்றும் கமிஷன் வாங்கவில்லை’ என்று ஓப்பன் மைக்கிலேயே மஸ்தான் பேசிவிட்டார். அதனை குறிப்பிட்டு தான் மீண்டும் மீண்டும் ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று ஸ்டாலின் கண்டித்தார்” என்கிறார்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மா.செ.க்கள்.

மேலும் மு.க. ஸ்டாலின் பேசியதைப் பற்றி அவர்கள் கூறுகையில், “மாவட்ட செயலாளர்களும் அமைச்சர்களும் தனித்தனியாக ஒற்றுமை இல்லாமல் செயல்படுகிறீர்கள்.

அமைச்சர்கள் எம்எல்ஏக்களை மதிப்பதில்லை. கட்சிக்காக உழைத்த அடிமட்ட தொண்டர்களை கண்டு கொள்வதில்லை, மதிப்பதில்லை. தனித்தனி கோஷ்டியாக செயல்படுகிறீர்கள் என்று கேள்விப்படுகிறேன். இது பற்றி நானும் உங்களிடம் பலமுறை சொல்லி விட்டேன்.

கீழ்மட்ட நிர்வாகிகளை மதித்து முக்கியத்துவம் கொடுங்கள். ஒவ்வொருவரிடமும் பேசும்போது கவனமாக பேசுங்கள். சோசியல் மீடியாக்கள் மத்தியில் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். நல்லதை கூட கெட்டதாக சித்தரிக்கிறார்கள். கவனமாக இருங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

அதுபோன்று, தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். தனிப்பட்ட முறையிலும் இதை நான் உங்களிடம் சொல்லி இருக்கிறேன்.

ஆனால் பல மாவட்ட செயலாளர்கள் இதை முடிக்காமல் இருக்கிறீர்கள். இதனை முடித்தாக வேண்டும். உழைக்கிறவர்களுக்கு கட்சி நல்லது செய்யும் என்று ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்” என்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் முக்கியமாக கலைஞர் நூற்றாண்டு விழா, நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்டாலின், “கலைஞரின் நூற்றாண்டு விழாவை அவருக்கு புகழ் சேர்க்கும் விழாவாகவும், அவரது கொள்கைகளை பரப்பும் விழாவாகவும், மக்கள் பயன் பெறும் விழாவாகவும் கொண்டாட வேண்டும்.

ஒன்றிய, நகர, பேரூர், பகுதி அளவில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகளிடம் கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சி பற்றி எடுத்துக் கூற வேண்டும்.
இதை நாம் கலைஞர் நூற்றாண்டு விழா என்று சொல்கிறோம். ஆனால் இதுவும் தேர்தல் பரப்புரையில் ஒரு அங்கம் தான். கலைஞரின் பெயரைச் சொல்லி மக்களின் கவனத்தை ஈர்த்தாக வேண்டும்.

கலைஞரால் பயன்பெறாத மக்களே இல்லை. அந்த அடிப்படையில் அவரது நூற்றாண்டு விழாவை கொள்கை விழாக்களாக நடத்த வேண்டும்.

அதுபோன்று வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் நியமனம் மற்றும் அவர்கள் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பாசறை கூட்டங்களை நடத்துவதோடு நமது வேலை முடிந்து விடாது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையின் தொடக்கம் தான். எனவே தேர்தலுக்கான அடுத்த கட்ட பணிகளையும் நாம் தொடங்க வேண்டும்.

பாஜகவை பொருத்தவரையில் இது அவர்களுக்கு வாழ்வா சாவா என்ற தேர்தல். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்வார்கள். தமிழகத்தில் அவர்கள் எடுக்கிற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைகிறது என்பதால் கோபம் அதிகமாகும். நம் மீது பாய்வார்கள்.

இந்த முறை நாம் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் இக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

பிரியா, வணங்காமுடி

சிகிச்சைக்காக ரூ.25 கோடி கடன் வாங்கினேனா?: சமந்தா விளக்கம்!

சென்னை எக்ஸ்பிரஸ் முதல் ஜவான் வரை : ஷாருக்கானின் லுங்கி டான்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share