அன்புமணி தைலாபுரம் வந்தபோது என்ன பேசினார் என்பது தொடர்பாக ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.
தைலாபுரம் இல்லத்துக்கு நேற்று (ஆகஸ்ட் 15) அன்புமணி சென்று வந்த நிலையில் தந்தை மகன் இடையே சமாதானம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு பாமகவினரிடையே ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஆகஸ்ட் 16) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “பாமக பொதுக்குழு ரத்து செய்யபட்டுள்ளதாக சில விஷ கிருமிகளால் வதந்திதள் பரப்பபட்டு வருகின்றன. அதனை யாரும் நம்ப வேண்டாம். திட்டமிட்டப்படி பொதுக்குழு நாளை 17 ஆம் தேதி நடைபெறும்” என்றார்.
அன்புமணி தைலாபுரம் இல்லத்தில் நேற்றைய தினம் சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், “தனது துணைவியார், அன்புமனியின் தாயாரின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்புமணி வாழ்த்து பெற்றார். அவர் வந்திருந்த போது என்னிடம் வணக்கம் சொன்னார். நானும் பதிலுக்கு வணக்கம் என்று கூறினேன். அதை தவிர நாங்கள் வேறு எதுவும் பேசவில்லை” என்று கூறினார்.
நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் குறைந்தது 4 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்த ராமதாஸ், “செயல்தலைவர் பொறுப்பினையே அன்புமணி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்தான் தலைவர் என கூறி என்ன என்னவோ செய்து வருகிறார், அது பற்றி நான்கூற எதுவும் இல்லை.
அன்புமணி தன்னிடம் ஆசிர்வாதம் வாங்கவில்லை. அவர் எங்கு சென்றாலும் இரு கேமராமேனை உடன் அழைத்து சென்றுவிடுவார்” என குறிப்பிட்டார்.
இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்படுமா என்ற கேள்விக்கு, “போக போக தெரியும் நாளை பொதுக்குழுவில் முக்கிய முடிவு வெளியாகும். எனது தனிச்செயலாளர் சாமி நாதன் மற்றும் எனக்காக பணி செய்பவர்களை மிரட்டி கொலை மிரட்டல் வந்திருக்கிறது. கொலை மிரட்டல் விடுத்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க டி ஜி பி அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது. சாமிநாதன் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
