இந்தியாவில் பெண் தொழிலாளர்களில் 78% பேருக்கு எந்தவிதமான சமூகப்பாதுகாப்பும் இல்லை. 15% க்கும் குறைவானவர்களுக்கே ஊதியத்துடன் கூடிய விடுப்புவசதி கிடைக்கிறது. விடுப்பு எடுக்க முடியாத ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் விடுப்புக் கொள்கையால் என்ன பலன்?
அங்கிதா ஜெயின்
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “மாதவிடாய் விடுப்புக் கொள்கை 2025இன் மூலம் கர்நாடகா முழுவதும் உள்ள பெண் ஊழியர்களுக்கு இனி மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும்…” என்று ‘X’ சமூக ஊடகத்தில் பதிவிட்டபோது, சமூக ஊடகங்களில் பாராட்டு மழை பொழிந்தது. கர்நாடகச் சட்ட ஆணையத்தின் 62ஆவது அறிக்கை, மாதவிடாய் விடுப்பு மற்றும் சுகாதாரம் மசோதா, 2025 மூலம் பணியிடங்களிலும் நிறுவனங்களிலும் ஊதியத்துடன் கூடிய விடுப்பும் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களையும் வழங்குவதாக உறுதியளிக்கிறது. இதைச் செய்தியாகப் படிக்கையில் நன்றாக இருக்கலாம். ஆனால் படிப்பதற்கு அல்லது கேட்பதற்கு நன்றாக இருக்கும் வரிகள் அனைத்தும் சிறந்த கொள்கையாக இருக்க வேண்டியதில்லை.
கர்நாடகத்தின் பத்திரிகைச் செய்திகள், இந்தக் கொள்கையால் பயனடையக்கூடியவர்கள் “லட்சக்கணக்கானோர்” (அதிகாரப்பூர்வமாக சுமார் 50 லட்சம் பெண்கள் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது) என்று அடையாளம் காட்டுகின்றன. ஆனால், இந்தக் கொள்கையின் தாக்கமும் அதைச் செயல்படுத்துவதற்கான தர்க்கமும் முறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்டுள்ளன. பிதரில் பீடி சுற்றும் தொழிலாளர்களின் நிலை என்ன? பெங்களூருவின் வீதிகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள்? குடகில் நெல் நாற்றுகளைப் பிடுங்கி நடும் பணியாளர்கள்? மார்த்தா நஸ்பாம் தனது பெண்களும் மனிதவளர்ச்சியும் (Women and Human Development) என்ற புத்தகத்தில் எழுதுவது போல, நீதியின் அளவுகோல் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதல்ல, மாறாக அனைவருக்கும் கண்ணியத்துடன் வாழும் உரிமை உள்ளதா என்பதே ஆகும்.

மாநில சட்ட ஆணையத்தின் ஆலோசனைகள், ‘தொழிலாளி’ எனக் கணக்கிடப்படுபவர்கள் யார் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் நகர்ப்புறப் பெண்ணிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக்கு அழைக்கப்பட்டார்கள். ஆனால் வீட்டு வேலை செய்பவர்கள், தூய்மைப் பணியாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோர் அழைக்கப்படவில்லை.
ஜப்பான் 1947இல் மாதவிடாய் விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியபோது, 1% க்கும் குறைவான உழைக்கும் பெண்களே அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். மேலும், பூர்ணா பானர்ஜி, தேபோஜியோதி மசூம்டர், ஸ்ரேயா பிஸ்வாஸ் ஆகியோரின் 2023ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வுக் கட்டுரை, 2017 மகப்பேறு நலன் (திருத்தம்) சட்டம், மகப்பேறு விடுப்பை 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக நீட்டித்த பிறகும், சிறிய வர்த்தக அமைப்புகளின் முதலாளிகள் பெண்களை வேலைக்கு அமர்த்தத் தயங்கியதால், பெண் தொழிலாளர் பங்கேற்பில் சரிவு ஏற்பட்டதை வெளிப்படுத்துகிறது. இதே காரணிகள் மாதவிடாய் விடுப்புக் கொள்கையிலும் திரும்ப நிகழ வாய்ப்புள்ளது.

உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி 2024 அறிக்கையின்படி, இந்தியா 146 நாடுகளில் 129வது இடத்தில் உள்ளது. கடுமையான ஊதிய இடைவெளியைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் பாலின அடிப்படையிலான விடுப்புகள், பொருளாதாரப் பாகுபாட்டைத் தீர்ப்பதற்குப் பதில் மேலும் ஆழப்படுத்தலாம். அமைப்பு ரீதியான சீர்திருத்தத்திற்குப் பதிலாக, தனிநபர்களுக்கான மாதவிடாய் விடுப்பைக் கருத்தில் கொள்வதன் மூலம், கர்நாடகா உரிமைகளை வழங்குவதற்குப் நிவாரணம் அளிக்க முன்வந்துள்ளது.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) சமீபத்திய பாலின முறைசாரா அறிக்கைப்படி, இந்தியாவில் பெண் தொழிலாளர்களில் 78% பேருக்கு எந்தவிதமான சமூகப் பாதுகாப்பும் இல்லை. 15% க்கும் குறைவானவர்களுக்கே ஊதியத்துடன் கூடிய விடுப்பு வசதி கிடைக்கிறது. விடுப்பு எடுக்க முடியாத ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் விடுப்புக் கொள்கை என்ன மதிப்பைக் கொடுக்கப் போகிறது?
இதில் உள்ள முரண்பாடு கூர்மையானது: ‘சுகாதாரம்’ என்று அழைக்கும் ஒரு சட்டம், இன்றும் அழுக்கு நிறைந்த கழிப்பறைகளிலோ அல்லது திறந்த வெளியிலோ சானிட்டரி நாப்கின்களை மாற்றும் லட்சக்கணக்கான பெண்களைப் புறக்கணிக்கிறது.
NFHS-5 (2021) அறிக்கை, 1992ஆம் ஆண்டு முதல் மாதவிடாய் விடுப்பைக் கொண்டிருக்கும் ஒரே மாநிலமான பிகாரில், 59.7% பெண்கள் மட்டுமே சுகாதாரமான பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று வெளிப்படுத்தியது. இந்தக் கொள்கை மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலோ அல்லது பெண்களின் பணியாளர் பங்கேற்பிலோ கவனம் செலுத்தவில்லை.

கர்நாடகா தன்னுடைய நடவடிக்கையை அமைப்பு ரீதியான நீதியாக மாற்ற விரும்பினால், பின்வருவனவற்றைச் சேர்க்க வேண்டும்:
- மாநில தியுதவிபெறும் ஊதிய இழப்பீடு: தினக்கூலி பெறுபவர்களுக்கும் முறைசாராத் தொழிலாளர்களுக்கும் மாநில நிதியுதவியுடன் கூடிய ஊதிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
- சமூக மாதவிடாய் சுகாதார உள்கட்டமைப்பு: பொதுப் பணியிடங்களான பேருந்து நிலையங்கள், அங்கன்வாடிகள், பண்ணைகள் போன்ற இடங்களில் கழிப்பறைகள், முறையான அப்புறப்படுத்தும் அமைப்புகள், வலியைச் சமாளிப்பதற்கான வசதிகள் ஆகியவை இருப்பதை இது உறுதி செய்யும்.
- வெளிப்படையான தடை: பணியமர்த்தலிலும் பதவி உயர்வுகளிலும் மாதவிடாய் விடுப்புப் பதிவுகளைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்யாவிட்டால், கர்நாடகாவின் கொள்கை, சமூகவியலாளர் நிவேதிதா மேனன் கூறுவதுபோல, “அரசுப் பெண்ணியம்” ஆக மாறக்கூடிய அபாயம் கொண்டது. இது ஆணாதிக்கத்தின் அடித்தளங்களை மாற்றாமல், நவீனமாகத் தோற்றமளிக்கும் பாவனையாக மட்டுமே இருக்கும். இந்தியப் பெண்ணியம் என்பதே “அதிகாரம் பெற்றவர்களுக்கு இடையே, பிறருக்கு அதிகாரம் அளிப்பது குறித்த உரையாடல்” என்று சொல்லிவிடலாம்… உரிய மாற்றங்களைச் செய்து அனைத்துத் தரப்புப் பெண்களையும் உள்ளடக்கவில்லையெனில், கர்நாடகாவின் மாதவிடாய் விடுப்புக் கொள்கையும் அதுபோலவே ஆகிவிடும்.
கட்டுரையாளர்:
அங்கிதா ஜெயின், சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள மகாராஷ்டிரா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.
நன்றி: தி டெலிகிராஃப்
