மருத்துவர் Vs நோயாளிகளின் பிரச்சினை கொலைகதையாகி வரும் நிலையில், மருத்துவமனையில் நோயாளிகளின் அடிப்படை உரிமைகள் குறித்துத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. அந்த வகையில் மெடிக்கல் ரைட்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன்ஸ் சொல்லும் நோயாளிகளின் உரிமைகள் இதோ…
ஒவ்வொரு நோயாளிக்கும், அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட வேண்டும். அந்த நோய், அதற்கான காரணம், அதற்கான சிகிச்சைகள் என எல்லாவற்றையும் மருத்துவர் அவருக்கு விளக்க வேண்டும்.
அதில் நோயாளிக்கு எந்தச் சந்தேகம் வந்தாலும், எத்தனை முறை கேள்வி கேட்டாலும் கோபப்படாமல் பொறுமையாக, நோயாளிக்குப் புரியும்படியான மொழியில் எளிமையாக விளக்க வேண்டியது மருத்துவரது முக்கியமான கடமை.
சிகிச்சை எடுக்கும் மருத்துவமனையின் நம்பகத்தன்மை, சிகிச்சையளிக்கும் மருத்துவரின் அனுபவம் மற்றும் திறமைகள் குறித்துத் தெரிந்துகொள்ளும் உரிமையும் நோயாளிக்கு உண்டு.
நோயாளியின் கேஸ் ஹிஸ்டரி, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் குறித்த தகவல்களை மருத்துவமனை தரப்பிலிருந்து கட்டாயம் கொடுக்க வேண்டும்.
அதைக் கேட்டுப் பெறும் உரிமை நோயாளிக்கு உண்டு. நோயாளிக்குச் செய்யப்பட வேண்டும் என மருத்துவர் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்படும் சோதனைகள், சிகிச்சைகளுக்கு முதலில் நோயாளி சம்மதம் தெரிவிக்க வேண்டும்.
சம்மதம் அளிக்கும் நிலையில் நோயாளி இல்லாதபட்சத்தில், அவரின் உறவினர்கள், பாதுகாவலர்களின் சம்மதத்தோடு தான் மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
அந்தச் சிகிச்சையின் தன்மை, அதிலுள்ள ரிஸ்க் குறித்தும் நோயாளிக்கு மருத்துவர் விளக்க வேண்டும். நோயாளியின் பிரச்சினை குறித்தும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் 100 சதவிகிதம் ரகசியம் காக்கும் கடமை மருத்துவருக்கு உண்டு.
நோயாளியின் சம்மதம் இன்றி அந்தத் தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது. பெண் நோயாளிகள் தங்களை ஆண் மருத்துவர் பரிசோதிக்கும்போது பெண் மருத்துவர் அல்லது பெண் செவிலியர் உடன் இருக்க வேண்டும் என கேட்டுப் பெறலாம்.
நோயாளியை மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்த வேண்டியது மருத்துவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினரின் அடிப்படை கடமை.
நோயாளியை ஒருமையில் அழைப்பது, தரமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவதை எல்லாம் எதிர்க்கும் உரிமை நோயாளிக்கு உண்டு.
கன்சல்ட்டேஷன் கட்டணம், பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் குறித்து முன்பே தெரிந்துகொள்ளும் உரிமை நோயாளிக்கு உண்டு.
நோயாளியின் பாலினம், சாதி, மதம், பாலியல் விருப்பம், பேச்சு வழக்கு, புவியியல் மற்றும் சமூகப் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் எந்த வேறுபாட்டையும் காட்டாமல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
ஒருவேளை அந்த நோயாளிக்கு ஹெச்ஐவி தொற்று, சில ரகசிய நோய்கள் இருந்தாலும் சிகிச்சையில் பாகுபாடு காட்டக்கூடாது.
மாற்று மருத்துவம் மற்றும் நிர்வாக விருப்பங்களைத் தேர்வு செய்யும் உரிமை நோயாளிக்கு உண்டு. சிகிச்சையை மறுக்கும் உரிமையும் இதில் அடக்கம்.
தனக்கு விருப்பமான பார்மசியில் மருந்துகளை வாங்கவும், தனக்கு வசதியான லேபில் பரிசோதனைகளைச் செய்து கொள்ளவும் நோயாளிக்கு உரிமை உண்டு.
வழங்கப்பட்ட சிகிச்சையின் தரத்தில் ஏதேனும் குறை இருந்தால் அது குறித்து மருத்துவரிடமோ, மருத்துவ நிர்வாகத்தினரிடமோ புகார் செய்யவும், அதற்கான நிவாரணம் பெறவும் நோயாளி மற்றும் அவரின் பாதுகாவலருக்கு உரிமை உண்டு.
தேவைப்பட்டால் மருத்துவ மற்றும் கிராம சுகாதார சேவைகள் பிரிவின் இணை இயக்குநரிடமும் புகார் அளிக்கலாம்.
சிகிச்சையின் எந்தக் கட்டத்திலும் மருத்துவமனையிலிருந்து வெளியேற, (Against Medical Advice) சிகிச்சையிலிருந்து விடுபட நோயாளிக்கு உரிமை உண்டு.
அவரை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் தங்கவைக்க மருத்துவரோ, மருத்துவமனை நிர்வாகமோ முயற்சி செய்யக் கூடாது. இது குறித்து சம்பந்தப்பட்ட நோயாளியோ, அவரின் அட்டெண்டரோ Against Medical Advice என்ற படிவத்தில் ஒப்புதல் கையெழுத்திட வேண்டியது அவசியம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: க்ரீம் ஆஃப் வெஜிடபிள் சூப்
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: மூலம்!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: விசாகம்!
தஞ்சாவூரில் கொடூரம்… வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: சித்திரை!
மருத்துவரே இல்லாமல் செயல்படும் ஆழியாறு ஆரம்ப சுகாதார நிலையம்!