குடிநீர் முதல் பார்க்கிங் வரை… தவெக மாநாட்டின் முக்கிய ஏற்பாடுகள் என்னென்ன? – முழு விவரம்!

Published On:

| By vanangamudi

What are the key provisions of the TVK maanaadu - Full details!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு மதுரையில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. இதனையடுத்து முதல் மாநாட்டில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு, பல முறையான முன்னேற்பாடுகள் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளன.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விமரிசையாக நடந்தது.

ADVERTISEMENT

எனினும் அதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற நிலையில் போதிய குடிநீர், உணவு, கழிவறை, மருத்துவ வசதி இன்றி பெரிதும் சிரமப்பட்டனர்.

குறிப்பாக விக்கிரவாண்டி மாநாட்டில் தொண்டர்கள் குடிப்பதற்கு வசதியாக தண்ணீர் தொட்டிகள் முந்தைய நாள் இரவே நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் காலை முதலே அங்கு தொண்டர்கள் குவிந்த நிலையில் சில மணி நேரங்களில் அவை தீர்ந்து போனது. மேலும் கூட்டம் காரணமாக மீண்டும் தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியவில்லை. மேலும் கூட்டத்தை பயன்படுத்தி மாநாட்டிற்கு வெளியே அதிக விலைக்கு தண்ணீர் விற்கப்பட்டதும் குற்றச்சாட்டாக எழுந்தது. இதனால் வெயிலில் வாடி வதங்கிய தொண்டர்கள் குடிக்க தண்ணீர் இன்றி பெரும் இன்னலுக்கு உள்ளாகினர். சிலர் மயங்கி விழுந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தற்போது மதுரை மாநாட்டில் அந்த குறைகளை எல்லாம் தீர்க்கும் வகையில் தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஒரு மாத காலமாக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

1 லட்சத்து 70 ஆயிரம் இருக்கைகள்!

விக்கிரவாண்டி மாநாட்டு அரங்கத்தில் மொத்தம் 90 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அதன் பின்புறத்தில் 40 ஆயிரம் பேர் நிற்கும் அளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதவிர மாநாட்டு அரங்கத்திற்குள் இரு பக்கமும் 1 இலட்சம் பேரும், வெளியே 1 இலட்சத்து 50 ஆயிரம் பேரும் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் மாநாட்டுக்கு வந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 5 முதல் 7 லட்சம் பேர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் மதுரையில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் நாளை நடைபெற உள்ள மாநாட்டு அரங்கம் 60 பகுதிகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

மாநாட்டு நிகழ்வுகளை இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் மற்றும் நிற்பவர்கள் என அனைவரும் வசதியாக கண்டுகளிக்கும் வகையில்140 எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அதனை யாரும் நெருங்காதவாறு சுற்றி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டிற்கு இந்த முறை 4 முதல் 5 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதனை கணக்கிடும் வகையில் அதற்காக தனியே வருகையை பதிவு செய்யும் வகையில் ஸ்கேன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

80 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தலாம்!

மாநாட்டிற்கு வரும் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த இரண்டு இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் 60,000 வாகனங்களையும், மற்றொரு இடத்தில் 20 ஆயிரம் வாகனங்களை நிறுத்த முடியும். தமிழ்நாட்டின் பல வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள், பார்க்கிங் பகுதிக்கு எப்படி செல்லவேண்டும் என்பது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பே வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதனை கண்காணிக்க, அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

8500 மீட்டருக்கு குடிநீர் குழாய்!

குடிநீர் வசதியை பொறுத்தவரை, மாநாடு அரங்கத்திற்குள் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வழியில் மாநாட்டு அரங்கம் முழுவதும் 8500 மீட்டருக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீரை உந்தி செலுத்த வசதியாக 4 சிறப்பு மோட்டார்கள் பெரும் பொருட்செலவில் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர 10 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் தொண்டர்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று கழிவறைக்கு நீரை கொண்டு செல்லும் வகையில் தனி குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட திண்பண்டங்கள் வழங்கப்பட உள்ளது.

20 மினி கிளினிக்குகள்!

மருத்துவ வசதிகளை பொறுத்தவரை மாநாட்டின் இரு பக்கமும் தலா 10 முகாம்கள் என்ற வகையில் மொத்தம் 20 மினி கிளினிக்குகள் நிறுவப்பட்டுள்ளன. அதில் 600க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினரும், 45க்கும் மேற்பட்ட ஆம்பலன்ஸும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன. மாநாட்டு அரங்கத்திற்குள் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் 3 அவசர வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொண்டர்களின் உதவிக்காக அரங்கில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் தண்ணீர் பிரச்சனையை சரி செய்ய ஒரு பிளம்பர் உட்பட 15 தன்னார்வலர்கள் இருப்பார்கள்.

800 அடி நீள நடைபாதை!

மாநாட்டு அரங்கத்திற்கு நடுவே, தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் நடந்து செல்வதற்கு ஏற்ற வகையில் 10 அடி உயரம், 800 அடி நீளத்தில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் மாநாட்டில் பங்கேற்க வரும் விஐபிக்களுக்காக தனி கேரவன்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

போலீசார் மற்றும் பவுன்சர்கள்!

தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்பார்வையில் மதுரை ஐஜி தலைமையில் டிஐஜி, எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், போலீசார் உட்பட 4,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். மேலும் அதிகளவில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஆண், பெண் பவுன்சர்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட உள்ளனர். இது தவிர மாநாட்டு பகுதி முழுவதும் ட்ரோன் மற்றும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் முழுமையாக கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share