இன்று நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் கல்வி நிதி,100 நாள் வேலை திட்ட நிதி ஆகியவை தொடர்பாக மழைக்கால கூட்டத் தொடரில் குரல் எழுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. What are the issues that DMK MPs should raise
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி தொடங்க உள்ளது.
இதையொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில், இன்று (ஜூலை 18) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் “தி.மு.க. மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் என்னென்ன பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
“பிரதமர் மோடி மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்களிடையே திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான முதலமைச்சர் கடந்த 24.5.2025 அன்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்திய “காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளைச் சுத்தம் செய்து மீட்கும் புதிய திட்டம்”, “ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு, அனைவருக்கும் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலப் பெயர்களைச் சூட்டுதல்”, “மும்மொழிக் கொள்கையைத் திணித்து, பின்னர் மகாராஷ்டிரா மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்து பின்வாங்கினாலும், அது பா.ஜ.க. ஆளும் மாநிலம் என்பதால் எஸ்.எஸ்.ஏ. கல்வி நிதியை அளித்து, தமிழ்நாட்டுக்கு எஸ்.எஸ்.ஏ. கல்வி நிதியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மறுப்பது”,
“ஒன்றிய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 விழுக்காடு வரிப் பகிர்வு”, “15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி தர வேண்டிய 41 விழுக்காடு வரி வருவாய் பங்கிற்குப் பதிலாக 33.16 விழுக்காடு பங்கு மட்டுமே அளித்து மாநிலங்களுக்கு இழைக்கப்படும் நிதி அநீதி”, “ஒன்றிய அரசும் – மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏற்பட்டு வரும் நிதி நெருக்கடி” ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் அழுத்தமாக எடுத்துரைப்பதுடன்,
தமிழர்களின் தனித்துவமிக்க பண்பாட்டை அறிவியல்பூர்வமாக நிரூபித்த இரும்பின் தொன்மை குறித்து ஒன்றிய அரசு மவுனம் காப்பது, கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுப்பது, தமிழ்நாட்டிற்குரிய ரயில் திட்டங்களுக்கு நிதியளிக்காமல் வஞ்சிப்பது, உழைக்கும் கிராமப்புற மக்களுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிதியை முறையாக வழங்காமல் தாமதிப்பது, மாநிலத்தின் நிதி தன்னாட்சிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கான நிதியுரிமையைப் பறிப்பது எனத் தமிழ்நாடு தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து, நமக்கான உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்பதுடன்,
ஜம்மு-காஷ்மீருக்கு மாநிலத் தகுதி கொடுக்காமல் தட்டிக்கழிப்பது, வாக்காளர் சீர்திருத்தம் என்ற பெயரில் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கோடிக்கணக்கானவர்களின் வாக்குரிமையைப் பறித்து ஜனநாயகத்தின் ஆணிவேரில் வெந்நீரை ஊற்றும் நோக்கில் தன்னாட்சிப் பெற்ற தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துவது,
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து கைது செய்யப்படுவது, கச்சத்தீவு மீட்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது, திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பது, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளைப் புறக்கணித்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது, ஏழை – எளிய மக்களைப் பாதிக்கும் ரயில் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்பிடவும்,
தமிழ்நாட்டின் நிதியுரிமை – மொழியுரிமை – கல்வியுரிமை ஆகியவற்றுடன் இந்தியாவின் கூட்டாட்சி உரிமை உள்ளிட்ட அனைத்திற்காகவும் வருகின்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.க்கள் குரல் எழுப்பிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. What are the issues that DMK MPs should raise
