Benefits of drinking tea
தேநீர், உலகளவில் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்று, உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீரில் உள்ள நச்சு உலோகங்களை அகற்றவும் உதவும் என்று புதிய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
பலருக்கும் காலையில் ஒரு கப் தேநீர் குடிப்பது அன்றைய நாளைத் தொடங்குவதற்கு அவசியமாக உள்ளது. கால மாற்றத்தில் நம் வீட்டிற்கு வரும் விருந்தினரிடம் நாம் முதலில் கேட்கும் கேள்வி டீயா? காஃபியா? என்பதுதான்.. அந்த அளவிற்கு நமது விருந்தோம்பலில் டீ க்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் பெரும்பாலான எளிய மனிதர்களுக்கு சில நேரங்களில் டீ மட்டுமே கூட ஒரு நேர உணவாக இன்றளவும் இருந்து வருகிறது.
டீயில் முக்கியமாக பாலிபினால்கள், காஃபின் மற்றும் சில அமினோ அமிலங்கள் உள்ளன. பாலிபினால்கள், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. காஃபின், ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. கிரீன் டீ, பிளாக் டீ, பால் டீ போன்ற வெவ்வேறு வகை டீகளில் வெவ்வேறு அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
டீ குடிப்பதால் எவ்வளவு நன்மை இருந்தாலும் எந்த அளவில் குடிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். அதிகப்படியான டீ நுகர்வு செரிமான பிரச்சனைகளை உருவாக்கும். மேலும், காஃபின் அதிக அளவு, மற்றும் மற்ற உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் தற்போது நாம் குடிக்கும் தேநீர் குடிநீரில் உள்ள ஈயம், காட்மியம் போன்ற நச்சு உலோகங்களை அகற்ற உதவும் என்று சுவாரஸ்யமான தகவல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பேராசிரியர் வினயக் பி. டிராவிட் மற்றும் அவரது மாணவர் பெஞ்சமின் ஷின்டெல் ஆகியோர் மேற்கொண்ட இந்த ஆய்வு, ACS Food Sciences & Technology இதழில் பிப்ரவரி 24 அன்று வெளியிடப்பட்டது.
ஆய்வில், குரோமியம், துத்தநாகம், செம்பு, அலுமினியம், ஈயம் மற்றும் காட்மியம் போன்ற உலோகங்களைக் கொண்ட நீர்க்கரைசல்களை உருவாக்கி, அதில் தேநீர் இலைகள் அல்லது வெவ்வேறு வகையான டீ பேக்குகளைச் சேர்த்து பரிசோதனை செய்யப்பட்டது.
இவற்றை சில வினாடிகள் முதல் 24 மணி நேரம் வரை ஊறவைத்து, பின்னர் நீரில் எஞ்சிய உலோகங்களின் அளவை கணக்கிட்டனர்.
இந்த ஆய்வில் ஒரு சாதாரண கப் தேநீர் (3-5 நிமிடங்கள் ஊறவைத்தது) குடிநீரில் உள்ள ஈயத்தை சுமார் 15% அகற்ற முடியும் என்பது தெரியவந்தது.
மேலும் செல்லுலோஸ் டீ பேக்குகள் உலோகங்களை உறிஞ்சுவதில் சிறப்பாகச் செயல்பட்டன, ஆனால் பருத்தி மற்றும் நைலான் பைகள் பெரிய அளவில் உறிஞ்சவில்லை.
மேலும் பிளாக்டீயில் இலைகள், குறிப்பாக பொடியாக அரைக்கப்பட்டவை, முழு இலைகளை விட உலோகங்களை உறிஞ்சுவதில் சற்று சிறப்பாகச் செயல்பட்டன. அதேசமயம் நாம் ஊறவைக்கும் நேரம் மிகவும் முக்கியமானது. நீண்ட நேரம் ஊறவைப்பது உலோகங்களை அகற்றுவதை அதிகரிக்கிறது என்பதும் கண்டறியப்பட்டது.
ஆய்வில் பங்கேற்காத ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விரிவுரையாளர் காந்தா ஷெல்கே, இந்த ஆய்வை “புத்திசாலித்தனமானது” என்று பாராட்டினார். “தேநீர் குடிப்பது மூலம் நச்சு உலோகங்களின் தாக்கத்தை எளிமையாகவும், வாழ்க்கை முறை மாற்றங்கள் இல்லாமலும் குறைக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
