மிக்ஜாம் புயல் கரையை கடந்தாலும் அது ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் சென்னை வாசிகள் மீளவில்லை. வேளச்சேரி, மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் மேற்கு தாம்பரம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து உயர்ந்து கொண்டே இருந்ததால், அதில் வசித்து வந்த ஒரு தாயும் அவரது இரு மகன்களும் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
நேரம் ஆக ஆக தண்ணீர் வீடே மூழ்கும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் தனது பிள்ளைகளை காப்பாற்ற நினைத்த அந்த தாய் இருவரையும் தூக்கி சாமான்களை வைக்கும் பரண் (ஸ்லாப்) மேல் அமரவைத்துவிட்டார்.
தானும் உயிர் பிழைக்க வீட்டில் இருந்த சிலிண்டர் மேல் ஏறி நின்று அந்த பரணை பிடித்து கொண்டார். உள்ளிருந்தபடி உதவி கேட்டு கத்தியும் யாரும் உதவ வரவில்லை.
இதனால் மூன்று பேரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வீட்டினுள் விடிய விடிய இருந்துள்ளனர். சிலிண்டர் மேல் நின்ற போதும், அந்த பெண்ணின் கழுத்தளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தது.
இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இன்று (டிசம்பர் 5) காலை வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்த தாயையும், அவரது இரு பிள்ளைகளையும் மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.
இதுதொடர்பான வீடியோவை நியூஸ் தமிழ் சேனல் 24*7வெளியிட்டுள்ளது.
அதில் சிறுவன் ஒருவன், `உள்ளே இருந்திருந்தால் செத்து போயிருப்போம். எங்க அப்பாவை காணோம், எங்களை விட்டுவிட்டு எங்கேயோ தனியா போய்ட்டாங்க` என்று கூறுகிறார்.
அந்த தாய் கூறுகையில், `எனது வீட்டுக்காரர் நேற்று வீட்டை விட்டுச் சென்றார். இன்னும் வரவில்லை. வீட்டுக்குள்ளேயே இருங்கள். தண்ணீர் எல்லாம் வராது என்று சொல்லிவிட்டு சென்றார்.
இந்த பகுதியில் ஒரு படகு சென்றது. அவர்களை நோக்கி கையசைத்தோம். ஆனால் வரவில்லை. ஒரு அண்ணா மட்டும், இங்கு வந்து நீந்தி வாங்க என்றார். ஆனால் வரமுடியவில்லை. சின்ன பிள்ளைகள் மூழ்கிவிட்டால் என்ன செய்வது என்று மேலே தூக்கி அமரவைத்துவிட்டு, நான் சிலிண்டர் மேல் ஏறி நின்று கொண்டேன். ரேஷன் அரிசி எல்லாம் நீரில் மூழ்கிவிட்டது. நேற்று காலையில் சாப்பிட்டது. அதன் பிறகு சாப்பிட கூட இல்லை` என கண்ணீர் மல்க கூறினார்.
இந்த வீடியோ காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு!
எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்… ஆனால் மீண்டும் உள்ளே வர முடியுமா?