மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (மார்ச் 1) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.
கடந்த 28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டி, 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டு நிகழ்ச்சியை தொடர்ந்து மகாராஷ்டிரா சென்ற பிரதமர் இன்று மேற்குவங்கம் சென்றுள்ளார். அம்மாநிலத்தில் ரூ.12,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மோடி, மேற்கு வங்க ராஜ்பவனுக்கு சென்றார். தொடர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜியும் ராஜ்பவனுக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இந்தியா கூட்டணியில் இருக்கும் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்தது தேசிய அரசியலில் கவனம் பெற்றது.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “மரியாதை நிமித்தமாகத்தான் பிரதமரைச் சந்தித்தேன். குடியரசுத் தலைவரோ, பிரதமரோ, ஒரு மாநிலத்திற்குச் சென்றால், அவர்களை முதல்வர் சந்திக்க வேண்டும் என்பது நெறிமுறை. அதனடிப்படையில் பிரதமரைச் சந்தித்தேன். இந்த சந்திப்பில் எந்த அரசியலும் பேச நான் வரவில்லை. ஏனெனில் இது அரசியல் சந்திப்பு இல்லை. மாநிலத்தின் பிரச்சினைகளை நான் அவரிடம் தெரிவித்தேன்” என கூறினார்.
முன்னதாக மேற்கு வங்க மாநிலம் ஹுக்ளி மாவட்டத்தின் ஆரம்பாக் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மம்தா பானர்ஜியும், இந்தியா கூட்டணியையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கானஸ் மாவட்டம் சந்தேஷ்காலி தீவுப் பகுதியைச் சேர்ந்தவர் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான். சந்தேஷ்காலி தொகுதி ஒருங்கிணைப்பாளரான இவர் மீது, நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை என பல்வேறு வழக்குகள் உள்ளன.
குறிப்பாக, இரவில் கட்சி அலுவலகத்துக்கு பழங்குடியின பெண்களை வரச் சொல்லி பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஷேக் ஷாஜகான் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் கைது செய்யப்படாததற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்துதான் ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டார்.
இவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 5ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இப்படி பல்வேறு விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சிக்கியிருக்கும் நிலையில், இதைவைத்து இன்றைய பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜியையும், மேற்கு வங்க அரசையும் கடுமையாக விமர்சித்திருந்தார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலக்ஷன் ஃப்ளாஷ்: கமல் போட்டியிடும் தொகுதி எது?
எலக்ஷன் ஃபிளாஷ்: கள்ளக்குறிச்சி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவா? ஸ்டாலின் முடிவு என்ன?